For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும்..

By Staff
Google Oneindia Tamil News

Prabhakran
உலகப் போராளி இயக்கங்களில் தனி இடம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. காரணம், அதன் செயல்பாடுகளும், கடைப்பிடித்த கட்டுப்பாடுகளும், ஒரு அரசாங்கத்தையும், அதன் ராணுவத்தையும் கடந்த 30 ஆண்டு காலமாக ஆட்டிப்படைத்த அசாத்திய வலிமையும்.

1972ம் ஆண்டு, தனது 17வது வயதில் தமிழ்ப் புதிய புலிகள் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் பிரபாகரன்.

இந்த அமைப்புக்கென தனியாக சட்ட திட்டங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. சீருடை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன. அமைப்பின் ராணுவத் தளபதியாகவும் தலைவராகவும் பிரபாகரன் செயல்பட்டார்.

இந்த அமைப்புக்காக இளைஞர்கள் பலரைத் தேர்வு செய்தார் பிரபாகரன். அவர்களுக்கு அவரே ஆயுதப் பயிற்சியை அளித்தார். ஒரு தேர்ந்த ராணுவ நிபுணரைப் போல சிறப்பாக பயிற்சி அளிப்பாராம் பிரபாகரன்.

இந்த அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் நடவடிக்கை, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் அருகே வைத்து, யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றதுதான்.

பிரபாகரன் தலைமையில் சென்ற போராளிகள், துரையப்பாவை சுட்டுக் கொன்று, அவரது காரிலேயே ஏறித் தப்பி விட்டனர்.

இதையடுத்து 1976ம் ஆண்டு இலங்கை அரசுக்குச் சொந்தமான புத்தூர் மக்கள் வங்கியை தமிழ்ப் புதிய புலிகள் சூறையாடி துப்பாக்கி முனையில் 5 லட்சம் பணம், 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றனர். தங்களது இயக்கத்திற்குத் தேவையான நிதிக்காக இதைச் செய்தனர்.

இந்த இரு சம்பவங்களும் இலங்கை அரசை அதிர வைத்தன. இதையடுத்து புதிய தமிழ்ப் புலிகளை ஒடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இந்த நிலையில்,1976ம் ஆண்டு தனது அமைப்பை தமிழீழ விடுவதலைப் புலிகள் என்ற புதிய பெயருக்கு மாற்றினார் பிரபாகரன். பழைய அமைப்பில் இருந்த கடுமையான சட்ட திட்டங்கள் சற்று மாற்றப்பட்டு புதிய அமைப்புக்காக புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக கொரில்லா தாக்குதல் முறை கையாளப்பட்டது. உலகின் மிகவும் அபாயகரமான கொரில்லா அமைப்பாகவும் விடுதலைப் புலிகள் விரைவில் உருவெடுத்தனர்.

இதையடுத்து அடுத்தடுத்து அரசுத் தரப்பின் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்தனர் விடுதலைப் புலிகள். இதனால் இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு விடுதலைப் புலிகளை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு அனைத்து வகையான ஆயுதங்களையும் வழங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்குமாறு ராணுவம் முழு சுதந்திரத்துடன் அவிழ்த்து விடப்ட்டது.

இந்த பதட்டமான சூழ்நிலையில்தான் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே, தமிழை இரண்டாம்பட்ச மொழியாக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

மேலும், 1979ம் ஆண்டு தமிழர்களை அழித்தொழிக்கும் முகமாக பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் புலிகளுக்கு எதிரான சட்டத்தை ஜெயவர்த்தனே கொண்டு வந்தார்.

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது.

இந்த நிலையில் தனது அமைப்பு ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் இறங்கினால் மட்டும் போதாது. அரசியல் ரீதியாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கில், புதிய அரசியல் பிரிவை உருவாக்கினார் பிரபாகரன்.

இதற்காக 1979 முதல் 90 வரை ஒரு ஆண்டுக்கு ஆயுதப் போராட்டத்தை விட்ட பிரபாகரன், அரசியல் ரீதியாக தனது அமைப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

அதன் முக்கிய நடவடிக்கையாக பல்வேறு சர்வதேச நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பெருமளவில் ஆதரவு கூடியது. உலக அளவில் செயல்பட்டு வந்த பல்வேறு போராளி அமைப்புகளுடன் விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், 1981ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சூறையாடியது சிங்கள ராணுவம். யாழ் நகரமே தீவைத்து எரிக்கப்பட்டதைப் போல சிங்களர்கள் வெறிச் செயலில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற, தெற்காசியாவிலேயே மிகப் பெரிய யாழ்ப்பாணம் நூலகம் தீவைத்து எரிக்கப்பட்ட, மிக மிக அரிதான நூல்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. எங்கு காண முடியாத பல அற்புத தமிழ்க் காவிய நூல்களும் இதில் கருகிப் போயின.

இதனால் நிறுத்தி வைத்திருந்த ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினார் பிரபாகரன். இலங்கை ராணுவத்திற்கு எதிராக கடும் தாக்குதல்களைத் தொடுக்குமாறு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலைப் புலிகள் மீண்டும் வேகத்துடன் கிளம்பினர்.

அதுவரை போலீஸார் மற்றும் அரசுத் தரப்பில் மட்டுமே சிறு சிறு தாக்குதல்களை நடத்தி வந்த விடுதலைப் புலிகள் 1981ம் ஆண்டு முதன் முதலாக ராணுவத்தை தாக்கி, இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள ராணுவ முகாமை தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் புலிகள் பறித்துச் சென்றனர். இதுதான் புலிகளின் முதல் ராணுவ எதிர்ப்புத் தாக்குதலாகும்.

1982ம் ஆண்டு, அதிபர் ஜெய்வர்த்தனே தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்தபோது, பொன்னாலைப் பாலத்தில் வைத்து கடற்படை வாகனங்களை கண்ணிவெடி வைத்து தாக்கினர் புலிகள்.

பின்னர் சாவகச்சேரி, காவல் நிலையத்தைத் தாக்கி 3 போலீஸாரை சுட்டுக் கொன்றனர். ஆயுதங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

புலிகளின் அடுத்தடுத்த தாக்குதல்களால் வடக்கு மாகாணத்தில் பல காவல் நிலையங்கள் மூடபப்ட்டன. காவல் நிர்வாகம் சீர்குலைந்தது.

198ம் ஆண்டு பருத்தித்துறை காவல் நிலையம் தாக்கப்பட்டு 2 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, உமையாள்புரம் என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்றைத் தாக்கி அழித்தனர். ஐந்து வீரர்கள் காயமடைந்தனர்.

பின்னர் 1983ம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம், கச்சேரியில் உள்ள அரசு செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து அரசுக்கு அதிர்ச்சியூட்டினர்.

அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்தார். யாரும் போட்டியிடவும் கூடாது எனவும் எச்சரித்தார். இதை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 3 தமிழ் வேட்பாளர்கள் சுட்டு்க கொல்லப்பட்டனர். இதையடுத்து யாரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என சந்தேகப்படுவோரை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ள ராணுவத்திற்கு உத்தரவிட்டது அரசு.

இந்த நிலையில், திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் ஒரு ராணுவ வாகனத்தை விடுதலைப் புலிகள் கண்ணிவெடி வைத்துத் தாக்கி அழித்தனர். இதில் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பிரபாகரன் நேரடியாக களத்தில் இறங்கி 7 ராணுவத்தினரை சுட்டுக் கொன்றார்.

இதையடுத்து வட இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

கொழும்பில் வசித்து வந்த தமிழர்களையும் ராணுவம் கடுமையாக வேட்டையாடியது. தமிழர்களின் சொத்துக்கள், வர்த்தக மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

முதல் ஈழப் போர்...

இந்த சம்பவத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவான போராட்ட இயக்கமாக மாறியது. வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற இயக்கமாக அது மாறியது.

1984ம் ஆண்டு முதல் ஈழப் போர் தொடங்கியது. இது 1987ம் ஆண்டு வரை நீடித்தது.

இந்த கால கட்டத்தில் அணி அணியாக ராணுவத்தினர் மீது கொரில்லாத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் ராணுவம் நிலை குலைந்தது. தனது ஆத்திரத்தை அது அப்பாவி மக்கள் மீது திருப்பியது.

இந்த காலகட்டத்தில்தான் பிரபாகரனுக்குத் திருமணம் நடந்தது. 1984ம் ஆண்டு, இலங்கையி்ன் புங்குடு தீவைச் சேர்ந்த மதிவதனியை அவர் மணந்தார். அப்போது பிரபாகரனுக்கு வயது 31.

பிரபாகரன்- மதிவதனி தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்களது நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.

புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரிவான கடற்புலிகள் 1984ம் ஆண்டும், மகளிர் பிரிவு 1992ம் ஆண்டும் தொடங்கப்பட்டன.

புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய பிரிவான கரும்புலிகள் - தற்கொலைப் படையினர் - 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் மனித குண்டு என்ற பெயர் மில்லருக்குக் கிடைத்தது. உலக அளவில் மனித குண்டு என்ற ஆயுதத்தை அதிக அளவில் உபயோகித்த இயக்கம் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டு தமிழீழ காவல்துறையை உருவாக்கினார் பிரபாகரன். தமிழீழப் பகுதியில் காவல் நிர்வாகத்தை இது பார்ததுக் கொண்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X