For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனவெறி-ஆஸி. கல்வித்துறைக்கு கடும் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மெல்போர்ன்: இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதால் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய கல்வித்துறைக்கு கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் உறவினர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு சீக்கிய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 90 ஆயிரம் இந்தியர்கள் படித்து வருகின்றனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து தான் அங்கு அதிக மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர். இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

1,447 வழக்குகள்...

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய இந்திய மாணவ கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கவுதம் குப்தா தெரிவித்துள்ளார்.

இதை விக்டோரியா மாநில போலீசாரும் உறுதி செய்துள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு 1,447 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு அல்லது வழிப்பறி செய்யப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,082 ஆக இருந்தது.

ஆஸி. மீதிருந்த மரியாதை போச்சு...

இந்நிலையில் இந்த விவகாரத்தால் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் என ஆஸ்திரேலிய தனியார் கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் தேசிய செயல் அதிகாரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இனவெறித் தாக்குதல் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும். இங்கு படிக்க வரும் மாணவர்களில் ஐந்தில் ஒருவர் இங்கேயே தங்கிவிடுவர். ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் ஆஸ்திரேலியா மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையை குறைத்திருக்கும் என்றார்.

லாபம் தரும் 3வது பெரிய வியாபாரம்...

ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஜூலியா கில்லர்டு கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவது என்பது ஒரு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வியாபாரம் மாதிரி தான். கடந்த 2008ல் இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 60,000 கோடி வருமானம் கிடைத்தது. நிலக்கரி மற்றும் இரும்பு ஏற்றுமதியையடுத்து அதிக வருமானத்தை வெளிநாட்டிலிருந்து படிக்க வரும் மாணவர்கள் தான் தந்துள்ளனர்.

கடந்த 1997ல் 10 சதவீதமாக இருந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

ஆஸி பிரதமர்-மன்மோகனுடன் பேச்சு...

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறுகையில், இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இந்த செயலுக்கு காரணமானவர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இது தொடர்பாக பேசினேன். அவரிடம் இந்திய மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் என தெரிவித்தேன்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையை இருக்கும் நல்லுறவுக்கு பங்கம் விளைவித்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

வலைவீசும் நியூசிலாந்து...

ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடந்து வருவதையடுத்து இந்திய மாணவர்கள் நியூசிலாந்து வந்து படிக்கலாம் என அந்நாட்டு அரசு இந்திய மாணவர்களுக்கு வலைவீசி வருகிறது.

இது குறித்து நியூசிலாந்து கல்வி துறையின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு நேர் எதிரான நாடு என்பதை நாங்கள் இந்தியர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். இங்கு ஆஸ்திரேலியா போன்று இனவெறி தாக்குதல் இருக்காது என்பதை இந்தியாவில் இருக்கும் நியூசிலாந்து வர்த்தக மையங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் விளம்பரம் செய்வோம். இந்திய மாணவர்கள் இங்கு வந்து பாதுகாப்பாக படிக்கலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X