For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய சென்னையில் திமுக-மமக மோதல்: ஹைதர் அலியைத் தாக்க முயற்சி-பலருக்கு அரிவாள் வெட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினருக்கும், மனித நேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே இன்று பெரும் மோதல் மூண்டது. திமுகவினர் சரமரியாக அரிவாள்களால் வெட்டியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். மனித நேய கட்சி வேட்பாளர் ஹைதர் அலியையும் வெட்ட முயன்றனர்.

காவல் நிலையத்திற்குள் ஓடிப் பதுங்கிய மமகவினரும் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கப்பட்டனர். இதைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

தயாநிதி மாறன் திமுக சார்பிலும், மனித நேய கட்சி சார்பில் ஹைதர் அலியும் மத்திய சென்னையில் போட்டியிடுகின்றனர்.

போட்டியிலிருந்து விலகுமாறு தன்னை தயாநிதி மாறன் தரப்பு கேட்டுக் கொண்டதாக முன்னர் ஹைதர் அலி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று மனித நேய மக்கள் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.

திமுகவினர்தான் முதலில் தாக்குதலைத் தொடுத்ததாக கூறப்படுகிறது. சரமாரியான அரிவாள் வெட்டு விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் ஹைதர் அலி தனது கட்சியினரோடு அங்கு வந்தார். அவரையும் வன்முறைக் கும்பல் தாக்க முயன்றது. இதையடுத்து ஹைதர் அலி காவல் நிலையத்திற்குள் புகுந்து தப்பித்தார்.

அவருடன் மமகவினரும் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். ஆனால் உள்ளேயும் புகுந்த வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனித நேயக் கட்சியினரை வெறித்தனமாக தாக்கியது.

இந்த கண்மூடித்தனமான வன்முறையைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினர். போலீஸாரும் பின்னர் வந்து சேர்ந்தனர்.

யாரும் ஓட்டுப் போட வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று போலீஸார் கூறியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பகுதியே தற்போது போர்க்களம் போலக் காணப்பட்டது. தொடர்ந்து பதட்டமும், பீதியும் நிலவுகிறது.

நெல்லையில் திமுக கொடிகள் எரிப்பு...

சென்னையில் நடந்த மோதலை தொடர்ந்து தமுமுகவினர் நெல்லையில் போராட்டம் நடத்தினர். அப்போது திமுக கட்சி கொடிகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து தமுமுகவினர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதிமுக-வி.சி மோதல்: வாக்கு பதிவு எந்திரம் உடைப்பு

அதே போல விழுப்புரம் அருகே அதிமுக-விடுதலைச் சிறுத்தைகள் இடையே வாக்குச் சாவடிக்குள் அடிதடி நடந்தது. இதில் வாக்குப் பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது.

தென்காசி காங். வேட்பாளர் மீது தாக்குதல்:

அதே போல தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளைபாண்டியன் மீது புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர், இடையன்புதூர் என்ற பகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலையடுத்து, வெள்ளைபாண்டியன் பூத்திற்குள் சென்று பார்வையிட்டார்.

அப்போது, புதிய தமிழகம் கட்சியினர் காங்கிரசாஸ் கள்ள ஓட்டு போடப்படுவதாகக் கூறி அவரை தாக்கினர். மேலும், அவரது காரையும் அடித்து நொறுங்கினர்.

மதுரை அருகே காங். தொண்டருக்கு உதை:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவர்பட்டி பகுதியில், வாக்குச் சாவடி அருகே ஓட்டு சேகரித்த காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் எச்சரித்தனர். அப்போசு கனி என்ற தொண்டர் போலீசாரை மிரட்டவே அவரை போலீசார் அடித்து உதைத்தனர்.

வாடிப்பட்டியில் 8 பேருக்கு காயம்...

வாடிபட்டியில் குரங்குதோப்பு பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அங்கு திமுகவை சேர்ந்த சிலர் குடிபோதையில் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர் செய்தனர். அலுவலகத்தில் இருந்த வீரகாளை என்ற அதிமுக தொண்டரை தாக்கினர்.

இதையடுத்து திமுக, அதிமுகவினருக்கு இடைய மோதல் ஏற்பட்டது. இதில் குடிபோதையில் இருந்த திமுகவினர் இருவருக்கும் சரியான அடி விழுந்தது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வாடிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். இந்த விவகாரத்தில் குறைந்தது 8 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சியில் திமுக-அதிமுக மோதல்...

திருச்சி தென்னூரில் உள்ள காயிதே மில்லத் ஆரம்ப பள்ளியில் ஓட்டு போட வந்த சில அதிமுகவினருக்கு ஓட்டு இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிமுகவினர் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பக்கமாக திமுகவினர் வர, அதிமுகவினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் மெல்ல முற்றி, மோதலாக மாறியது. இதையடுத்து போலீசார் இடையில் புகுந்து அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் லேசாக பதட்டம் நிலவியது.

இதன் காரணமாக இன்று காலை முதல் மூன்று மணி நேரத்தி்ல திருச்சி தொகுதியில் வெறும் 16 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

அதே போல் கடலூரில் அதிமுக, திமுகவினர் மோதி கொண்டதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பாலமேடு அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு...

அதே போல் மதுரை பாலமேடு பகுதியில் இருக்கும் வெள்ளையம்பட்டியி்ல் அதிமுக மற்றும் தேமுதிகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு பிரிவையும் சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு கட்சியினரும் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புக்கு வந்த முன்னாள் ராணுவ வீரர் மரணம்

கள்ளக்குறிச்சி தொகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் பிரேம் சுந்தர் (55) என்பவர் காலையில் வாக்குப் பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். ஆனால், டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X