For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழமொழிகளால் அமளி-அதிமுக வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

Veerapandi
சென்னை: சட்டசபையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதிமுக உறுப்பினர் பாண்டுரங்கன் ஆகியோர் கூறிய பழமொழிகள் காரணமாக பெரும் அமளி ஏற்பட்டது.

அமைச்சர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நிரந்தரமாக நீக்காததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்திற்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று பதிலளித்தார்.

அப்போது அவர் ஒரு ஒரு பழமொழியைக் கூறினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது அதிமுக உறுப்பினர் பன்னீர்செல்வம் எழுந்து, விவசாய தொழிலாளர் நல வாரியம் குறித்து சில விளக்கங்களை அளித்தார்.

இதற்கு அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி, பெரியசாமி ஆகியோர் பதிலளித்தனர்.

இதையடுத்து எழுந்த அதிமுக உறுப்பினர் பாண்டுரங்கன், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்தபடி ஒரு பழமொழியைக் கூறினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, நீங்கள் ஏதோ விவசாயத்துறை துறை சம்பந்தமாக பேச போகிறீர்கள் என்று பார்த்தால் தேவையில்லாமல் ஒரு வார்த்தையை கூறுகிறீர்கள். இந்த வார்த்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது என்றார்.

அப்படியானால் வீரபாண்டி கூறிய பழமொழியையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இதற்கு பதிலளித்த வீரபாண்டி ஆறுமுகம், என்னைப் பார்த்து பாண்டுரங்கன் ஒரு வார்த்தை கூறினார். ஆனால் நான் யாரையும் குறிப்பிட்டு அந்த பழமொழியை சொல்லவில்லை. அப்படி சொல்லாதபோது இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்றார்.

இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகமும், பாண்டுரங்கனும் நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில அதிமுக உறுப்பினர்களும் பாண்டுரங்கனுடன் சேர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி ஆறுமுகம் அவர்களை பார்த்து, இதையெல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இதனால் அதிமுகவினரின் கூச்சல் மேலும் அதிகமானது.
அவையில் பெரும் அமளியும், கூச்சலும், குழப்பமும் நிலவியது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அவையின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மற்றொரு மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் நின்று கொண்டே அமைச்சர் கூறியதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

அதிமுகவினருக்கு ஆதரவாக பாமக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று அமைச்சரின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர்.

அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு,

விவசாயத்துறை அமைச்சர் கூறிய ஒரு வார்த்தையை எதிர்த்து அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரம் கொண்டு பிரச்சனையை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் எதிர்க்கட்சியினரை ஓநாய் என்று கூறியிருந்தால் அது தவறு. அது அவைக் குறிப்பில் இருக்க வேண்டிய வாசகம் இல்லை.

அதே சமயம் எந்த கட்சியினரையும் குறிப்பிடாமல் பொதுவாக பழமொழியை கூறியதால் அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலையில் இந்த வாசகம் ஐயத்திற்கு உரியதாக இருப்பதால் நாளை வரையில் அந்த வாசகம் இடம் பெறாமல் உத்தரவிடலாம்.

அவை நடவடிக்கை குறிப்பை சபாநாயகர் வாங்கிப் பார்க்கலாம். வீரபாண்டி ஆறுமுகம் பொதுவாக கூறியிருந்தால் அது அவைக் குறிப்பிலே இடம் பெறலாம்.

பொதுவாக ஓநாய்கள் என்று கூறியதற்காக ஓநாய்கள்தான் கவலைப்பட வேண்டும். அவையிலே உள்ள எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை.

எனவே நாளை வரை பொறுத்திருந்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். அதுவரை அந்த வாசகத்தை அவைக் குறிப்பில் இடம் பெறாமல் ஒத்திவைக்கலாம். எதிர்க் கட்சிகள் இந்த கிளர்ச்சியையும் ஒத்திவைக்கலாம் என்றார்.

ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து நின்று கொண்டு, வீரபாண்டி ஆறுமுகம் கூறியதை நிரந்தரமாக நீங்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர்.

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, எந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இடம் பெற செய்ய வேண்டும், அதிலிருந்து எடுக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் எனக்கு உத்தரவிட முடியாது. இந்த வார்த்தை அவைக் குறிப்பில் நாளை வரை இடம் பெறாது.

அவை நடவடிக்கையை பார்த்து நாளை நான் முடிவு செய்வேன்.அது வரையில் அமைதியாக இருங்கள் என்றார்.

ஆனால் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து நின்று கொண்டே 'சர்வாதிகாரி சபாநாயகர் ஒழிக' என்று கோஷமிட்டனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து, சபாநாயகரை ஒழிக என்று கூறி கூச்சல் போடும் இவர்களை சபையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர்களை அழையுங்கள் என்றார்.

துரைமுருகன் இவ்வாறு கூறியதும் அதிமுக உறுப்பினர்கள் உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.

அதிமுகவினரின் இந்த அமளியால் சுமார் ஒரு மணி நேரம் அவை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

957 பேர் பணி நிரந்தரம்:

பின்னர் பேசிய வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில்,

வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை இயக்ககம் மற்றும் தோட்டக்கலை இயக்ககத்தில் உள்ள பண்ணைகளில் 20,000க்கும் மேற்பட்ட பண்ணை பணியாளர்கள் தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் படிப்படியாக நிரந்தரம் செய்து வருகிறது.

இந்த ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் 957 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா 2 பகுதிகளாக அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.10 கோடியில் இவை உருவாக்கப்படும்.

ஏற்காட்டிலும் சுற்றுலா பயணிகளை கவர ஊட்டியில் உள்ளது போல அழகிய பூங்கா அமைக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X