For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். போக்கால் அதிருப்தி - வெளியிலிருந்து ஆதரவு தர திமுக முடிவு

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது.

திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.

தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது

முன்னதாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து நாளை தன்னுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியலை தர இருந்தார் மன்மோகன் சிங்.

ஆனால், திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் ஒதுக்குவதில் பெரும் சி்க்கல் உருவாகியுள்ளதால் அமைச்சர்கள் பட்டியலை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.

தங்களுக்கு எத்தனை கேபினட் அமைச்சர்கள் என்பதிலும் திமுக, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் மூண்டது.

கேட்டது 4+4 ..

முதலில் திமுக 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், இணையமைச்சர்களையும் கோரி வந்தது. இதுதொடர்பாக இழுபறி நீடித்தது. 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணையமைச்சர்களைத் தருவதாக காங்கிரஸ் கூறியது.

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி மற்றும் 3 துணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக காங்கிரஸ் தீர்மானமாக கூறியது.

இதற்கு தயாநிதி மாறன், ராசா உடனடியாக பதிலளிக்கவில்லை. முதல்வர் கருணாநிதியுடன் அவர்கள் ஆலோசனை நடத்திய பின்னர் 3 கேபினட், 2 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 2 துணை அமைச்சர்கள் பதவிகளைத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை காங்கிரஸ் தரப்பு ஏற்கவில்லையாம். 2 கேபினட், 3 தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் ஒரு துணை அமைச்சர் பதவி வேண்டுமானால் தருவதாக காங்கிரஸ் கூறி விட்டது.

இதனால் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, 2004ம் ஆண்டு அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக எந்தவித பார்முலாவையும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் இந்த முறை பார்முலாவை முன்வைத்தனர்.

இது எங்களுக்கு திருப்தியைத் தரவில்லை. மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். அவர்கள் கூறியது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தர திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி முடிவு செய்துள்ளார். இதை உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) அறிவிக்குமாறு கூறியுள்ளார்.

எனவே திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் என்றார்.

திமுகவின் இந்த அதிரடியான முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் தரப்பி்ல இதுவரை இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அதே சமயம், திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி மற்றும் நான்கு இணை அமைச்சர் பதவிகளைத் தர காங்கிரஸ் தெரிவித்தது. இதை அவர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

கடந்தமுறையை விட 60 இடங்களில் அதிகமாக வென்றுள்ள காங்கிரஸ் தனக்கு இம்முறை கூடுதலாக அமைச்சர் பதவிகளை எடுத்துக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது.

பாலு-ராசாவுக்கு காங். எதிர்ப்பு:

டி.ஆர்.பாலு, ராசாவுக்கு இம்முறை அமைச்சர் பதவியே தர மாட்டோம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால்தான் திமுக கடும் கோபமடைந்து வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு செய்ததாக தெரிகிறது.

யாருக்கு அமைச்சர் பதவி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலையிடவே கூடாது என்று திமுக கூறிவி்ட்டதாம்.

பாலுவுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில், பாலுவுக்கு சபாநாயகர் பதவியைத் தர வேண்டும் எனவும் வற்புறுத்தி வந்தது திமுக. அதுவும் பலிக்கவில்லை.

அதேபோல திமுக அழுத்தமாக வலியுறுத்தி வந்த ரயில்வே துறையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. காரணம், அதை மமதாவுக்கு கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்து விட்டது.

திமுக முன்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகியவையும், இணையமைச்சர் பதவிகளில் நலத்துறை, மின்துறை, உள்துறை, நிதி என பல துறைகளைக் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வெளியில் இருந்து ஆதரிக்கப் போவதாக திமுக கூறியிருந்தது.

கருணாநிதி மற்றும் மமதா பானர்ஜியின் இந்த பிடிவாதமான இழுபறியால்தான் மன்மோகன் சிங்கால் அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்தே ஜனாதிபதியை இன்று காலை சந்தித்து பட்டியலைத் தர இருந்த பிரதமர் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டார்.

மே.வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் - மமதா டிமான்ட்

இதற்கிடையே, மேற்கு வங்க சட்டசபையைக் கலைத்து விட்டு அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மமதா பானர்ஜி வைத்துள்ளாராம். இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றால் ஒரு அமைச்சர் பதவிகளைக் குறைத்துக் கொள்ளவும் தயார் என சராசரி அரசியல்வாதி மாதிரி பேசி வருகிறாராம் மமதா.

காத்திருக்கும் நான்கு கட்ட நடவடிக்கை..

தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்பு நான்கு முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. இதை முடித்தால்தான் குடியரசுத் தலைவரைப் போய்ப் பார்த்து அடுத்து ஆக வேண்டிய காரியங்களை அது செய்ய முடியும்.

முதலில் கூட்டணிக் கட்சிகளுடன் அமைச்சர் பதவி பங்கீட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

2வது, அதன் பின்னர் யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும் உட்கார்ந்து இறுதி செய்வார்கள்.

3வது அந்த இறுதிப் பட்டியலை சோனியா காந்தி பார்த்து ஒப்புதல் தெரிவிப்பார். அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கு போட்டாகி விட்டதா என்பதையும் அவர் பார்க்க வேண்டியுள்ளது.

நான்காவதாக, இந்த இறுதிப் பட்டியலைக் கொண்டு போய் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் மன்மோகன் சிங் அளிப்பார்.

நாளை மாலை பதவியேற்பு..

நாளை மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. எனவே இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்தாக வேண்டிய நிலையில் மன்மோகன் சிங்கும், காங்கிரஸும் உள்ளனர்.

முக்கிய பதவிகளுக்கு முடிவாகி விட்டது..

இதற்கிடையே, நிதி, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு, மனிதவளத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான அமைச்சர் களை காங்கிரஸ் முடிவு செய்த விட்டதாக தெரிகிறது.

நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி, உள்துறைக்கு ப.சிதம்பரம், பாதுகாப்புக்கு ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத்துறைக்கு கமல்நாத், மனித வளத்துறைக்கு கபில் சிபல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படக் கூடும்.

சரத்பவாருக்கு விவசாயத் துறை கிடைக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X