For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது-228 பேர் பலி!

By Staff
Google Oneindia Tamil News

Air France
பிரான்ஸ்: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி வந்த ஏர்-பிரான்ஸ் நிறுவன விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

AF 447 என்ற அந்த விமானம் பிரேசிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு பாரிஸை அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு விமானத்தின் பல்வேறு முக்கிய மின்சார பாகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அந்த விமானத்தின் தானியங்கி கம்ப்யூட்டர்கள் பிரான்சில் உள்ள அந்த விமான நிறுவனத்தின் பராமரிப்புப் பிரிவுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பியபடி இருந்தது.

விமானம் மிக மோசமான வானிலையைக் கடந்ததாகவும், மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மின்சார எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்களை அனுப்பியது.

இதனால் அந்த விமானம் 2.33 மணிக்கே கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அதன் பின்னரே கம்ப்யூட்டர்கள் தகவல்களை அனுப்பியிருக்கலாம் என்றும் ஏர் பிரான்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் மிக நவீனமானது. பிரான்ஸ் வரும் வழியில் ஆப்பிரிக்கா-பிரேசில் இடையே வழக்கமான தீவிர காற்றோட்டம் காரணமாக ஏற்படும் அதிர்வுகளால் (turbulence) விமானத்தை இயக்குவது வழக்கமாகவே சிரமமானது தான் என்ற அவர், ஆனால், அது தான் காரணம் என்று இப்போதே சொல்லிவிட முடியாது என்றார்.

மேலும் அப் பகுதியில் கடும் மின்னல்-இடியோடு வானிலையும் மோசமாக இருந்துள்ளது. இதனால் மின்னல் தாக்கி விமானத்தின் மின் பாகங்கள் இயங்காமல் போய் விபத்து நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதியாகிவிட்ட நிலையில், அதிலிருந்த பயணிகளி்ன் உறவினர்கள், விமானம் வந்திறங்கியிருக்க வேண்டிய சார்லஸ் டி குலே சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

பிரேசிலில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமெரிக்க செயற்கைக் கோள்கள் மூலமும் விமான பாகங்களைத் தேடும் பணி நடக்கிறது.

விபத்துக்குள்ளானபோது அந்த விமானம் 35,000 அடி உயரத்தில் மணிக்கு 760 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.

தீப் பிழம்பை பார்ப்போம்-பிரேசில் விமானிகள்

இதற்கிடையே அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த TAM என்ற பிரேசில் விமான நிறுவனத்தின் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த பைலட்டுகள், அட்லாண்டிக் கடலில் இரவில் தீப் பிழம்பைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் 126 ஆண்கள், 82 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, 2 விமானிகள் உள்ளிட்ட 12 விமான சிபந்திகள் இருந்தனர் என ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என பிரான்ஸ் அதிபர் சர்கோசி தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கினாலும் கூட அதை அழகாக வெளியில் கடத்திவிட்டு பாதுகாப்பாக பறக்கும் ரகத்தைச் சேர்ந்தது தான் ஏர்பஸ் A330 விமானம். இது எப்படி மின்னலால் பாதிக்கப்பட்டது என்பது விமானத்துறை வல்லுனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முழு விசாரணைக்குப் பி்ன்னரே விபத்து குறித்து எந்த முடிவுக்கும் வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X