For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனை பின்னந்தலையில் சுட்டது பொட்டுவாம்-ராணுவம் அடுத்த கதை!

By Staff
Google Oneindia Tamil News

Pottu Amman
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை, உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான்தான், பின்னாலிருந்து சுட்டுக் கொன்றுள்ளார் என்று இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாக ஆசியன் டிரிப்யூன் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் குறித்து நாளொரு கதையும், பொழுதொரு அலசல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஆசியன் டிரிப்யூன் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பொட்டு அம்மான்தான் பிரபாகரனை மிக நெருக்கத்தில் வைத்து, தலைக்குப் பின்னால் சுட்டுக் கொன்று விட்டதாக அது கூறுகிறது.

இதுகுறித்து ஆசியன் டிரிப்யூன் கூறுவதாவது..

பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் நிலவுகின்றன. அவர் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்ற கருத்துக்கு வலுவான ஆதாரம் இல்லை.

அப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது, பிரபாகரன் முன்னாலிருந்து யாராலும் சுடப்படவில்லை. அவருக்குப் பின்புறம் இருந்த ஒருவர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார். மிக நெருக்கத்தில் வைத்து சுடப்பட்டதால்தான் பின் தலை பிளந்து சிதறியிருக்கிறது.

பிரபாகரனுக்கு மிக மிக நெருக்கமான ஒருவரால்தான் இதை செய்திருக்க முடியும். பிரபாகரனின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒருவரால்தான் இதை செய்ய முடியும். எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையிலான நபர்தான் இதை செய்திருப்பார் என்று ராணுவம் சந்தேகிக்கிறது.

பிரபாகரனைச் சுற்றிலும் எப்போதும் 300 அதிரடி கமாண்டோக்கள் இருப்பது வழக்கம். அவர்கள் அனைவரையும் பிரபாகரனே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். அவர்கள் அனைவருமே பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்.

எனவே பிரபாகரனை முன்னாலிருந்து சுடுவதோ அல்லது, புதிதாக ஒருவர் பின்னாலிருந்து சுடுவதோ சாத்தியமில்லாத விஷயம். எனவே பிரபாகரனின் நிழல் போல இருந்த ஒருவர்தான், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பிரபாகரனை சுட்டுக் கொன்றிருக்க முடியும்.

அந்த வகையில் பார்த்தால் பிரபாகரனின் நிழல் போல இருந்தவர், அவரது முழு நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்தவர், எப்போதும் அவருடனேயே இருந்தவர் பொட்டு அம்மான்தான். எனவே அவர்தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுக்கிறது என்று ராணுவம் சொல்கிறது.

பொட்டு அம்மானின் உண்மையான பெயர் சண்முகநான் சிவசங்கரன். கரும்புலிகள் பிரிவின் தலைவராக ஒரு காலத்தில் இருந்தவர் பொட்டு அம்மான். பின்னர்தான் உளவுப் பிரிவை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார்.

பிரபாகரனுடன் பல்வேறு தளபதிகள் இருந்தபோதிலும், பொட்டு அம்மான் மட்டும்தான் விசேஷ சலுகைகளுடன் இருந்தவர். பொட்டு அம்மான் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார் பிரபாகரன். அவர் மீது யார் எந்த சந்தேகத்தைக் கிளப்பினாலும் பிரபாகரன் நம்பாத அளவுக்கு விசுவாசமிக்கவராக செயல்பட்டவர் பொட்டு அம்மான்.

ஆனால் போரின் கடைசி கட்டத்தின்போது தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தவுடன் விரக்திக்குள்ளாகியிருக்கலாம் பொட்டு அம்மான். தமிழ் ஈழக் கனவு சிதறிப் போய் விட்டதே என்று விரக்தி அடைந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் காரணம் பிரபாகரன்தானே என்ற கோபம் வந்திருக்கலாம். இதனால்தான் பிரபாகரனை சுட்டுக் கொன்று விட்டு அவர் மட்டும் தப்பிப் போயிருக்கலாம் என்று ராணுவம் கூறியதாக ட்ரிப்யூன் கூறியுள்ளது.

நிச்சயம் ராணுவம் பிரபாகரனை சுடவில்லை. பொட்டு அம்மான் மீதுதான் இப்போது சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் அவரது உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே பொட்டு அம்மான் இறந்து விட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதில் குழப்பம் உள்ளது.

இதற்கிடையே, பிரபாகரன் இறந்த செய்தியை கூட ராணுவத்திற்கு ஒருவர் போன் செய்து சொல்லியுள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டதையும், அவரது உடல் எங்கு இருக்கிறது என்பதையும் அந்த நபர் ராணுவத்திற்குத் தெரிவித்தாராம். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ராணுவம் பிரபாகரனின் உடலைக் கண்டுபிடித்து மீட்டதாம்.

இருப்பினும் அவர்களுக்கு உண்மையிலேயே இது பிரபாகரன் உடல்தானா என்ற சந்தேகம் வரவே, கருணாவை வரவழைத்து அவர் அடையாளம் காட்டிய பிறகுதான் நம்பினார்களாம்.

இப்படிக் கூறுகிறது ஆசியின் டிரிப்யூன் செய்தி.

இந்த செய்தியையும் கூட எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனையும், அவரது இளைய மகனையும் ராணுவம் பிடித்துச் சென்று சித்திரவதை செய்து முதலில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும், பின்னர் பிரபாகரனையும் ராணுவம் சுட்டுக் கொன்றதாக யாழ்ப்பாணம் பேராசிரியர்கள் அமைப்பு ஒன்று விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

ராணுவத்திலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு இவ்வாறு கூறுவதாக அந்த அமைப்பு கூறியிருந்தது. ஆனால் இதை ராணுவமும், அரசும் மறுத்தன.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு பிரிவினரும் பிரபாகரனின் மறைவுச் செய்தியை ஒருமித்து ஒப்புக் கொண்டனர். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆரம்பத்தில் செல்வராசா பத்மநாதன், உளவுப் பிரிவு பொறுப்பாளர் அறிவழகன் என புலிகள் இயக்கத்தினர் கருத்து வேறுபாடுடன் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அனைவரும் ஒருங்கிணைந்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக புலம் பெயர்ந்த தமிழர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பொட்டு அம்மான் மீது பழியைப் போட்டு இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ராணுவமே இப்படி ஒரு தகவலை ஊடகங்கள் மூலம் கிளப்பி விடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

பிரபாகரன் விஷயத்தைப் பொறுத்தவரை காலம்தான் பதில் சொல்ல முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X