For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில் தொடங்க லைசென்ஸ் பெறுவதில் ஒற்றைச் சாளர முறை - ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கத் தேவையான உரிமம் வழங்க ஒற்றைச் சாளர முறை அமல்படுத்தப்படும். இதுதொடர்பான சட்ட மசோதா வருகிற சட்டசபைத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து, தொழில் கூட்டமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார வீழ்ச்சி, உலகளவில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டிலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜவுளி, தோல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.

உலகளவில் பொருளாதார பின்னடைவு இருந்தாலும், முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அண்மையில் தமிழகம் வந்திருந்த 13வது மத்திய நிதிக் கமிஷன் தலைவர் விஜய் கேல்கர், முதல்வரை சந்தித்த போது, 'இந்தியாவில் சிறந்த வளர்ச்சி மற்றும் செயல்திறன் மிக்க மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்" என்று கூறினார்.

தமிழகத்தில் தொழில் திட்டங்கள் அமைக்க 3 ஆண்டுகளில் 22 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 8 தொழில் திட்டங்களுக்கு தொகுப்பு சலுகை வழங்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 30 தொழில் திட்டங்கள் மூலம் ரூ.38700 கோடி முதலீடும், 2 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இந்த ஆண்டில் தமிழகத்தில் செய்ய கருதப்பட்ட முதலீடு, ரூ.1,68,000 கோடிக்கு அதிகரித்துடன் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 41 சதவீதம் உயர்ந்துள்ளது. சில நிறுவனங்களில் தொழில் அமைதிக்கு பாதகமான சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 2008-2009 தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது, 'ஒற்றை சாளர அடிப்படையில் அனுமதி வழங்க சட்டம் இயற்றப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய தொழிற்சாலை தொடங்க தேவையான அனுமதியை விரைந்து வழங்கும் வகையில் ஒற்றை சாளர முறைக்கான சட்ட மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும்.

மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மீண்டும் கொண்டு வர அரசு முனைப்போடு செயல்படுகிறது. தன் பயன் மின்உற்பத்தி ஆலைகளில் இருந்து 135 மெகாவாட் மின்சாரத்தை வாங்கியதுடன் உடனடி தேவைக்காக 500 மெகாவாட் மின்சாரத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம், தேசிய அனல்மின் நிறுவனம், மின் வாரியத்தின் வல்லூர் கூட்டு திட்டம், வடசென்னை அனல்மின் திட்டம் மற்றும் இதர திட்டம் மூலம் 2010-2011க்குள் 2,100 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இந்த நிதி ஆண்டுக்குள் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுக் காலத்தில் 6,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

தோல் தொழிலில் தமிழகத்தின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. ஏற்றுமதியில் பங்கு 36 சதவீதம். இந்த தொழில் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தோல் தொழில் தேவைக்காக 6 பொது சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க திட்ட செலவில் 15 சதவீதத்தை, ரூ.25 கோடி உச்சவரம்புக்கு உட்பட்டு அளிக்க அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிலையம் மூலம் தோல் தொழில்நுட்ப வடிவமைப்பில் பயிற்சி அளிக்க சென்னை அருகே பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 15 ஏக்கரை தமிழக அரசு இலவசமாக தந்துள்ளது.

ஜவுளித் தொழிலில் 20 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பொது கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க ரூ.750 கோடி நிதியுதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கழிவுகளை கடலில் கலப்பதற்கான திட்டத்தை ரூ.800 கோடியில் செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராக உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொழில் பகுதிக்கு சாலை இணைப்புகளை மேம்படுத்த, ஸ்ரீபெரும்புதூர் - சிங்கபெருமாள் கோயில் மற்றும் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் 58 கி.மீ. தூரம் ரூ.215 கோடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரை 6 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

இதேபோல் சென்னை எண்ணூர் துறைமுகம் வரை 30 கி.மீ. சாலையும் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ. சாலையும் மேம்படுத்தப்படும்.

மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரை சரக்கு போக்குவரத்துக்கான மேம்பால சாலை அமைக்கும் திட்டம், மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் செயலாக்கப்பட்டு வருகிறது. தொழில் துறையின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும். தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெற உங்கள் ஆலோசனைகளை வழங்க கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X