For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு பலவீனமா? ராமதாஸுக்கு என்னமோ ஆகி விட்டது: ஆற்காடு வீராசாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. தற்போது பலகீனமாக ஆகிவிட்டதாகவும், அதனால் மாநில சுயாட்சி பிரச்சினையை தலைவர் பேசுவதாகவும் ராமதாஸ் கூறுகிறார். இவர் ஏதோ பாராளுமன்ற தேர்தலில் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி பெற்றுவிட்டதைப் போலவும், தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பலகீனப்பட்டு விட்டதைப் போலவும் சொல்லியிருக்கிறார். தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதையே மறந்துவிட்டு, ராமதாஸ் சொல்லியிருக்கிறார் என்றால், அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

இது குறித்து வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க.வைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரை -சட்டப் பேரவை உறுப்பினராக வேகமாகப் பணியாற்றக் கூடியவரைச் சந்தித்தேன்.

அவர் அப்போது தங்கள் தோல்வியைப் பற்றிக் கூறும்போது, எங்கள் தோல்விக்கு யாரும் காரணம் இல்லை, டாக்டர் அய்யா ஒருவர் மட்டும் தான். அவர் விட்ட அறிக்கைகளும், உங்கள் தலைவர் கலைஞரை தாறுமாறாக ஏசிப் பேசியதும் தான் எங்களுக்கு எதிர் விளைவை ஏற்படுத்தி விட்டன. இந்த உண்மையை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே உணருகிறார்கள். ஆனாலும் அவர் இன்னும் தன் அறிக்கையையும், பேட்டியையும் விடமாட்டேன் என்கிறார். விநாச காலம் விபரீத புத்தி என்றார்.

ஓநாய் அழுத கதை...

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு தர வேண்டுமாம், சோனியா சொல்ல வேண்டும் என்பதை விட தலைவர் கலைஞர் அந்தப் பதவியை தானாகவே முன் வந்து அளிக்க வேண்டுமாம். சொல்வது யார் தெரியுமா? ராமதாஸ் தான். அவருக்கு இதிலே என்ன அக்கறை? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

அதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு? பா.ம.க.விற்கு மத்தியிலே மந்திரி பதவி கொடுத்து, முக்கிய துறையும் கொடுத்து, அதன்மூலம் ஏராளமான வசதிகளையும் பெற வழி வகுத்த காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.விற்கும் துரோகம் செய்துவிட்டு- ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு ஆலோசனை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? நாங்கள் எப்படிப் போனால் இவருக்கு என்ன? எங்களிடையே சமரசம் செய்து வைக்கும்படி இவரிடம் கேட்டோமா? தர்ம ஆலோசனை வழங்குவதற்கு இவர் யார்?

இதை விட அவமானம் தேவையா?

தேர்தலில் தோற்ற பிறகு, மரியாதைக்குக் கூட இவரை பார்க்க ஜெயலலிதா அனுமதி தரவில்லை. தொலைபேசியிலே கூட பேசவில்லை. அது மாத்திரமல்ல, அந்த அணியிலே இருந்த மற்றக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்துப் பேசிய ஜெயலலிதா, இவரை மட்டும் சந்திக்கவில்லை என்ற ஒன்றே டாக்டர் ராமதாசின் தகுதி என்ன என்பதை நாட்டிற்கு உணர்த்தவில்லையா? இதைவிடவா வேறு ஒரு அவமானம் வேண்டும்?

எங்கள் அணியிலேயே இல்லாமல் எதிரணியில் போட்டியிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் கட்சித் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள் மூலமாகவும் தெரிவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் எங்கள் தலைவர் அவர்களிடமெல்லாம் பழகிய பாங்கு அப்படி. ஏன்? டாக்டர் ராமதாஸ், நீங்களே உங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள். ஜெயலலிதாவின் அணியிலே இருந்தபோது தங்களை அவர் எந்த அளவிற்கு அவமானப்படுத்தினார் என்பதையும் நீங்கள் பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் தலைவரோடு உறவாக இருந்தபோதும் நீங்கள் எத்தனையோ முறை சந்தித்திருக்கிறீர்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாதா?

தி.மு.க. தற்போது பலகீனமாக ஆகிவிட்டதாகவும், அதனால் மாநில சுயாட்சி பிரச்சினையை தலைவர் பேசுவதாகவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இவர் ஏதோ பாராளுமன்ற தேர்தலில் நின்ற இடத்தில் எல்லாம் வெற்றி பெற்றுவிட்டதைப் போலவும், தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பலகீனப்பட்டு விட்டதைப் போலவும் சொல்லியிருக்கிறார். தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதையே மறந்துவிட்டு, தி.மு.க. பலகீனப்பட்டுள்ளதாக ராமதாஸ் சொல்லியிருக்கிறார் என்றால், அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டது பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருப்பது தான் வேதனையிலும் வேதனை. ஸ்டாலினுக்கு எந்த அனுபவமும் கிடையாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். தமிழகத்திலே உள்ள அத்தனை பேரும் வரவேற்ற அறிவிப்பு அது. அனைவரும் கட்சி சார்பற்ற முறையிலே பாராட்டுகிறார்கள்.

ஏன் டாக்டர் ராமதாசின் மகனான டாக்டர் அன்புமணி ராமதாசும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஸ்டாலினின் நியமனத்தை வரவேற்றிருக்கும்போது- அதைத் தாங்கிக்கொள்ள மனம் வராத டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலினுக்கு அனுபவம் கிடையாது என்று சொல்லலாமா? பா.ம.க. கட்சியிலே உள்ள மற்ற நண்பர்களைக் கேட்கிறேன். டாக்டர் ராமதாசின் இந்தக் கருத்து உங்களுக்கெல்லாம் உடன்பாடானது தானா?

33 ஆண்டுகளுக்கு முன்பு மிசா கைதியாக சிறையிலே அடைபட்டு மு.க.ஸ்டாலின் அடிபட்டதை நேரிலே கண்டவன் நான். அதைவிட வேறு என்ன அனுபவம் வேண்டுமென்று நினைக்கிறார். அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தது இல்லையா? அமைச்சராக இருந்து செயல்பட்டதில்லையா? அவருடைய துறையிலே செய்யப்பட்ட சாதனைகளைப்போல வேறு எந்தத் துறையிலும் நடைபெற்றதில்லை என்பதை அமைச்சர்களாகிய நாங்களே அறிவோமே?

அன்புமணிக்கு என்ன அனுபவம்?

அவர் அளவிற்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது இரவும், பகலும் உழைத்தவர்கள் யார்? ராமதாஸ் சொல்லத் தயாரா? இன்னும் நான் அவரைக் கேட்கிறேன். அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் மத்தியிலே அமைச்சராக ஆனாரே? அவருக்கு என்ன அனுபவம்? அவர் எத்தனை ஆண்டுகள் அதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ பணியாற்றினார்? நாம் கேட்க வேண்டு மென்று நினைக்காவிட்டாலும், ராமதாஸ் அல்லவா நம்மை இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க வைக்கிறார்.

பேசிப் பேசித்தான்...

அன்புமணி ராமதாஸ் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறுகிறார். ஆனால் அனுபவமுள்ள இவர், ஸ்டாலினுக்கு என்ன அனுபவம் என்று கேட்கிறார் என்றால், அரசியல் நாகரீகம் எங்கேயிருக்கிறது. இப்படிப் பேசிப் பேசித் தானே போட்டியிட்ட ஏழு இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைமையில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

இன்னும் அதே பாணியிலே பேசுகிறீர்களே, நியாயம் தானா? உங்களுடைய பேச்சுகளும், செயல்பாடுகளும், தோழமைக் கட்சியாக இருந்த தி.மு.க. விற்கு துரோகம் செய்து கொடுத்த பேட்டிகளும் உங்களுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தந்து மூலையிலே உட்கார வைத்திருக்கிறது.

திருந்தாவிட்டால் என்ன செய்வது?

உங்களோடு தோழமையாக இருந்த சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் எல்லாம் கூட தலா ஓரிடத்திலே வெற்றி பெற்றிருக்கின்ற நேரத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்த மாபெரும் தலைவர் அல்லவா நீங்கள். இவ்வளவிற்கும் பிறகு திருந்தவில்லை என்றால் என்ன தான் செய்வது? ஆடுகின்றவரின் காலும், அறிக்கை விடுகின்றவரின் கையும் சும்மா இருக்காது என்று தான் புதுமொழியைக் கொண்டுவர வேண்டுமா? என்று கூறியுள்ளார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X