For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபி- சென்னை போலீஸ் இணைந்து நடத்திய தீவிரவாத ஊடுறுவல் 'டிரில்'

By Staff
Google Oneindia Tamil News

IB Drill
சென்னை: தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவினால் அதை சமாளித்து வெற்றி கொள்ளும் வகையில் தமிழக பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கிறார்களா என்பதை அறிய உளவுப் பிரிவான ஐ.பி. தீவிரவாதிகள் ஊடுறுவல் எச்சரிக்கையை விடுத்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் போலீஸாரும், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் படு தீவிரமான கண்காணிப்பையும், தேடுதல் வேட்டையையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. பாதுகாப்புப் படையினர், போலீஸார் எப்போதும் உஷார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் தமிழக காவல்துறை இருக்கிறதா என்பதை அறிவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.பியிடமிருந்து தீவிரவாதிகள் ஊடுறுவி விட்டதாக தகவல் போனது.

சில குறிப்பிட்ட தகவல்களையும் ஐ.பி. தெரிவித்ததால் தமிழக போலீஸார் ஒட்டுமொத்தமாக உஷார்படுத்தப்பட்டனர்.

சென்னை முதல் குமரி வரை...

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோரப் பகுதிகள் முழுமையாக சல்லடை போட்டு அலசப்பட்டன.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார், கடலோர காவல்படை, கப்பற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் 15,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த படகுகளிலும் சோதனை நடந்தது. அத்துடன் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடற்கரையோர சாலைகளில் செல்லும் வாகனங்கள், மீனவர்களின் வீடுகள் மற்றும் படகுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மேலும் கடலோர பகுதிகளில் புதிதாக வந்தவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதியவர்கள் யாராவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களை போலீசார் கேட்டு கொண்டனர்.

ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் போலீஸ் எஸ்.பி. தலைமையில் அதிகாரிகள் இச் சோதனையில் பங்கேற்றனர்.

மாதிரி வேட்டை..

இந்த சோதனை குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலிலும் ஒத்திகை நடத்தினோம்.

முதல் முறையாக போலீசார், கடலோர காவல் படை, கப்பற்படையினர் ஒருங்கிணைந்து சோதனையும் ஒத்திகையும் நடத்தினர் என்றார்.

வேட்டையில் சிக்கிய கமாண்டோக்கள்...

இந் நிலையில், நேற்று நள்ளிரவில் ராயபுரம் உதவிக் கமிஷனர் மாடசாமி தலைமையில் 12 படகுகளில் போலீசார் மற்றும் 25 மீனவர்கள் ராயபுரத்தில் இருந்து திருவொற்றியூர் வரை கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களையும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ராயபுரம் மீன்பிடி துறைமுகம் அருகே கடற்பகுதியில் இருந்து வேகமாக ஒரு படகு வந்து கொண்டிருந்தது. அந்த படகை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் 6 பேர் இருந்ததை அடுத்து அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று நினைத்த போலீசார் அவர்கள் 6 பேரை மடக்கி பிடித்து உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் 6 பேரில் 4 பேர் கமாண்டோ படையைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் கடலோர காவல் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. தமிழக போலீசாரின் உஷார் நிலையை சோதனையிடுவதற்காக இவர்கள் படகில் வந்தார்கள் என்றும் தெரியவந்தது.

சென்னையில் போலீஸ் மயம்..

கடலோரப் பகுதிகளில் நடந்த வேட்டையைப் போலவே சென்னை நகரையும் நேற்று போலீஸார் துளைத்து எடுத்து விட்டனர்.

நட்சத்திர ஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆடம்பர பங்களாக்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், என்று எதிலும் நேற்று இரவு அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியவில்லை. போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே நுழைய முடிந்தது.

நகரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகளாகவே காணப்பட்டது. அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் வரை உள்ள கடலோர பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 13,000 போலீசாரும் உஷார் நிலையில் இருந்தனர்.

சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் போல கமாண்டோ படை வீரர்கள் நுழைவார்கள். அவர்கள் எப்படி வருவார்கள், எந்த பகுதியில் வருவார்கள் என்பதையெல்லாம் சொல்ல மாட்டோம். அவர்களை மடக்கி பிடிக்க வேண்டியது உங்களது கடமை என்று உளவுத்துறை சார்பில் ஏற்கனவே காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

இதையடுத்தே நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பிடித்தால் தப்பித்தோம், பிடிக்காவிட்டால் பெயர் கெட்டு விடுமே என்பதால் போலீஸார் பதைபதைப்புடன் அந்த கமாண்டோக்களைத் தேடி அலைந்துள்ளனர்.

அப்போதுதான் காசிமேடு பகுதியில் படகில் வந்த கமாண்டோக்களை போலீஸார் கப்பென்று பிடித்து ஐ.பி. வைத்த டெஸ்ட்டில் பாஸ் ஆகி விட்டனர்.

சென்னை போலீஸார் நடத்திய இந்த மாதிரி வேட்டையில் நகரமே திமிலோகப்பட்டு விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X