For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு - ராஜ்நாத் சிங்

By Staff
Google Oneindia Tamil News

Advani with Rajnath
டெல்லி: பாஜகவின் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்துத்வா உள்ளிட் கொள்கைகளை பாஜகவால் விட்டுக் கொடுக்க முடியாது. அவற்றை தேர்தலின்போது எழுப்பியதிலும் தவறு இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை டெல்லியில் தொடங்கியது.

கூட்டத்தைத் தொடங்கி வைத்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பாஜகவின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இது கட்சிக்கு தேசிய அளவில் கிடைத்த தோல்வி அல்ல. மாநிலத்திற்கு மாநிலம் முடிவுகள் வேறுபட்டுள்ளன. எனவே தனிப்பட்ட யாரும் இந்தத் தோல்விக்கு மொத்த காரணம் என்று கூற முடியாது. யாராவது ஒருவர்தான் பொறுப்பு என்று கூறினால், அந்த ஒருவர் நானாக இருந்து விட்டுப் போகிறேன். தோல்வி குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும்.

நமது நாடு இரு கட்சி அரசியலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

தேர்தலின்போது இந்துத்வா கொள்கையை முனவைத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. தேர்தல் பிரசாரத்தில் பாஜக எழுப்பிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் வருத்தப்படவில்லை.

இந்துத்வா குறித்தோ அல்லது கலாச்சா தேசியவாதம் மீதான தீர்மானமாக தேர்தல் முடிவை எடுத்துக் கொள்ள முடியாது.

அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, உபாத்யாய் ஆகியோர் இந்தக் கட்சி கட்டியெழுப்பி வளர்த்தவர்கள். அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றார் சிங்.

இந்த இரண்டு நாள் கூட்டத்தில் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தேர்தல் தோல்வி தொடர்பாக பாஜக இரண்டாம் மட்டத் தலைவர்கள் இரண்டாக பிரிந்து காணப்படுவதால் செயற்குழுக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் ஒரு குழுவாக மாறியுள்ளனர். அதேசமயம், மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் கட்சித் தலைமையை கடுமையாக சாடி வருகின்றனர்.

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையான, பகிரங்கமான விவாதத்தை நடத்த வேண்டும் என இவர்கள் கோரி வருகின்றனர்.

இவர்களில் ஜஸ்வந்த் சிங்தான் முதலில் பூனைக்கு மணி கட்டினார். அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து யஷ்வந்த் சின்ஹாவும் போர்க்கொடி உயர்த்தினார். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜை அவர் குறி வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் சின்ஹா ராஜினாமா செய்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அருண் ஷோரி வடிவில் புது டென்ஷன் கிளம்பியது.

கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக, திறந்த மனதுடன் விவாதிக்க கட்சி ஏன் தயங்குகிறது?

கட்சியை சதிகாரர்கள் இப்போது கையகப்படுத்தி விட்டதாகவே தோன்றுகிறது. கட்சி மீதான நம்பகத்தன்மை வெகுவாக குறைந்து போய் விட்டது.

கட்சி நிர்வாகத்தை தெளிவாக, ஒளிவுமறைவின்றி நடத்த முயற்சியுங்கள். மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் உங்களுக்கு எழுதிய கடிதங்களை பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று காட்டமாக கூறியுள்ளார் ஷோரி.

இந்தக் கடிதத்தை நகல் எடுத்து ஜஸ்வந்த் சிங் நேற்று செயற்குழு உறுப்பினர்களிடம் விநியோகிக்க முயற்சித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ராஜ்நாத் சிங்கின் உத்தரவைத் தொடர்ந்து கடித விநியோகம் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இந்தப் பின்னணியில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் அரசியல் தீர்மானத்தை தாக்கல் செய்வார். அது பின்னர் நிறைவேற்றப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X