For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2011 சட்டசபை தேர்தலுக்குள் காங்.கை வலுப்படுத்துவோம் - ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வலுவான கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்க பாடுபடுவோம். வீட்டுக்கு ஒரு இளைஞன் அல்லது இளம் பெண்ணை கட்சியில் சேர்ப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரும் சீசன் இது. சில நாட்களுக்கு முன்பு ஜி.கே.வாசன் வந்தார். அவரை தடபுடலாக வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இன்று ப.சிதம்பரம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். வாசனை விட தூக்கலான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதால் சிதம்பரம் ஆதரவாளர்களின் வரவேற்பு படு பலமாக இருந்தது.

குதிரைப்படை - பூரண கும்பம்...

ப.சிதம்பரம் வந்தபோது, வாண வேடிக்கைகள் முழங்க கேரளாவின் கெண்டை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. குதிரை வீரர்களின் அணி வகுப்பு நடத்தப்பட்டது.

சத்தியமூர்த்தி பவன் வாசலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு ப. சிதம்பரம் வந்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரிசையாக சென்று அவருக்கு சால்வைகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

கராத்தே கொடுத்த வீர வாள்..

சென்னை மாநகர முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆளுயர மாலை அணிவித்து சிதம்பரத்திற்கு வீர வாள் பரிசளித்தார்.

வரவேற்பை முடித்துக் கொண்ட பின்னர், ப.சிதம்பரம் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்திய நாடு மகிழ்ச்சி அடையும் வகையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் பங்களிப்பாக 28 இடங்களில் வெற்றி தேடி தந்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தடம் புரளாத தமிழகம்..

தமிழ்நாடு காட்டும் வழியில் தான் இந்தியா என்றும் செல்லும். தமிழ்நாடு என்றும் தடம் புரளாமல் சென்று கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்கள் தடம் புரண்டன இப்போது அந்த மாநிலங்கள் நம்பக்கம் வந்துள்ளன.

இந்தியா முழுவதும் ஏற்பட்ட எழுச்சி காரணமாக மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்துள்ளது. நமது அடுத்த இலக்காக 5 ஆண்டுகள் கழித்து நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை தனிப்பெரும் கட்சியாக வளர்க்க வேண்டும். தோழமை கட்சிகளும் வெற்றி பெற வேண்டும்.

சோனியாகாந்தி கட்சி தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு பாராளுமன்றத்தில் 116 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. படிப்படியாக உயர்ந்து தற்போது 206 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.

தள்ளாடாத மன்மோகன் ஆட்சி...

கடந்த 5 ஆண்டுகளில் நேர்மையாகவும், கண்ணியமாகவும், மிகவும் திறமையாகவும், அடுத்த தலைமுறையை மனதில் வைத்து தடுமாறாமல் தள்ளாடாமல் ஆட்சி நடத்த முடியும் என மன்மோகன் சிங் நிரூபித்துள்ளார்.

உலகம் முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதிலும் இந்திய பொருளாதாரம் விழாமல் இருக்க காரணம் மன்மோகன்சிங்க்கின் மிகச்சிறந்த நடவடிக்கைகள் தான். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

நமது பல தலைவர்கள் மற்றும் லட்சோப லட்சம் தொண்டர்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பாடுபட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, டி. சுதர்சனம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வலுவான கட்சியாக மாற வேண்டும்...

தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரசை வலிமையான கட்சியாக வளர்க்க வேண்டும் என்பதே நமது லட்சியமாகும். தோழமை கட்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம். ஒவ்வொருவரும் அவரவர் கட்சியை வலுப்படுத்துவது போல 2011-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை வலிமையான சட்ட மன்ற கட்சியாக வளர்க்க வேண்டும்.

இளம் தலைவர் ராகுல் அழைப்பை ஏற்று வீட்டுக்கு ஒரு இளைஞர்கள் அல்லது இளம் பெண்களை காங்கிரசில் உறுப்பினர்களாக சேருங்கள். இளைஞர்களே காங்கிரசையும், இந்தியாவையும் வலுப்படுத்த வாருங்கள்.

அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிற ஒரே கட்சி காங்கிரஸ்தான். இளைஞர்களே, மாணவர்களே எல்லோரும் வாருங்கள். வலிமையான பாரதத்தை உருவாக்குவோம் என்றார் சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் வருகையையொட்டி சத்தியமூர்த்தி பவன் அல்லோகல்லப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அப்பகுதி முழுவதும் சிதம்பரத்தின் கட் அவுட், பேனர்களால் தடபுடல்படுத்தியிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X