For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதுநகர்-சிவகங்கை குழப்பம் ஏன்?-நரேஷ் குப்தா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வாக்குகள் எண்ணிக்கையின்போது அதிகாரிகள் செய்த சில குழப்பங்களே விருதுநகர், சிவகங்கை தொகுதிகளின் முடிவுகள் குறித்து குழப்பமான தகவல்கள் ஏற்பட காரணம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

13-ந் தேதியன்று பதிவு செய்யப்பட்ட மொத்த ஓட்டு எண்ணிக்கையும், 16-ந் தேதி எண்ணப்பட்ட மொத்த ஓட்டு எண்ணிக்கையும் வித்தியாசமாக இருப்பதாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஏராளமான புகார்கள் போன் மூலம் கூறப்பட்டன. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலன்று பதிவான ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 291 ஓட்டுகளை, அங்குள்ள அதிகாரி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 109 என்று தவறுதலாக காட்டி விட்டார். ஓட்டு எண்ணிக்கைகளை பெறும் மையத்தில் பதிவு செய்யப்பட்ட கணக்கின் அடிப்படையில் தவறான எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவிட்டது.

கடுமையான பணிக்கிடையில் கம்ப்யூட்டரில் தவறான எண்ணிக்கையை ஊழியர் பதிவு செய்திருக்கலாம். எனவேதான் திருமங்கலத்தில் பதிவான மொத்த ஓட்டு எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 291 என்று காட்டுவதற்கு பதிலாக, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 109 ஓட்டுகள் என்ற தவறான கணக்கு காட்டப்பட்டுவிட்டது.

ஆனால் 17சி' கணக்கீட்டின்படியும், திருமங்கலம் தொகுதி ஓட்டு எந்திரத்தில் நேரடியாக எண்ணப்பட்டதன் அடிப்படையிலும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 291 ஆகும். அந்த தொகுதிக்கான 3 தேர்தல் பார்வையாளர்களும் இதை கணக்கிட்டு பார்த்து திருப்தி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும் இதுபோன்ற பிரச்சினை கிளப்பப்பட்டது. அந்த தொகுதியில் அதிக ஓட்டுகளைப் பெற்ற முதல் 2 வேட்பாளர்களான ப.சிதம்பரம் (காங்கிரஸ்), ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) ஆகியோர் பெற்ற ஓட்டுகளை ரவுண்டு வாரியாக மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டு உள்ளார். அதைப் பார்த்தே யார் அதிக ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ப.சிதம்பரமும், ராஜகண்ணப்பனும் முறையே, திருமயம் சட்டமன்ற தொகுதியில் 50,087-44,769 ஓட்டுகளும், ஆலங்குடியில் 55,817-46,927 ஓட்டுகளும், காரைக்குடியில் 58,076-54,391 ஓட்டுகளும், திருப்பத்தூரில் 55,606-62,273 ஓட்டுகளும், சிவகங்கையில் 57,564-60,464 ஓட்டுகளும், மன்னார்குடியில் 56,545-62,020 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

மாடு மேய்க்கத்தான் லாயக்கா...

என்னைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குள் போக நான் விரும்பவில்லை. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்னைப் பற்றி (மாடு மேய்க்கத்தான் நரேஷ் குப்தா லாயக்கு என்று கூறியிருந்தார் டாக்டர் ராமதாஸ்) கூறியது பற்றி கேட்கிறீர்கள். நானும் பதிலுக்கு எதையாவது கூறுவது முறையல்ல.

தேர்தல் கமிஷனையும், தலைமை தேர்தல் அதிகாரிகளையும் விமர்சிப்பது அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வு. அப்படி இப்போதும் நடந்துள்ளது. எனவே அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. இது எங்கள் பணியில் இயல்பாக எதிர்கொள்ளும் விஷயம்தான். தேர்தலில் இது சகஜம்தான். அவர் இப்படி பேசியது பற்றி தேர்தல் கமிஷன் அல்லது நான்தான் கவலைப்பட வேண்டும். நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்?

இந்த தேர்தலில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக செயல்பட முயற்சி செய்தோம் என்பதையே பதிலாக கூற விரும்புகிறேன். இந்த நடவடிக்கையில் சிலருக்கு திருப்தியும், சிலருக்கு அதிருப்தியும் ஏற்பட்டு இருக்கலாம். என்னைப் பற்றி என்ன பேசினாலும் அதற்கு எதிராக நான் அவதூறு வழக்கு போடப்போவதில்லை. இப்போதும் வழக்கு தொடரும் எண்ணம் எனக்கு இல்லை. யார் அவதூறாக பேசினாலும் நான் பதிலளிப்பதில்லை.

தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவது சில கட்சிகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். சுவர் விளம்பரங்கள்-போஸ்டர்களை ஒட்ட அனுமதி மறுப்பது, நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவதை நிறுத்து வைப்பது உள்பட பல புகார்களை அவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும்.

வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டு விட்டதால் தேர்தலை பாதித்துவிட்டதாக சில கட்சிகள் புகார் கூறுகின்றன. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு பற்றிய சந்தேகங்களும் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலின் போது 2 இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்பதாக அதிகாரிகள் ஓட்டு போட்டு சோதனை செய்தனர். அப்போது ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 இயந்திரங்களையும் உடனே மாற்றிவிட்டனர். மற்ற சில இயந்திரங்களில் சிறிய பிரச்சினைகளே இருந்தன.

மக்கள் பணத்துக்கு ஆசைப்படுகிறார்களே..

தேர்தல் நேரத்தில் பேக்ஸ் மற்றும் போன் அழைப்புகள் மூலம் பெறப்பட்ட அனைத்துரக புகார்களும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது போலீசுக்கு அனுப்பப்பட்டன. அவை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இலவசமாக எதையாவது கொடுத்து வாக்காளர்களின் ஆதரவைப்பெற வேட்பாளர்கள் முயலும் நிலையில், பணத்தையும், பரிசுப் பொருட்களையும் ஆவலாக எதிர்பார்க்கும் வாக்காளர்கள் உள்ள சமுதாயத்தில், இதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது எளிதான காரியம் அல்ல.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா பாகத்திலும் நடக்கிறது. இதுபோன்ற குறைபாடுகள், சமுதாயத்தில் இருப்பது வேதனைக்கு உரியது. அதிகாரத்துக்கு வருவதற்கு நியாயமான முறையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒழுக்கம் தேவை. இடைத்தேர்தலில்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. தற்போது முக்கிய தேர்தலிலும் இந்த குற்றம் நடக்க தொடங்கியுள்ளது. பழைய சம்பவங்கள் பழையதாகவே இருக்கட்டும்.

வாக்காளர் அடையாள அட்டை என்பது, ஓட்டுப் போடுவதற்கான தகுதியைப் பெற்றுத் தரும் ஆதாரம் அல்ல. வாக்காளரை அடையாளம் காட்டுவதற்கான அட்டைதான் அது. பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போடும் தகுதியைப் பெற முடியும்.

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகள் போடும் முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தன. அரசு ஊழியர் தனது சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் இருந்தால், அவருக்கு தனி சான்றிதழ் தரப்பட்டு இருந்தன. மற்றவர்கள் மட்டும் தபால் ஓட்டு போட வேண்டும்.

ஓட்டுப்பதிவு அன்று பலர் வாக்குச்சாவடிகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் சென்றுள்ளனர். மற்ற வாக்குச்சாவடிக்கும் சென்று கேட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தல் பற்றி தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X