For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்.குக்கு ஆட்சியில் பங்கு தர திமுக முடிவு?-தங்கபாலு, சுதர்சனம் டெல்லி விரைவு

By Staff
Google Oneindia Tamil News

Thangabalu and Sudarsanam
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு மதிப்பளிக்க திமுக முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழக ஆட்சியில் பங்கு தர திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் டெல்லி விரைந்துள்ளனர்.

சமீபத்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸின் கோரிக்கையை சற்றும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது திமுக. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தரப்பும் வலியுறுத்தாமல் இருந்தது. அப்படியே வலியுறுத்தும் சந்தர்ப்பம் எழுந்தபோதும் கூட அதை சாதுரியமாக தவிர்த்து விட்டது திமுக.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. மத்தியில் திமுகவின் தயவு இல்லாமல் கூட ஆட்சியை சிறப்பாக நடத்தும் அளவுக்கு பலமாக உள்ளது காங்கிரஸ். இதன் காரணமாகவே முக்கிய துறைகளை இம்முறை திமுகவுக்கு தராமல் வைத்துக் கொண்டது காங்கிரஸ். அதுகுறித்து கடந்த முறை போல பெரிய போராட்டத்தில் எல்லாம் இந்த முறை திமுக இடம் பெறவில்லை.

இந்த நிலையில்தான் மத்தியில் நாம் திமுகவுக்கு பங்கு கொடுத்துள்ளோம். அதேபோல மாநிலத்தில் திமுகவும் நமக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக காங்கிரஸ் தரப்பில் பெரிதாக எழத் தொடங்கியது.

இந்தக் கோரிக்கைக்கு முதல் முறையாக காங்கிரஸ் மேலிடத்தில், ராகுல் காந்தி ரூபத்தில் பேராதரவு கிடைத்தது. அதில் தவறு இல்லை என்று ராகுல் காந்தி கட்சித் தலைவர்களிடம் கூறியுள்ளார். தற்போது ராகுல் காந்தி என்ன சொன்னாலும் கேட்கும் மன நிலையில்தான் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. எனவே தமிழக ஆட்சியில் பங்கு என்ற விவகாரத்திலும் காங்கிரஸ் ராகுலின் கருத்தை ஆமோதித்ததாக தெரிகிறது.

இதையடுத்து சமீபத்தில் இதுதொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அது ரத்து செய்யப்பட்டு விட்டது.

மாமல்லபுரத்தில் முடிவெடுத்த கருணாநிதி..

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை குறித்து விவாதித்து முடிவெடுக்க முதல்வர் கருணாநிதி சமீபத்தில் மாமல்லபுரம் சென்றார். அங்கு வைத்து கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் அவர் விவாதித்தார். அப்போது ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு தருவது என தீர்மானமாகியதாக தெரிகிறது.

அடுத்து இடைத் தேர்தல் வரவுள்ளது. தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸும் ஆட்சியில் பங்கு பெற்றால் தேர்தலை சந்திப்பது சுலபமாக இருக்கும் என்ற கருத்தில் திமுக உள்ளதாம்.

மேலும் திமுக மூத்த தலைவர்களும் கூட காங்கிரஸுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் போன்ற திமுகவுக்கு இணக்கமாக செயல்படக் கூடியவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவியைத் தரலாம். இதுகுறித்து காங்கிரஸிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட வேண்டும் என்றும் அவர்கள் கருணாநிதியை உஷார்படுத்தியுள்ளனராம்.

காங்கிரஸ் அமைச்சரவையில் சேர்ந்தால், தற்போது உள்ள சில அமைச்சர்களின் பதவி பறி போகும். அப்படிப் பறி போகப் போவது எந்தெந்த அமைச்சர்கள் என்ற பேச்சு இப்போதே அடிபடத் தொடங்கி விட்டது.

பெரும்பாலும் பொங்கலூர் பழனிச்சாமி, கோ.சி.மணி, பரிதி இளம்வழுதி, ராமச்சந்திரன் ஆகியோரின் பெயர்கள் பெரிதாக அடிபடுகின்றன.

கோ.சி.மணியின் உடல் நலனைக் காரணம் காட்டி அவர் தூக்கப்படலாம். பழனிச்சாமியின் செயல்பாடுகளில் கருணாநிதிக்கு திருப்தி இல்லை. பரிதி மீதும் இதேபோன்ற அதிருப்தியில்தான் கருணாநிதி இருப்பதாக தெரிகிறது. இவர் தற்போது ஸ்டாலினின் நம்பிக்கை வட்டாரத்திலும் இல்லை. ராமச்சந்திரனுக்கு ஊரில் கெட்ட பெயர், கட்சியினர் மட்டத்திலும் கெட்ட பெயர். முதல்வரிடத்திலும் இவருக்கு நல்ல பெயர் இல்லை.

டெல்லி விரைந்தார் தங்கபாலு

இந்த நிலையில் தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர். கட்சி மேலிட அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது.

அவர் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார் சோனியா காந்தியையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது. அவருடன் சுதர்சனமும் சென்றுள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் சென்னை திரும்பும் இருவரும், கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் டெல்லி பேச்சு விவரத்தை தெரிவிக்கவுள்ளனர்.

தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஓரிரு நாட்களில் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு குறித்து தெரிய வரும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X