For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கல்பட்டில் பேய் மழை - சென்னையிலும் இரவு நனைந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டில் நேற்று கன மழை பெய்தது. கூடவே சூறைக் காற்றும் வீசியதால் நகரமே ஸ்தம்பித்தது. சென்னையிலும் இரவில் நல்ல மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் கன வெயில் சற்று குறைந்து காற்றும், ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. தென் மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியாக தென் மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் லேசாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு நகரம் நேற்று பேய் மழையை சந்தித்தது. பலத்த சூறைக் காற்றும் வீசியதால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. நகரம் இருளில் மூழ்கியது, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணி வரை நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் நிலைமை மாறியது. திடீரென கரு மேகங்கள் சூழ்ந்தன. சில நிமிடங்களில் கனத்த மழை பெய்தது. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த சூறைக் காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. மின் கம்பங்களும் சில இடங்களில் விழுந்தன.

இதையடுத்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஏகாம்பரம் தெருவில் மாமரம் முறிந்து டிரான்ஸ்பார்மரில் விழுந்தது. இதில், மின் ஒயர்கள் அறுந்தன.

பச்சியம்மன் கோயில் அருகில் 4 மின்கம்பங்கள் தெருவில் சாய்ந்தன. ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்கின. டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு நகரில் 17 குடிசைகள் காற்றில் பறந்தன. இதில், ஒரு பெண், 2 ஆண்கள் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம், பாலூர் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே புளியமரம், காட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வரை போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து ஆங்காங்கே மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றரை மணி நேரம் பெய்த பேய் மழையால் ராட்டின கிணறு, புதிய பஸ் நிலைய பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் வெள்ளமாக ஓடியது. மணிக்கூண்டு அருகில் பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. பல இடங்களில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் பறந்தன. அனுமந்த புத்தேரியில் நகராட்சி பள்ளி அருகே பெரிய புளிய மரம் சாய்ந்தது.

செங்கல்பட்டு அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூர், சிங்க பெருமாள் கோயில், மேலமையூர் ஆகிய பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை சாலையோரம் உள்ள எல்லா மரங்களும் சாய்ந்தன. நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் மறைமலை நகர் தீயணைப்பு படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மழை மற்றும் சூறைக் காற்று, மின் துண்டிப்பால் செங்கல்பட்டு முழுமையாக ஸ்தம்பித்தது.

மின்னல் தாக்கி 3 பேர் பலி

இதற்கிடையே, கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பேரூராட்சி அருகே உள்ள பனையூர் சின்னக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தள் சுப்பிரமணியன் (45), குமரேசன் (19) மற்றும் தழுதாலிக்குப்பம் மாரிமுத்து (40) ஆகிய மூன்று பேரும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மாலை 6 மணிக்கு கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை கொட்டியது. அவசர அவசரமாக கரைக்கு வந்த மீனவர்கள், சின்னக்குப்பம் கடலோரத்தில் படகை நிறுத்திவிட்டு அருகில் இருந்த குடிசைக்குள் ஓடினர்.

குடிசைக்குள் நுழையும் முன்பு மின்னல் தாக்கியதில் 3 பேரும் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக பலியாயினர்.

செங்கல்பட்டு அடுத்த பாலூரில் இரும்பு கம்பி கம்பெனியின் சிமென்ட் கூரை விழுந்தது. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குந்தன் சர்மா (45) தலை நசுங்கி இறந்தார். படுகாயம் அடைந்த 6 தொழிலாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சென்னையில்...

சென்னையிலும் நேற்று இரவு வாக்கில் லேசான மழை பெய்துள்ளது. மாலை வரை அடித்த வெயில் பிறகு படிப்படியாக குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மழை வரப் போகிறது என மக்கள் நினைத்தனர். ஆனால் மாலையில் மழை இல்லை.

இருப்பினும் இரவில் மழை பெய்ததால் தூங்கிக் கொண்டிருந்த பலருக்கும் தெரியவில்லை. ஓரளவு நன்றாக பெய்த இந்த மழையால் வெப்பம் குறைந்தது.

இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. லேசான காற்றும் வீசுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X