For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவினரின் மணல் கொள்ளை-'குண்டாஸ்' பாயும்: துரைமுருகன் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது அதிமுகவினர் தான். இந்தக் கொள்ளையில் ஈடுபடும் அதிமுகவினர் மீது குண்டர் சட்டம் பாயும் என சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் ராம்பிரபு, அதிமுக உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன்,

மணல் எல்லா காலத்திலும்தான் எடுக்கப்படுகிறது. மணல் எடுக்கவில்லை என்றால் ஆறுகளில் மேடுகள் உருவாகி தண்ணீர் போதிய அளவு வராத நிலைமை ஏற்பட்டு விடும் என்றார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் எழுந்து, தினமும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. சந்தேகம் இருந்தால் அமைச்சர் என்னுடன் வந்தால் அதை நான் காட்ட தயார்.

சர்வகட்சி கூட்டம் போட்டு வெளி மாநிலங்களுக்கு மணலை அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்தும் மணல் செல்கிறது. இதை தடுப்பதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பின் ஓ.பன்னீர்செல்வம், கடந்த காலங்களில் மணல் எடுக்கப்பட்டது அது உள்நாட்டு தேவைக்காக மட்டும்தான். ஆனால் இப்போது அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடக்கிறது என்றார்.

அப்போது இடைமறித்த அமைச்சர் துரைமுருகன், ஏற்கனவே நடந்த மணல் கொள்ளை கூட்டத்திற்கு தலைவராக இருந்தவரே இவர்தான் (பன்னீர்செல்வம்). இப்போது நாங்கள் மணல் கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் மணல் விற்பனை மூலம் மாதத்துக்கு ரூ. 7 கோடி தான் அரசுக்கு வருமானம் வந்தது. திமுக ஆட்சியில் இது ரூ. 11 கோடியாக உயர்ந்துள்ளது.

மாதம் 7 கோடி ரூபாய் வருமானம் பெற்ற நீங்கள் கொள்ளைக்காரர்களா அல்லது மாதம் 11 கோடி ரூபாய் அரசுக்கு பெற்றுத் தந்துள்ள நாங்கள் கொள்ளைக்காரர்களா?. இதை மக்களே முடிவு செய்யட்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், புரட்சித் தலைவியின் ஆட்சிக் காலத்தில் மணலுக்கு உரிய தொகையை வரைவோலை (டிடி) மூலம் கொடுத்து விட்டு உரிய அளவிற்கு மணல் எடுத்தார்கள். ஆனால் இப்போது பணத்தை கொடுத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் மணலை அள்ளிச் செல்கிறார்கள் என்றார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் தந்த பதிலும், ஓ.பன்னீர்செல்வமும் கூறிய பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது எப்போதும் நடை பெற்றிருக்கிறது. கடந்தஅதிமுக ஆட்சியில் 2003 முதல் 2006 வரை 884 லாரிகளை பிடித்து 20 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறீர்கள். நாங்கள் 10,637 லாரிகளை பிடித்து 27 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்திருக்கிறோம்.

மணல் திருட்டுக்காக 47 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது திமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் இது போல யாரையாவது நீங்கள் தண்டித்தது உண்டா?. யார் யாரெல்லாம் மணல் அள்ளுகிறார்கள். அதன் மூலம் தங்களை வளப்படுத்தி வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். குறிப்பாக அதை செய்வது அதிமுகவினர்தான் என்பதும் தெரியும். அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து அதிமுகவினர் பேச முயலவே அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதற்கு அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதி்ர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

985 ஊழியர்கள் பணி நிரந்தரம்:

தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், பொதுப் பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 985 தினக் கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மழை வெள்ள காலங்களில் ஏற்படும் சேதங்களை குறைக்க நீர்வழித் தடங்களை மேம்படுத்தவும், சென்னையில் மழைநீர் வடிகால்கள், சிறு கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைக்க புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு நிரந்தர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 70 அணைகளையும் 38 மின்வாரிய அணைகளையும் சீரமைக்க கடந்த ஆண்டு உலக வங்கியிடம் நிதி கேட்டு திட்டம் அனுப்பினோம். தற்போது இது பரிசீலனையில் உள்ளது.

கீழ்பவானி அணையின் கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களை நவீனப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றை பாலாற்றின் உபநதியான செய்யாறு வழியாக இணைப்புக் கால்வாய் மூலம் பாலாற்றுடன் இணைக்கப்பட உள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X