For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் தோல்விக்கு அதிமுகவே காரணம்-சிபிஎம்

By Staff
Google Oneindia Tamil News

varadharajan
கோவை: அதிமுகவின் மோசமான பிரச்சாரத்தால்தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் குற்றம் சாட்டினார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்பு, அக் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசின் மக்கள் நல திட்டங்களான, ஒரு ரூபாய் அரிசி, விவசாயக் கடன் ரத்து, இலவச கலர் டிவி ஆகியவை அந்த கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சந்தித்த சில கசப்பான அனுபவங்களால், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சிறுபான்மையினர் ஆகியோர் தான் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

வகுப்புவாத-பிற்போக்கு சக்தியான பாரதீய ஜனதாவையும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியையும் மீண்டும் ஆட்சிக்குவராமல் தோற்கடிக்க வேண்டும், காங்கிரஸ்-பாரதீய ஜனதா அல்லாத மாற்று அணியை உருவாக்க இடதுசாரி கட்சிகள் மத சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கட்சியின் மத்தியக்குழு வழிகாட்டியது.

இதன்படி தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற சரியான முடிவை கட்சியின் மாநிலக் குழு மேற்கொண்டு செயல்பட்டது.

அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்ட கட்சிகள், ஒன்றாக இணைந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

சேது சமுத்திரம் திட்டம் போன்ற சில பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்த நிலையிலும், அதிமுக தனது நிலைபாட்டையே தேர்தல் பிரசாரத்தில் தன்னிச்சையாக முன்னெடுத்து சென்றது.

மத சார்பற்ற அரசு அமைவதற்கும், பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணி வலுவானது என்று மக்கள் கருதினார்கள்.

இடது சாரிகள் முன்வைத்த மூன்றாவது மாற்று அரசுக்கான அணியை சாத்தியமானதாகவோ, நம்பகத்தன்மை கொண்டதாகவோ மக்கள் கருதவில்லை. இந்த காரணங்களினால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடிந்தது.

சிறுபான்மை மக்களை தட்டி எழுப்பி அவர்களை திருப்திபடுத்தும் வகையில் அதிமுக தேர்தல் பிரசாரம் செய்யவில்லை.

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு கோவை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இது போன்ற ஒரு சில பலவீனங்களே, மக்களவைத் தேர்தலில் மோசமான முடிவை சந்திக்க காரணமாக அமைந்து விட்டது என்றார்.

அப்படியானால் தோல்விக்கு அதிமுகதான் முக்கிய காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக மட்டுமே காரணமில்லை. அதுவும் ஒரு காரணம். வேறு காரணங்களும் உள்ளன என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற இன்னொரு கேள்விக்கு, தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல்கள் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடிக்கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுயேச்சையாகவும், இடது சாரி, மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் மக்களை திரட்டி உறுதியுடன் போராடும்.

தற்போது சட்டமன்றத்தில் நாங்கள் அப்படி தான் செயல்பட்டு வருகிறோம்.

அதிமுகவுக்கு எதிர்ப்பு காட்டுவோம்...

சில விஷயங்களில் அதிமுக ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகள் மீது எங்கள் எதிர்ப்பை எந்தெந்த சமயங்களில் காட்ட முடியுமோ அப்போதெல்லாம் காட்டுவோம் என்றார் வரதராஜன்.

கூட்டணி உடையும்...?

அதிமுக கூட்டணியில் இணைய ஆரம்பத்திலிருந்தே சிபிஎம் தயக்கம் காட்டி வந்தது. சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் வலியுறுத்தல், கட்சி மேலிடத்தின் வலியுறுத்தல் காரணமாகவே அதிமுக கூட்டணியில் இணைய வரதராஜன் முன்வந்தார்.

(தா.பாண்டியன் தரப்புக்கு சசிகலா தரப்பு நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.)

தேர்தல் பிரசாரத்தின்போதும் கூட இரு கட்சிகளுக்கும் இடையே இணக்கம் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று பகிரங்கமாக கூறியுள்ளதோடு, அதிமுகவுடன் முரண்படும் விஷயங்களில் எப்போதெல்லாம் எதிர்ப்பு காட்ட வேண்டுமே அப்போதெல்லாம் காட்டுவோம் என வரதராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவி்ல் அதிமுக கூட்டணியிலிருந்து சிபிஎம் நீக்கப்படலாம் அல்லது அதுவாகவே வெளியேறி விடலாம் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாமகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உறவு சரியில்லை என்று பேசப்பட்டு வருகிறது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜெயலலிதாவும், ராமதாஸும் இதுவரை சந்திக்கவே இல்லை.

இந் நிலையில், சிபிஎம் போர்க்குரல் கொடுத்திருப்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X