For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடிய விடிய நடத்திய பீரங்கித் தாக்குதலில் 2000 தமிழர்கள் பரிதாப சாவு

By Staff
Google Oneindia Tamil News

Lanka map
முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் நேற்று இரவு முழுவதும் இலங்கை ராணுவம் மிகக் கொடூரமான முறையில் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. இதில் 2000 அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அந்தப் பகுதியே ரத்த வெள்ளமாக காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான முறையில், மிகக் கொடூரமான முறையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று இரவு 7 மணிக்கு இலங்கைப் படைகள் தங்களது பீரங்கித் தாக்குதலை தொடங்கின.

பீரங்கிகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உள்ள அனைத்து விதமான கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது இலங்கை ராணுவம்.

இதில் பதுங்கு குழிக்குள் மறைந்து கொண்ட அப்பாவித் தமிழர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த பலர் தூங்கிய நிலையில் பிணமானார்கள்.

பல உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து போய் விட்டது. காயமடைந்தவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆங்காங்கே விழுந்து கிடக்கிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கோரி அவர்கள் அழுது புலம்பும் காட்சி இதயமற்றவர்களையும் இளக வைக்கும் வகையில் உள்ளது.

சாலைகள் அனைத்திலும் பிணங்களாக காணப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியாத அளவுக்கு இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று காலை வரை 1,112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் படிப்படியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவர்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடல்களில் 67 பேர் சிறுவர்கள்.

ராணுவத் தாக்குலில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இதனால் சிகிச்சை பெறவும் வழியில்லாத நிலை உருவாகி வருகிறது.

போரை நிறுத்த வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதையடுத்து இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசியது. இதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதையடுத்து போர் ஓய்ந்து விட்டது என முதல்வர் கருணாநிதியும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஆனால் எந்த வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். அதை யாரும் தடுக்க முடியாது என சில நாட்களுக்கு முன்பு கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார். மேலும், தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி மொத்தமாக அழிக்க இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், விடிய விடிய பீரங்கிகள் மற்றும் சகல விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தி 2000க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்திருக்கிறது இலங்கை ராணுவம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X