For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியாறு அணை மோசமாக உள்ளது-கேரளா

By Staff
Google Oneindia Tamil News

Mullai periyar
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று கூறியுள்ளது கேரள அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு.

முல்லைப் பெரியாறு அணையின் சிறப்புப் பிரிவு தலைமை அதிகாரி பரமேஸ்வரன் நாயர் தலைமையிலான நிபுணர் குழு பெரியாறு அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

பின்னர் குமுளியில் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியாறு அணை பலவீனமாகி வருகிறது. அதன் நிலை மோசமாக உள்ளது. இதனால் ஏராளமான உயிருக்கும், சொத்துக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எங்களது அறிக்கையை ஒரு வாரத்திற்குள் கேரள அரசிடம் வழங்குவோம்.

நீர்க்கசிவு ஏற்பட்ட இடங்களில் அதை சரி செய்யப்பட்ட பூசப்பட்ட பூச்சு உதிர்ந்து விட்டது. இதுவே அணையின் மோசமான நிலைக்கு சிறந்த உதாரணமாகும். அந்தப் பகுதியில் இன்னும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தண்ணீரின் அழுத்தத்தைக் கணக்கிட தமிழக அரசு வைத்துள்ள கருவி அறுதப் பழசாக உள்ளது. அது செயல்படாத நிலையிலும் உள்ளது.

மேலும் தேவையான இடங்களில் அது நிறுவப்படவில்லை. இதனால் எல்லா இடங்களிலும் அந்தக் கருவி ஜீரோ என்ற அளவையே காட்டுகிறது.

மொத்தம் 14 இடங்களில் நீரின் அழுத்தத்தை அறியும் கருவிகளை தமிழக அரசு நிறுவியுள்ளது. ஆனால் இதனால் ஒரு பயனும் இல்லை.

தற்போது பெரியாறு அணை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. எனவே எங்களது அறிக்கையை நாங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். தமிழக அரசிடமும் அறிக்கையை அளிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அதிகாரிகளுடன் மோதல்...

முன்னதாக பெரியாறு அணையின் கேலரி பகுதிக்கு இந்தக் குழுவினர் வந்தபோது தமிழக அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பொதுப்பணித்துறையைச் சேராத அதிகாரிகள் என்று தமிழக அதிகாரிகள் அவர்களது வருகைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையடுத்து கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் தமிழக பொதுப்பணித்துறை செயலாளரைத் தொடர்பு கொண்டு கேரள குழுவினரை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து கேரள குழுவினர் பிற்பகல் 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டனர்.

பெரியாறு அணையை இடித்து புதிய அணை:

இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் வேண்டும் என்று மக்களவையில் இன்று கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி்க்கள் கோரிக்கை வைத்தனர்.

எம்பியான பி.டி. தாமஸ் பேசுகையில், 1858ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த அணை ஆபத்தான நிலையில் உள்ளது. கேரள மக்கள் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். அந்த அணை கேரள மக்கள் மீது கத்தியைப் போல தொங்கிக் கொண்டுள்ளது.

எனவே, அந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும். இதற்காக இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த உயர்நிலைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அதே சமயம் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கேரளா எதிர்க்கவில்லை என்றார்.

புதிய அணை கட்ட வேண்டும் என்ற அவருடைய இந்த கோரிக்கைக்கு அதிமுக எம்பியான தம்பிதுரை உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை நல்ல நிலையில் உள்ளதாக மத்திய நிபுணர் குழு கூறினாலும் அதை கேரள அரசு ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X