For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலை. டாக்டர் பட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1023 விரிவுரையாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பணி நியமன சான்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
இளமை முதல் இன்று வரை சிறப்பாக அரசியல் பணியாற்றுவதை பாராட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த மாதம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் அரசு பணி நியமன தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக அரசு கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இடம் காலியாக இருந்தது. முதல்வர் கருணாநிதி ஆட்சியில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போது ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

கருணாநிதியின் அரசியல் நிர்வாகம், சமூக பணிகள், உளவியல், வரலாறு ஆகியவவை பற்றி தனித்தனியாக ஏராளமான மாணவர்கள் ஆய்வு செய்து பிஎச்.டி. பெற்றுள்ளனர். பலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். எனவே கருணாநிதி ஆராய்ச்சிக்கு பொருளாக இருக்கிறார் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி,

இளம் வயதினர் சரியான நேரத்தில் பணி நியமனச் சான்றிதழ் பெறுகிறார்களே என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இளம் வயதைக் கடந்தவர்களுக்கு, இப்போதாவது பணிக்கான சான்றிதழ் கிடைத்ததே என்பதிலே அவர்களுக்கு மகிழ்ச்சி.

காத்திராமல் தங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றுகின்ற பொறுப்பினை தன்னுடைய வாழ்வாதாரத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற பொறுப்பினை இந்த வயதில் - சரியான வயதில் இவர்கள் பெறுகின்றார்களே என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னொரு சாராரைக் குறிப்பிட்டேன். அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றால், அப்பாடா! இப்போதாவது கிடைத்ததே'' என்பதிலே அவர்களுக்கு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் என்னை சோகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியை இங்கே உவமையாகச் சொல்ல விரும்புகின்றேன்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழா வாணிமகால் தியேட்டருக்கு எதிரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு நான்தான் தலைமை ஏற்றேன். உலகத்தமிழ் மாநாட்டிலே சிலைகள் வைப்பதற்கும், சிற்பங்களை வைத்து ரதங்கள் ஓட்டுவதற்குமான செலவு போக, மிச்சத்தொகை என்னிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று அன்றைய முதல்வர் நம்முடைய தலைவர் அண்ணாவும், ஜெமினி வாசனும், ஏ.வி.மெய்யப்பனும், ஏ.எல்.சீனிவாசனும், நாகிரெட்டியும், நானும் கலந்து யோசித்தபோது நான் சொன்னேன்.

இங்கே தியாகராயர் நகரில் இருக்கின்ற வாணி மகால் தியேட்டர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அடிக்கடி நாடகங்கள் நடத்துகின்ற இடம். அவருடைய வீடும் அந்த தியேட்டருக்கு அருகில் இருக்கிறது. எனவே, உலகத்தமிழ் மாநாட்டிலே மிச்சப்பட்ட தொகையைக் கொண்டு கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கு ஒரு சிலை அமைக்கலாம் என்று சொன்னேன்.

அதை அந்த குழுவினர் ஏற்றுக்கொண்டு, சிலை வடிக்கப்பட்டது. சிலையை யார் திறப்பது என்று எண்ணியபோது, அண்ணாவைத் தவிர வேறு யாரும் அதற்கு தகுதியானவர் இல்லை என்று முடிவு செய்து, அண்ணாவை அழைத்தபோது அவரைச் சூழ இருந்த மருத்துவர்கள் எல்லாம், இந்த நேரத்திலே- இந்த நிலையிலே அண்ணா ஒரு விழாவிற்கு வருவது சரியல்ல என்று தடுத்து நின்றார்கள்.

ஆனால், அண்ணா நான் அந்த சிலையைத் திறந்தே ஆக வேண்டும். ஏனென்றால் கலைவாணர் என்.எஸ்.கே. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய படத்தை ஒரு ஊராட்சி மன்றத்திலே திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார். அவர் இப்போது இல்லை. அதனால் நான் அவருடைய சிலையைத் திறந்து வைப்பது இருவருக்கும் வாழ்க்கையிலே ஏற்பட்ட கடைசி நிகழ்ச்சிகள்- எங்களுடைய மனதிற்கு இதமான நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு சிலையை திறக்கப் புறப்பட்டார்.

அங்கே ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்புரை ஆற்றும்பொழுது அண்ணா வருவாரோ என்று நாம் காத்திருந்தோம். நல்ல நேரத்திலே' அண்ணா வந்து இந்த சிலையைத் திறக்கவிருக்கிறார் என்று எண்ணினோம். அவ்வாறே வந்து விட்டார் என்று வாசன் சொன்னார்.

அண்ணா பேசும்போது, வாசன் அவர்களுக்கு நாங்கள் வரும் நேரம் எல்லாம் நல்ல நேரமாகத்தான் தெரிகிறது - இப்போது நாங்கள் வந்திருக்கின்ற நேரம் - இது வாசனுக்கு மாத்திரமல்ல, தமிழ்நாட்டிற்கே நல்ல நேரம் தான்'' என்று குறிப்பிட்டார்.

அதாவது, அண்ணா, திமுக ஆட்சி வந்திருக்கிற நேரத்தைக் குறிப்பிட்டார். வாசன் உண்மையிலேயே அவருடைய பஞ்சாங்கத்தைப் பார்த்து அந்த நேரத்தைக் குறிப்பிட்டார். இந்த இரண்டு நேரமும் எப்படி ஒத்துப் போயிற்று என்பதற்கு உதாரணமாகத்தான் அண்ணா, நாங்கள் வருகிற நேரம் வாசனுக்கு நல்ல நேரமாகப் படுகிறது. நாங்கள் இப்போது வந்துவிட்டோம். இனி தமிழ்நாட்டிற்கே நல்ல நேரம்தான்'' என்று அன்றைக்கு குறிப்பிட்டார்.

அதனால்தான், கிடைக்குமோ - கிடைக்காதோ'' என்று தடுக்கப்பட்டு, அணை கட்டப்பட்டு- தாமதப்பட்டு இருந்த இந்த சான்றிதழ்கள் எல்லாம் இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அன்றைக்கு அண்ணா சொன்ன நல்ல நேரத்தி''னுடைய அறிகுறிதான்- அதனுடைய விளைவுதான் இது என்பதை நான் இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்திலே டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். முதல்வரான எனக்குக் கொடுக்கவில்லை. அதிலே எனக்குப் பொறாமை இல்லை. பொறாமைப்பட வேண்டியது ஸ்டாலின் தான்.
ஏனென்றால், ஸ்டாலின் பெறுவது 'அண்ணா பெயரால் உள்ள' பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்.

நான் 'அண்ணா' என்ற பல்கலைக்கழகத்திலேயே டாக்டர் பட்டம் பெற்றவன். எனவே, அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பணி நியமனச் சான்றிதழ் பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றவர்களுக்குச் சான்று அளிக்கக் கூடியவர்களாக, நாட்டுக்கு நல்லவர்களாக வாழ வேண்டும், வாழ வைக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X