For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழ சிடி ஒளிபரப்பு-சென்னையில் திடீர் மின்தடை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழம் குறித்த சிடியை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது. இதையடுத்து மக்கள் டிவியில் இந்த சிடி ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து மக்கள் டிவி அலுவலகத்தைத் தகர்த்து விடுவோம் என மிரட்டல் வந்தது. தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளில் கேபிள் டிவிகளில் மக்கள் டிவி மாயமானது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவதிகள், இனப்படுகொலை குறித்து பெரியார் தி.க. உள்ளிட்ட சில அமைப்புகள் சிடி ஒன்றை உருவாக்கின. இந்த சிடியை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஈழம் குறித்த சிடியை வழங்கவோ அல்லது பொது இடத்தில் திரையிடவோ எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பளித்தது.

இதையடுத்து நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சியில் இந்த சிடி ஒளிபரப்பானது. அடுத்த சில நிமிடங்களில் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் டிவி அலுவலகத்தை தகர்த்து விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மக்கள் தொலைக்காட்சி சார்பில் புகார் தரப்பட்டது.

இந் நிலையில் துணை ஆணையர், இணை ஆணையர் என உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

ஈழம் குறித்த சிடி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்றனர். ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே தாங்கள் ஒளிபரப்பு செய்வதாக மக்கள் தொலைக்காட்சி செய்திப் பிரிவினர் தெரிவித்தனர்.

இருப்பினும் இதை மறுத்த போலீஸார், ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் வலுக்கட்டாயமாக நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தனர்.

இந் நிலையில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், பெரம்பூர், திரு.வி.க நகர், மைலாப்பூர், அரும்பாக்கம், புதுப்பேட்டை, ராயபேட்டை, அயனாவரம், ராயபுரம், கொடுங்கையூர் உள்பட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மேலும் சாலைகளில் சிக்னல்கள் இயங்காததால் வாகன ஓட்டிகளும் போலீசாரும் குழம்பித் தவித்தனர்.

மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிப்பு...

மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சில மணி நேரங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது. இருப்பினும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் டிவியைக் காண முடியவில்லை.

எதிர்க் கட்சி சதி-கருணாநிதி

இதற்கிடையே தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்கட்சிகளைச் சேர்ந்த விஷமிகளே வேண்டுமென்று மின்தடையை உருவாக்க்கியதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

இந்த மின்தடை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக எதிர்கட்சிகளை சேர்ந்த குண்டர்கள் சிலர், சமூக விரோதிகள், இலாகாவில் இருந்து சில பேர் சதிவேலையில் ஈடுபட்டு மின் தடையை வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

அந்த விஷமிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு செய்துள்ள இந்த விஷமத்தனத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விஷமிகளை அடையாளம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன் என்றார்.

4 பேர் கைது:

இது குறித்து போலீசார் கூறுகையில், முக்கிய மின்சார வயர்களை துண்டித்து வேண்டுமென்றே மின் சப்ளை தடை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த வினோத், அப்பு, கார்த்திக், சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

இந் நிலையில் இந்த வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

திடீர் மின்வெட்டு: ஜெ. சந்தேகம்!

இதற்கிடையே சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தேர்தலுக்கு முதல் நாள் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்த அறிக்கை:

தேர்தலுக்கு முந்தைய நாளான 12-ந் தேதி, சென்னை உள்பட தமிழகம் எங்கும் மின்சார வெட்டு நிகழ்ந்தபோது சமூக விரோதிகள் சிலர் மின்தடையை ஏற்படுத்தியதாக தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.

ஏதோ 3 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்பது போலவும், நேற்று மட்டும் தான் மின்வெட்டு ஏற்பட்டது போலவும் தி.மு.க. அரசு அறிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

இந்த மின் தடையை சமூக விரோதிகள் ஏற்படுத்தியிருப்பதாக தி.மு.க. அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், சமூக விரோதிகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கின்றது என்பது தானே இதன் அர்த்தம்.

தேர்தலுக்கு முந்தைய நாள் அரசே இவ்வாறு அறிவித்து இருப்பது, வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தமிழக வாக்காளப் பெருமக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X