For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணிக் பார்ம் முகாமை நகராக்கி தமிழர்களை நிரந்தரமாக தங்க வைக்க இலங்கை சதி

By Staff
Google Oneindia Tamil News

வன்னி: சுற்றிலும் முள் வேலிகளை அமைத்து, அதற்குள் ஆடு மாடுகளைப் போல 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாணிக் பார்ம் இடம் பெயர்ந்தோர் முகாமை நிரந்தர நகரமாக மாற்றி, தமிழர்களை அவர்களது சொந்தப் பகுதிகளில் குடியமர்த்தாமல் இங்கேயே வைத்து விட இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 3லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை மாணிக் பார்ம் உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளிச் சிறைச்சாலை போன்ற இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைத்துள்ளது இலங்கை அரசு.

கிட்டத்தட்ட கைதிகள் போல தமிழ் மக்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். உள்ளுக்குளேளேயே கூட சுதந்திரமாக நடமாட இவர்களுக்கு அனுமதி இல்லை. வெளியில் வரவே முடியாது.

குடும்பத்தினர் சேர்ந்து கூட தங்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் பெருமளவில் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.

மிகக் கொடூரமான நிலையில், கொடுமையான வாழ்க்கையை இந்த அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களிலேயே மிகப் பெரியது மாணிக் பார்ம் என சொல்லப்படும் முகாம்தான். உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலை என்று சொல்லக் கூடிய அளவில் உள்ளது இந்த முகாம்.

சுற்றிலும் முள் வேலியிடப்பட்ட இந்த முகாமைச் சுற்றிலும் உள்ளும், வெளியிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த முகாமை நிரந்தர நகரமாக்கி, இங்குள்ள மக்களை இங்கேயே நிரந்தரமாக தங்க வைத்து விடலாம் என்ற சதித் திட்டத்தை இலங்கை தீட்டியிருப்பதாக தெரிகிறது.

இந்த செய்தியை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு அடுத்த பெரிய நகரம் போல மாணிக் பார்ம் உருவாகி வருவதாகவும் டைம்ஸ் கூறுகிறது.

வன்னிப் பகுதியில் போர் பாதித்த இடங்களில் கண்ணிவெடிகள் இருப்பதாக கூறிக் கொண்டு, தமிழ் மக்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்பாமல் சாக்குப் போக்கு கூறி வருகிறது இலங்கை.

வன்னியில் போர் பாதித்த பகுதிகளில் இதுவரை 30 சதுர கிலோமீட்டர் பரப்பவளவுக்கு மட்டுமே வெளிநாட்டு கண்ணிவெடிகளை அகற்றும் குழுக்களை அனுமதித்துள்ளதாம் இலங்கை அரசு. மற்ற பகுதிகளுக்கு அனுமதி தராமல் இருக்கிறதாம்.

உண்மையில் இலங்கை அரசின் திட்டம், தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தாமல், மாணிக் பார்மிலேயே முடக்கி விடுவதுதான் என்று கூறப்படுகிறது.

மாணிக் பார்மில் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்கு தற்போது நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டடங்களை கட்டும் பணியில் அப்பாவித் தமிழ் மக்களையே ஈடுபடுத்தி வருகிறது அரசு. ஆனால், இவர்களுக்கு சம்பளம் எதுவும் தராமல் அடிமைகளைப் போல நடத்தி வருகிறதாம் இலங்கை அரசு.

மாணிக் பார்மில் மொத்தம் 6 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் நான்கு மண்டலங்களில் மட்டுமே நிவாரணப் பணியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற 2 பகுதிகளுக்கும் செல்ல அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. அதில் ஜீரோ சோன் எனப்படும் ஒரு பகுதியில் யார் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள், அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாமல் மர்மமாக உள்ளதாம்.

இலங்கை அரசின் ரகசியத் திட்டத்தால் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாகி விடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X