• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்தத்தை பார்த்தே அஞ்சாத நாங்கள் பாலை பார்த்து பயப்பட மாட்டோம்-கருணாநிதி

By Staff
|

சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து வரும் 22ம் தேதி பால் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதுவரை பால் உற்பத்தியாளர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் அரசின் வேண்டுகோளை ஏற்காமல் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி அரசை பயமுறுத்த நினைத்தால் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம் என்றும், ரத்தத்தை பார்த்தே அஞ்சாத நாங்கள் பாலை பார்த்து பயப்பட மாட்டோம் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விவரம்:

செங்கோட்டையன் (அதிமுக): விவசாயிகளின் வாழ்வாதார தொழிலாக உள்ளது பால் உற்பத்தி. அந்த பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கு நியாயமான விலை கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் பாலை கீழே கொட்டி சாலை மறியல் செய்துள்ளார்கள். மாட்டுத் தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. எனவே அவர்களது கோரிக்கையை பரிசீலித்து அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): கிராமங்களில் அடிப்படை தொழிலாக உள்ள பால் உற்பத்தி செய்ய அதிக செலவாகிறது. எனவே விவசாயிகளிடம் வாங்கும் பாலுக்கு அரச அதிக விலை கொடுப்பது அவசியம். அதே சமயம் பொது மக்களுக்கு விலையை கூட்டக் கூடாது. இருதரப்பினரையும் பாதிக்காத வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 அரசு மானியம் வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம்தான் நமக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அது போல இந்த பாலுக்கும் மானியம் கொடுத்தால் இன்னும் நூறு வருடத்துக்கு மக்கள் நம்மை மறக்க மாட்டார்கள்.

ஜி.கே.மணி (பாமக): தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 லிட்டர் தண்ணீரே 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பால் விலை அதை விட குறைவாக உள்ளது. நிர்வாக குளறுபடி காரணமாக ஆவின் நிர்வாகமும் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது. எனவே அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

நன்மாறன் (மார்க்சிஸ்ட்): ''வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்'' என்று ஆண்டாள் பாடினார். இன்று குடம் நிறைகிறதோ இல்லையோ அதை கறக்கின்ற மக்களின் உள்ளம் நிறையவில்லை. எனவே அரசு உரிய முறையில் அவர்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): மாட்டுக்குத் தேவையான பருத்தி விதை கிலோ ரூ.13 விற்கிறது. புண்ணாக்கு ரூ.24. ஆனால் பால் விலையோ ரூ.13. இது உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் விலை உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே பால் கொள்முதல் விலையை உயர்த்துவதுடன் அந்த விலை உயர்வு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் மானியம் வழங்கி அனைவரது உள்ளத்திலும் பால் வார்க்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி: கடந்த 8ம் தேதி இந்தப் பிரச்சனையை காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் எழுப்பியபோது உரியவர்களிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். அவ்வாறு கூறியதுடன் இல்லாமல் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியையும், மதிவாணனையும் அழைத்து இதற்கு முடிவு காண அனுப்பி வைத்தேன்.

அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேலனையும், செயலாளர் எஸ்.ஆர்.ராஜகோபாலையும் 8ம் தேதி பிற்பகலில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதற்கு முன்பாக மற்றொரு சங்கத்தின் நிர்வாகிகள் முகமது அலி, பன்னீர் செல்வம் ஆகியோரையும் அழைத்து பேசியபோது, வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம் என்ற அரசின் கருத்தை ஏற்றுக் கொண்டு சென்றார்கள்.

ஆனால் செங்கோட்டுவேலனும், அவரது சங்க மற்ற பொறுப்பாளர்களும் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதுடன் 9ம் தேதியன்று கால வரையற்ற போராட்டத்தையும், சாலை மறியலையும் மேற்கொண்டார்கள்.

உறுப்பினர்கள் அப்பாலும் (பால் உற்பத்தியாளர்கள் குறித்தும்), இப்பாலும் (பாலை வாங்கும் மக்கள்) பேசினார்கள். நான் எப்பால் நிற்பது என்பது தெரியவில்லை.

எதுவாக தமிழகத்தில் மக்கள் பாலை ஒரு புனிதமான பொருளாக கருதுகிறார்கள். லட்சுமி என்று கூட சொல்வார்கள். அந்தப் பாலை நடுத்தெருவில் கொட்டி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

பால் ஊற்றுவது என்பது கடைசி காலத்தில்தான் செய்வார்கள். அமங்கலமான முறையில் அவர்கள் நடத்திய போராட்டத்தை உறுப்பினர்கள் சரி என்று ஒப்புக் கொள்கிறீர்களா? அதற்காக நான் அதை அலட்சியப்படுத்துவதாக நினைக்கக் கூடாது.

கடந்த காலங்களில் பால் கொள்முதல் விலையை நாங்கள் உயர்த்தியிருக்கிறோம்.

தற்போது ஆவின் நிறுவனம் சுமார் ரூ. 333 கோடி அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. மேலும் பாலுக்கு மானியம் கொடுத்தால் அந்த நிறுவனம் என்னவாவது?. அதே சமயம் பால் உற்பத்தியாளர்களின் கஷ்டமும் எனக்கு தெரியும். நுகர்வோரின் கஷ்டமும் எனக்கு தெரியும்.

எனவே 22ம் தேதி வரை பால் உற்பத்தியாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை எங்களுக்கு சட்டமன்ற பணிகள் உள்ளன. அதற்கு பிறகு அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம். ஏற்கனவே நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தும் அவர்கள் பால் ஊற்றும் போராட்டம் நடத்தியது சரியா?

இதற்கு மேலும் அவர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் பாலை அவர்கள் கீழே ஊற்றிக் கொள்ளட்டும். போராட்டம் நடத்தி இந்த அரசை பயமுறுத்த நினைத்தால் அது நடக்காது. ரத்தத்தை கண்டே பயப்படாத நாங்கள் பாலை கண்டா பயப்பட போகிறோம்?.

எனினும் 22ம் தேதி வரை பொறுத்திருங்கள். நல்ல முடிவு ஏற்படும். அப்படி நல்ல முடிவு ஏற்படாவிட்டால் அதன் பிறகு போராடலாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X