'கள்': அனுமதி மறுப்பு-பாஜக-கொமுக எதிர்ப்பு
கோவை: கள் இறக்க அரசு அனுமதி மறுத்ததற்கு பாஜக மற்றும் கொங்கு முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோவையில் கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு கள் இறக்க மற்றும் விற்க தடை விதித்துள்ளது. இதையடுத்து போலீசார் கள் இறக்கும் இடங்களில் சோதனையிட்டு கள் இறக்குபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் சமீபத்தில் கோவை சூலுருக்கு அருகில் இருக்கும் முத்துகவுண்டர்புதூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி கள் இறக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து கொங்கு முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் சுமார் 300 பேரை கைது செய்து, போராட்டத்தை அடக்கினர்.
தொண்டாமுத்தூரில் போலீசார் நேற்று காலை அதிரடியாக சோதனை செய்து இறக்கி வைக்கப்பட்டிருந்த கள் பானைகளை உடைத்து நொறுக்கினர். தென்னை மரங்களில் தொங்கவிடப்பட்டிருந்த கள் பானைகளையும் உடைத்தனர். இதேபோல் துடியலூர் பகுதியில் கள் விற்ற 10 பேரை கைது செய்தனர்.
டாஸ்மாக்கை மூடுங்கள்-பாஜக...
கொங்கு முன்னேற்ற கழகத்தை தொடர்ந்து பாஜகவும் கள் இறக்குபவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில பார்வையாளரும் சமீபத்திய தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவருமான பாபா ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தலுக்கு முன் விவசாயிகள் 'கள்' இறக்கி விற்பனை செய்ததை மாநில அரசு கண்டு கொள்ள வில்லை. அரசு அனுமதியளித்ததால் தற்போது விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
அரசு தேர்தல் முடிந்தவுடன் பழிவாங்கும் விதமாக விவசாயிகளை காவல் துறையின் மூலம் கைது செய்கிறார்கள். இது விவசாயிகளுக்கு எதிரான துரோக செயலாகும். இந்த போக்கை கைவிட வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கள் இறக்க, விற்பனை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும். இல்லையென்றால் கள் இறக்க அனுமதிக்கவும், டாஸ்மாக் கடைகளை மூடவும் வலியுறுத்தி பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றார்