For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவும் பிரபாகரனும்..

By Staff
Google Oneindia Tamil News

Prabakaran and MGR
விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலக நாடுகளின் கண்களில் தீவிரவாத இயக்கமாக பார்க்கப்பட்டாலும் கூட ஆரம்பத்தில் அதன் வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு மிக அதிகம். அந்த இயக்கத்தை ஆதரவளித்து, பயிற்சி அளித்து, நிதியுதவியையும் கொடுத்து ஊக்குவித்தது.

இலங்கையில் இனப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டால், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பூடான் தலைநகர் திம்புவில் இந்தியா, இலங்கை, விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விடுதலைப் புலிகள் தவிர இதர போராளி இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது பிரபாகரன் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை இதர போராளி இயக்கங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன.

இதனால் திம்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சமயத்தில், இலங்கை ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி திரிகோணமலை மற்றும் வவுனியாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டது. இதில் நூற்றுக்கணககான தமிழர்கள் உயிரிழந்தனர்.

போர் நிறுத்தம் முறிந்ததாலும், திம்பு பேச்சுவார்த்தை முறிந்ததாலும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

இதையடுத்து 1986ம் ஆண்டு தமிழக போலீஸார் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடததினர். அவர்களின் தகவல் தொடர்பு சாதனங்ளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைக் கண்டித்து பிரபாகரன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து அனைத்துப் பொருட்களையும் பிரபாகரனிடம் வழங்க இந்திய அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் அவை வழங்கப்பட்டன. பிரபாகரனும் தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

இந்த நிலையில் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜெயவர்த்தனேவிடம் இந்திய அரசு இனப்பிரச்சினை குறித்துப் பேசியது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து, தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் என ஆளுக்கு ஒரு மாகாணாக பிரிக்கலாம் என ஜெயவர்த்தனே தெரிவித்த யோசனை பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரபாகரனை முதல்வராக நியமிப்பதாகவும் ஜெயவர்த்தனே தெரிவித்தார்.

ஆனால் இதை பிரபாகரன் நிராகரித்து விட்டார். ஏற்கனவே வடக்கு, கிழக்காக உள்ள இரு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். முதல்வர் பதவி என்பது என்னை வீழ்த்த விரிக்கப்படும் சதி வலை என்று கூறி விட்டார்.

இந்த நிலையில் தன்னை இந்திய அரசு கைது செய்யக் கூடும் என்று சந்தேகித்த பிரபாகரன் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் ஈழத்திற்குத் திரும்பி விட்டார்.

இதனால் இலங்கைப் பிரச்சினை மேலும் சிக்கலடைந்தது. ஈழம் சென்ற பிரபாகரன் மே மாதம் தனி ஈழமே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தார். இதையடுத்து இந்திய அரசு இனப்பிரச்சினையில் மீண்டும் தலையிட்டது.

யாழ்ப்பாணத்தில் வைத்து பிரபாகரனை சந்தித்த இந்திய அதிகாரிகள் பிரதமர் ராஜீவ் காந்தி சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்திய அரசின் ராணுவ ஹெலிகாப்டரில் அவர் டெல்லி கிளம்பினார்.

வழியில் சென்னை வந்து முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களை, இலங்கைக்கான இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தியாவும், இலங்கையும் இனப்பிரச்சினை தொடர்பாக அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதை பிரபாகரன் ஏற்க மறுத்து விட்டார். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஹோட்டலிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார் பிரபாகரன். அதேசமயம், ஈழத்தில் போராடி வந்த பிற போராளி இயக்கத் தலைவர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி வெளிப்படையாகவும் அறிவித்தார். மேலும் கொழும்பு சென்று இந்த ஒப்பந்தததில் கையெழுத்திடப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த அறிவிக்குப் பின்னர் அவர் பிரபாகரனை சந்தித்தார். அப்போது ஒப்பந்தத்தில் உள்ள குறைகள், முரண்பாடுகளை சுட்டிக் காட்டினார் பிரபாகரன். இருப்பினும் அது ஏற்கப்படவில்லை.

டெல்லி ஹோட்டலில் பிரபாகரன் கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டிருந்தார். இந்த சமயத்தில் இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்தானது. அதன்படி, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

கொழும்பு பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய ராஜீவ் காந்தி, பிரபாகரனை மீண்டும் சந்தித்து சில உறுதிமொழிகளை அளித்தார். அதை பிரபாகரனும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து நாடு திரும்பிய பிரபாகரன் சுதுமலை என்ற இடத்தில் வைத்து, எம் மக்களது விடுதலைக்காக, எம் மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாங்கள் விரும்பவில்லை.

தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பெற்று அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்கு பெறப் போவதில்லை என்றார்.

இதையடுத்து பலாலி முகாமில் வைத்து விடுதலைப் புலிகள் இந்திய ராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

இந்த சமயத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு அமைதி ஒப்பந்தத்தை கடைப்பிடிப்பதில் சிக்கல் எழுந்தது.

இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்து திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.

மேலும், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 17 தளபதிகளை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றது. அவர்களில் 12 பேர் சயனைடு சாப்பிட்டு உயிர் நீத்தனர்.

இதையடுத்து இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக பிரபாகரன் அறிவித்தார். இதனால் இந்திய ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டது.

இதுகுறித்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பிரபாகரன் விரிவான கடிதம் எழுதினார்.

இந்திய ராணுவத்தை எதிர்த்து பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் இந்திய ராணுவத்திற்குப் பேரிழப்பு ஏற்பட்டது.

முன்னதாக, ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை புலிகள் தலைமையேற்று நடத்தத் தொடங்கியதுமே இந்தியா அதற்கு முழு வீச்சில் உதவியளிக்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் தான்.

விடுதலைப் புலிகள்தான், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி என முதலில் அங்கீகரித்தவரும் எம்.ஜி.ஆர்.தான்.

எம்.ஜி.ஆரின் கூற்றை ஏற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், புலிகளுக்கு உதவ முன்வந்தார். எம்.ஜி.ஆர். தமிழகத்தை விடுதலைப் புலிகள் தங்களது பயிற்சிக்களமாக்கிக் கொள்ள அனுமதி அளித்தார். மறுபக்கம் இந்திரா காந்தி ஆயுதங்களை அள்ளி வழங்கினார்.

இந்திராவும், எம்.ஜி.ஆரும் செய்த இந்த பேருதவிகளால் விடுதலைப் புலிகள் அசைக்க முடியாத இயக்கமாக உருவெடுத்தனர்.

இந்திராவின் ஆயுதம், ராணுவப் பயிற்சி, நிதியுதவி, எம்.ஜி.ஆர். வழங்கிய இட உதவி என சகல உதவிகளும் இந்தியாவிலிருந்து கிடைத்ததால் இலங்கைப் படைகளுக்கு எதிராக மிகச் சிறந்த ராணுவ படையாக மாறியது எல்.டி.டி.இ.

இந்திரா மற்றும் எம்.ஜி.ஆரின் உதவிகளை ஒருபோதும் மறக்க மாட்டோம் என பலமுறை பிரபாகரன் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால் இந்திரா, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் புலிகள் குறித்த இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுப் போனது.

ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்தது.

ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனேவுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை முழுவதுமாக நிராகரித்து விட்டனர் புலிகள். ஆனால் அதை மீறி செயல்பட முயன்றதால் ராஜீவ் மீது கோபம் கொண்டனர் புலிகள்.

இந் நிலையில், 1988ம் ஆண்டு பிரேமதாச புதிய அதிபரானார். புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கு அவர் முயன்றார். இதை பிரபாகரனும் ஏற்றார். இந்த நிலையில், இந்திய ராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாச உத்தரவிட்டார். 1990ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கையிலிருந்து வெளியேறியது.

பிரேமதாச அரசுடன் புலிகள் நடத்திய பேச்சும் பலன் தரவில்லை. அதுவும் முறிந்து போனது.

1991ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தின் பல பகுதிகளை
விடுதலைப் புலிகள் தங்கள் வசம் கொண்டு வந்தனர். இந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் மிக மிக பலம் பொருந்திய படையாக மாறியிருந்தனர்.

இந்த ஆண்டில்தான் யாருமே எதிர்பாராத வகையில் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுக்குப் பலியானார். அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது, அந்தப் படை செய்த அட்டூழியங்களை ராஜீவ் காந்தி பெரிய அளவில் கண்டு கொள்ளாதது, அதை விட உச்சமாக, பிரபாகரனையே கொல்ல இந்திய அதிகாரிகள் சிலர் செய்த சதிச் செயல் காரணமாக ராஜீவ் மீதான புலிகளின் கோபம் அதிகரித்து அது அசம்பாவிதத்தில் முடிந்து போனது.

புலிகளின் இந்த படுபாதகச் செயல் அவர்களுக்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்த மக்களின் ஆதரவை அடியோடு காலி செய்தது.

ராஜீவ் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் இலங்கை விவகாரத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டது இந்திய அரசு.

இந்த சமயத்தில் பல உலக நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்த முன்வந்தன. அதில் முக்கியமான நாடு நார்வே. மிகக் கடுமையாக போராடி இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் சமாதானப் பேச்சுவார்த்தை டேபிளுக்கு அழைத்து வந்தது நார்வே.

பல்வேறு சுற்றுக்களாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதியில் முத்தரப்புக்கும் இடையே 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு வரை ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு திடீரென இலங்கையின் போக்கில் மாற்றம் காணப்பட்டது. அந்த திடீர் மாற்றத்திற்கு இலங்கை அதிபரான ராஜபக்சேவே காரணம்.

இந்தியாவை தனது வழிக்குக் கொண்டு வர அவர் பிளாக்மெயில் முறையைக் கையாண்டார். நீங்கள் எங்களுக்கு புலிகளை ஒழிக்க உதவ வேண்டும். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சீனாவும், பாகிஸதானும் என்று அவர் புதிய பாதையில் நடைபோட, தெற்காசியாவில் தனது நிலை பாகிஸ்தானுக்குப் போய் விடுமோ என்ற குழப்பத்தில் இலங்கைக்கு சில வகைகளில் உதவ முன்வந்தது இந்தியா.

இப்படியாக இந்தியாவின் ஆதரவை முதலில் பெற்ற ராஜபக்சே மறுபக்கம் பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் அதி நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் இலங்கை அரசு கொன்று தீர்த்தது ஆயிரக்கணக்கான அப்பாவியான தமிழ் மக்களைத்தான் என்பதே உண்மை.

கணக்கில் வராமல் எத்தனையோ ஆயிரம் தமிழ் மக்கள் இலங்கை ராணுவ வெறியில் சிக்கி அநியாயமாக மாண்டு போயினர்.

இன்று வட இலங்கை மயான பூமியாகி விட்டது. புல் பூண்டுகளைத் தவிர மக்கள் நடமாட்டம் இல்லாத ரத்த பூமியாக காட்சியளிக்கிறது ஈழம்.

ஒரு காலத்தில் எழில் கொஞ்ச காணப்பட்ட ஈழம் இன்று ரத்த வாடை வீசும் மோசமான நிலைக்குப் போய் விட்டது.

உலகில் எந்த ஒரு போராளி இயக்கத்திடமும் இல்லாத கட்டுக்கோப்பும், கட்டுப்பாடும், தீரமும், துணிச்சலும் மிக்க இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை நடத்தி வந்தார் பிரபாகரன்.

இஸ்ரேல் அரசே, விடுதலைப் புலிகளின் போர் உத்தியைப் பார்த்து மலைத்துப் போனது ஒரு காலம்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தி வந்தனர். அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் மறைந்தபோதெல்லாம் கூட பிரபாகரன் நிலை குலையாமல் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்.

இருப்பினும் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக இருந்த கர்னல் கருணா, அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரிந்ததும், மறைந்ததும் பிரபாகரனுக்கு ஈடு கட்ட முடியாத இழப்பாகி விட்டது. குறிப்பாக கருணா பிரிந்தது, பாலசிங்கத்தின் மறைவு, புலிகளுக்கு நிச்சயம் மிகப் பெரிய திருப்புமுனை சம்பவங்கள்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய படை பலத்தோடு இலங்கைப் படைகள் தொடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் விடுதலைப் புலிகள் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில்தான் பிரபாகரனின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

பிரபாகரனின் மறைவு நிச்சயம் ஈழ மக்களுக்கு பேரிழப்புதான். இனியாவது ஈழ மக்கள் நிம்மதியும், அமைதியும், கெளவரமும், மரியாதையும் கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆனால், அதை இலங்கை அரசும், சிங்களர்களும் கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

பிரபாகரனின் மறைவோடு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வருவதும் அல்லது வேறு வகையில் மீண்டும் போராட்டம் வெடிப்பதும் முழுக்க முழுக்க இலங்கை அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.

புலிகள் இல்லை என்ற தைரியத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை இலங்கை மீண்டும் கட்டவிழ்த்துவிடாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X