For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளின் பிடிவாதம்-முகர்ஜியால் தளர்த்த முடியுமா?

By Staff
Google Oneindia Tamil News

Pranab Mukherji
-தட்ஸ்தமிழ் சிறப்புக் கட்டுரை

அரசாங்கம் நிச்சயிக்கும் இலக்கை குறித்த காலத்தில் அடையத் தடையாக இருப்பவற்றில் முக்கிய காரணி எது தெரியுமா... சூழலுக்கேற்ற வட்டியைத் தளர்த்தும் திறனற்ற வங்கிகள்தான். இவை முழுமையாக ஒத்துழைக்காத வரை பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை' -இதை நாம் சொல்லவில்லை, முன்னாள் நிதி அமைச்சர், இந்நாள் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் சில மாதங்களுக்கு முன் நடந்த வங்கிகளின் கூட்டுக் கூட்டத்தில் சொன்னது.

அதையெல்லாம் கேட்டு உடனே திருத்திக் கொண்டுவிட்டால் எப்படி..! தொடர்ந்து ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைப்பதும், மற்ற வணிக வங்கிகள் வட்டியைக் குறைக்காமல் அடம் பிடிப்பதுமான டாம் அண்ட் ஜெர்ரி கதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிஆர்ஆர், ரெபோ ரேட், வங்கி வட்டி, ரிவர்ஸ் ரேட் என பல வழிகளில் இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி 5 முறை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால் பிஎல்ஆர் எனப்படும் முதன்மை வங்கிக் கடன் விகிதத்தில் மிக மிகக் குறைந்த அளவுதான் குறைத்துள்ளன வணிக வங்கிகள். ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ள வட்டி மாறுதல்களில் 25 சதவிகிதம் மட்டுமே வணிக வங்கிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என இருமாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் சொன்னது நினைவிருக்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தவிர பிற வணிக வங்கிகள் எதுவும் ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த குறைந்த பட்ச வட்டிக் குறைப்பைக் கூட செய்ய முன்வரவில்லை என்பதே இன்றைய உண்மை.

இதனால் பல வகை நுகர்வோர்-தொழில் கடன்கள் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளன. கனரா வங்கி உள்ளிட்ட பல அரசுத் துறை வங்கிகளில் வழங்கப்படாமல் உள்ள கடன் தொகை பல ஆயிரம் கோடிகள். நிர்ணயித்த கடன் இலக்கை அடைய முடியவில்லை என இவை பல கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையான காரணம், வட்டி விகிதம் குறைக்கப்படாததும், கடன் வழங்களுக்கான நடைமுறை, இயல்பு மீறிய கடுமையைக் கொண்டிருப்பதும்தான்.

இதுகுறித்து பல முறை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் வெளிப்படையான தனது அதிருப்தியைத் தெரிவித்த பின்னும் வணிக வங்கிகள் தங்கள் அலட்சியத்தைத் தொடர்கின்றன.

மேலும் எந்த மாதிரி கடன்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வையும் வங்கிகளுக்கு இல்லை என்பது பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டு.

உதாரணம், ஒரு நிறுவனத்துக்கு கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நல்ல நம்பிக்கைத் தன்மையை மட்டும் பார்க்காமல், அன்றைய பொதுவான ('ஐடி துறை டவுனாயிச்சி... லோன் கெடைக்கிறது கஷ்டம் சார்!') ட்ரெண்ட் என்னவென்று பார்த்து அதன் அடிப்படையில் கடன் வழங்க மறுத்துவிடுகின்றன பல வங்கிகள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதிதாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள பிரணாப் முகர்ஜி, அனைத்து வங்கிகளின் சேர்மன்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் பேசவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முகர்ஜி, 'வங்கி அதிகாரிகள் தங்கள் கணக்கேடுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல் நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ஆக்ஷனில் இறங்க வேண்டும்... அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின்போது, அரசுத் துறை வங்கிகளுக்கு தேவையான தெளிவான உத்தரவுகள் வழங்கப்படும், அவர்களின் தேவையற்ற குழப்பங்கள் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வங்கிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட நெறிமுறைகள் குறித்து ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கவர்னருடன் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X