For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு-களத்தில் 824 வேட்பாளர்கள், 40% சாவடிகள் பதட்டமானவை

By Staff
Google Oneindia Tamil News

Naresh Gupta
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்பட நாடு முழுவதும் 86 தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.

இதில் உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 11, பஞ்சாபில் 9, உத்தர்காண்டில் 5, இமாச்சலப் பிரதேசத்தில் 4, காஷ்மீரில் 2, சண்டிகாரில் 1 தொகுதி ஆகியவை அடக்கம்.

தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 16 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 40.21 சதவீத சாவடிகள் பதட்டமானவை. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தவும், 15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் உள்ளார்கள்.

26 தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் உள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மற்ற தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும்.

மொத்தம் 1.10 லட்சம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

முக்கியமான இடங்கள், கடலோர பாதுகாப்பு பணி, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் உள்ளவர்களை சேர்த்தால் மொத்தம் 90,231 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுகிறார்கள் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

இதற்காக, தமிழகத்தில் 58 ஆயிரத்து 257 போலீசார் போக, மீதமுள்ள இடங்களுக்கு 20 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர், 8 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மற்றும் ஆயிரம் ஓய்வுபெற்ற போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களுடன் மத்திய துணை ராணுவத்தினர் சுமார் 15,000 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள துரித தகவல் தொடர்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, வாக்குச்சாவடிகள், மண்டல அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகங்கள், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தினுடனும், இந்திய தேர்தல் ஆணையத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், இந்திய தேர்தல் ஆணையம், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் தேவையான தகவலை கேட்டுப் பெற முடியும்.

வாக்குப்பதிவின்போது, எந்த ஆவணத்தைக் கொண்டு ஓட்டு போடப்பட்டது என்பது தொடர்பான பதிவேட்டை முறையாக பராமரிக்கப்படாத பட்சத்தில், அதற்கு பொறுப்பான வாக்குச்சாவடி தலைமை அதிகாரி-2 மட்டுமல்லாது, கண்காணிப்பு அதிகாரி, தேர்தல் அதிகாரி உள்பட பல்வேறு அதிகாரிகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

கடைசி வாக்காளர் ஓட்டு போட்டு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டை, தேர்தல் ஏஜெண்டு முன்னிலையில் நிறுத்தி விட வேண்டும். வெறும் புகைப்பட வாக்காளர் அடையாளர் அட்டை மட்டும் இருந்தால் போதாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும் என்றும் அறிவித்துள்ளார் குப்தா.

இதற்கிடையே, தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்தல் தொடர்பான புகார்களை அனைத்து தரப்பினரும் சொல்வதற்கு வசதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புகார்களை 044-25676207 மற்றும் 044-25676208 ஆகிய எண்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல், 044-25676117 என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலமாகவும் புகாரை அனுப்பலாம்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 5 ரோந்து படைகள் வீதம், 1,308 ரோந்து படை களத்தில் இருக்கும். இதோடு கூடுதலாக 4,131 மொபைல் பார்ட்டி போலீசாரும் சுற்றி வருவார்கள். மொபைல் பார்ட்டி பிரிவில் மட்டும் சுமார் 16,500 போலீசார் பணியில் இருப்பார்கள்.

13 ஐ.ஜி.களுக்கும், 16 டி.ஐ.ஜி.களுக்கும், 66 சூப்பிரண்டுகளுக்கும், 122 துணை சூப்பிரண்டுகளுக்கும் அதிரடிப்படை பிரிவுகளுடன் நேரடியாக தேர்தல் பாதுகாப்புப் பணியி் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்லது.

அதோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயார் நிலையில் 100 அதிரடிப்படை போலீசார் வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திலாவது மோதல் மூண்டால் உடனடியாக களமிறக்கப்படுவர்.

தேர்தலை அமைதியாக நடத்தி முடித்திட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் கண்காணிப்பு குழுவினரும் மாறுவேடத்தில் சுற்றி வருவார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாட்ஜுகளும், ஹோட்டல்களும், இதர தங்குமிடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. கடலோர மாவட்டங்கள் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

16ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X