For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரையுலகினர் காயப்படுத்தினாலும் தாங்கும் இதயம் உண்டு - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanithi speaks in Film function
சென்னை: திரையுலகில் என்னை சிலர் காயப்படுத்தினாலும், அதையும் தாங்கும் இதயம் எனக்குண்டு. அரசு திரையுலகுக்கு அளித்துள்ள கேளிக்கை வரிவிலக்கு தொடரும், என்றார் முதல்வர் கருணாநிதி.

முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் தயாராகும் புதிய படம் 'நீயின்றி நான் இல்லை'. உதய்கிரண், மீராஜாஸ்மின் நடிக்கின்றனர். இளவேனில் இயக்குகிறார். ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. முதல்வர் கருணாநிதி விழாவில் பங்கேற்று படத்தைத் துவக்கி வைத்தார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது:

நீண்ட காலத்துக்கு முன்பு 'சுருளிமலை' என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து, 'நீயின்றி நான் இல்லை' என்ற இப்படம் எடுக்கப்படுகிறது.

கடிதம் படிக்காத அமைச்சர்கள்...

இப்படத்தின் இயக்குனர் இளவேனில் முரசொலியில் நான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதங்களை தவறாமல் படிப்பவர். என்னுடைய தலைமையில் உள்ள அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ, கழகத் தோழர்களோ அக் கடிதங்களை படிக்காமல் விட்டாலும் கூட இளவேனில் படிக்கத் தவறமாட்டார்.

கடிதங்களில் நம் மீது ஏவப்படும் கணைகள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் போன்றவைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் நான் குறிப்பிடுவதுண்டு, அத்தகைய இதயத்தை அண்ணா தந்துவிட்டு போயிருக்கிறார் என்றும் எழுதுவது வழக்கம். என்னைப்பற்றி யார் எப்படி இழித்துப் பேசினாலும் ஏசினாலும் கவலைப்படமாட்டேன் என்றும் கடிதங்களில் எழுது வதுண்டு.

பெரியாரும் அண்ணாவும் இந்த சமுதாயத்துக்கு பணியாற்ற என்னிடம் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றியே தீருவேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறேன். அதையெல்லாம் படித்து இந்த தலைப்பை எடுத்துள்ளார் இளவேனில்.

இந்த மேடையில் கமல் பேசும்போது, என்னுடைய வசனங்களை பேசித்தான் திரையுலகுக்கு பலர் வந்ததாக சொன்னார். அவரை இதே திரைப்படத்துறையில் சிறு பிள்ளையில் இருந்து பார்த்து வருகிறேன். இன்று 10 அவதாரங்கள் எடுத்து உலக திரைப்பட சந்தையில் கீர்த்தி பெற்றுள்ள நிலையிலும் அவரைப்பார்க்கிறேன்.

கமலுக்கு நான் கொடுத்த முத்தம்...

எப்போதும் அவரை நேசிக்கிறேன். என் மீது பாசம் கொண்டவர். ஒருநாள் வீட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தபோது வேலைக்காரப் பையன் ஓடி வந்து ஒரு அம்மா உங்களை பார்க்க வந்திருக்கிறார் என்றான். நான் எட்டிப்பார்த்தேன். ஒரு அம்மா உட்கார்ந்திருந்தார்.

அவரை அழைத்து நீங்கள் யார் என்று கேட்டபோது, என்னை தெரியவில்லையா என்று அந்த பாத்திரத்துக்குள் இருந்த கமல் கேட்டார். என் வீட்டு பெண்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தால் யாருடன் இவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று சந்தேகிப்பார்களோ என்ற பயம் வந்தது. அந்த அளவுக்கு கமல் ஒப்பனை இருந்தது.

தசாவதாரத்திலும் சிறந்த ஒப்பனை செய்துள்ளார். அதை விடவும் உயர்ந்ததாக அந்த ஒப்பனை இருந்தது.

சினிமாவில் இப்படிப்பட்ட கலை உணர்வு மிக்கவர் இருக்கிறார்களே என்று வியந்தேன். பாத்திரத்துக்குள் இருந்த கமலை நேசித்தேன். தொட்டு இழுத்து முத்தம் கொடுத்தேன்.

மனோரமாவுக்கு நீதிபதி வேடம்

இந்த மேடையில் இருப்பவர்கள் என் மேல் பாசம் கொண்டவர்கள். சிவகுமார் மேடைதோறும் என் வசனத்தை பேசுவார். மனோரமா என்னுடன் நாடகத்தில் கதாநாயகியாக நடித்தது பற்றி சொன்னார். அதில் அவர் தி.மு.க. பெண்ணாகவும் நான் தேசியவாதியாகவும் நடித்தோம். என்னை அவர் தி.மு.க.வுக்கு அழைத்து வருவதுபோல காட்சி இருக்கும். மனோரமா பேசும் வசனங்களை கூட நான்தான் எழுதி கொடுத்தேன்.

'நீயின்றி நான் இல்லை' படத்தில் விவேக்கும் நடிக்கிறார். அவர் பாத்திரப்படைப்பு சிறப்பாக இருக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடும் பாத்திரத்தில் கதாநாயகன் நடிக்கிறார். மனோரமாவுக்கு நீதிபதி வேடம் அளிக்கும்படி இளவேனிலிடம் கூறியுள்ளேன்.

இந்த மேடையில் வி.சி. குகநாதன் பேசும்போது, பலர் என்னை விமர்சனம் செய்து காயப்படுத்தியதாக கூறி வருத்தப்பட்டார். என்னை யாரும் காயப்படுத்துவதால் வருத்தப்படமாட்டேன். உடம்பின் பெயரே காயம்தான். இந்த காயத்தோடு அந்த காயம் சேருவதால் என்ன ஆகிவிடப் போகிறது. இன்று காயப்படுத்துபவர்கள் சில காலம் கழித்து சேரலாம்.

எனவே காயப்படுத்துபவரை விரோதிகளாக கருதமாட்டேன். அவர்களுக்கு விருந்து வைத்து வாழ்த்த வேண்டும். சிலர் காயப்படுத்தினாலும் இங்கு பேசி சிலர் வருந்துவதே எனக்கு மருந்தாக அமைகிறது. எனவே காயங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ஏற்கனவே நான் பணியாற்றிய சினிமாக்களில் கிடைத்த ஊதியத்தை பொது நிதிக்கு அளித்துள்ளேன். அதுபோல் இப்போது தயாராக உள்ள 'நீயின்றி நான் இல்லை', 'பொன்னர் சங்கர்' படங்களுக்கான ஊதியமும் வரி பிடித்தம்போக பொது நிதிக்கு வழங்கப்படும்.

வரிவிலக்கு தொடரும்...

ஏவி.எம். சரவணன் இங்கு பேசும்போது, திரைப்படத் துறையினருக்கு வரிவிலக்கு சலுகையை நீடிக்கும்படி என்னிடம் கேட்டதாகவும் அதற்கு நான் ஒத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஏற்றுக்கொண்டதாக சொல்லி இருக்கலாம். அப்படி சொன்னால் நான் மறுக்கலாம் என்று கருதி ஒத்துக்கொண்டதாக சாதுரியமாக பேசினார்.

கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதால் அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்தான். பல உள்ளாட்சி அமைப்புகள் இதுகுறித்து எனக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகின்றன. இருந்தாலும் இந்த நஷ்டத்தையும் தாங்குகிறோம், என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X