For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றம்-தண்ணீர் வினியோகம் துவக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று குடிநீ்ர் வினியோகம் துவங்கியது.

ரூ. 616 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட இத் திட்டத்தின் மூலம் 20 லட்சம் மக்கள் பயனடைவர்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு 2007ம் ஆண்டு பரமக்குடியில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டம் 2 ஆண்டுகள் 5 மாதங்களில் நிறைவடைந்துள்ளது. இன்று முதல் குடிநீர் வினியோகமும் தொடங்கியது.

ராமநாதபுரம் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் குடிநீர் வினியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

சேதுவையும் நிறைவேற்றுவோம்..:

பின்னர் அவர் பேசுகையில், 1989ம் ஆண்டு நீலகிரியில் மலர் கண்காட்சியை திறந்து வைக்க சென்றபோது, வறண்டு கிடந்த ராமநாதபுரம் மாவட்டத்தை எண்ணிக் கவலைப்பட்டேன். அதன் விளைவாக இந்த திட்டம் உருவானது. கடந்த 2006ம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.616 கோடி மதிப்பீட்டில் 30.01.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இரண்டே ஆண்டுகளில் இந்த திட்டம் வேகமாக முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த திட்டத்தை விரிவாக செயல்படுத்திய உள்ளாட்சித் துறையின் அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துகிறேன்.

நீண்டகால கனவான இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது போல, 150 ஆண்டுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வந்த சேது சமுத்திர திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

ரூ. 2,427 கோடி மதிப்பீட்டில் தம்பி டி.ஆர்.பாலுவின் முயற்சியால் ஏறத்தாழ 60 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் சிலரது சூழ்ச்சியால் தடைபட்டுள்ள சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற புதிய மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

சேது சமுத்திர திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உள்பட தென் தமிழகம் முழுவதும் தொழில்கள் வளர்ச்சி பெறும்; வேலை வாய்ப்பு பெருகும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும். எனவே இந்த திட்டத்தை மத்திய அரசின் துணையோடு விரைவில் நிறைவேற்றி முடிப்போம்.

திமுக ஆட்சி மக்கள் பிரச்சனைகளில் கவலை கொண்டு அவற்றை உடனடியாக செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரத்தை செழிப்பும், வளமும் அடைய செய்ய அனைவரும் சூளுரை ஏற்போம் என்றார்.

நீரை வீணாக்காதீர்கள்.. ஸ்டாலின்:

முன்னதாகப் பேசிய ஸ்டாலின், இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க உதவிய அதிகாரிகளை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். இதன் மூலம் கிடைக்கும் குடிதண்ணீரை வீணாக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும். இத் திட்டத்தின் 2வது கட்டப் பணிகளும் விரைவில் நிறைவேற்றப்பட்டு மேலும் பல ஊர்களுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்வோம் என்றார்.

இத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, சிவகங்கை ஆகிய 5 நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, அபிராமம், இளையான்குடி உள்பட 11 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள், 3,163 ஊரகக் குடியிருப்புகளில் மொத்தமுள்ள 20 லட்சம் பேர் பயன் பெறுவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X