For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை யாரும் கடத்தவில்லை-ஸ்ரீரங்கம் ஜீயர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட ஸ்ரீரங்கம் மடத்தின் ஜீயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று விளக்கம் தந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பலகரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் தலைமை ஜீயரான லட்சுமண ராமானுஜ ஜீயரை (83) கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் காணவில்லை என்றும், மடத்தின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவரை மடத்தின் சமையல்காரர் பத்ரிநாராயணன் மறைத்து வைத்துள்ளதாகவும்,

அவர் ஜீயரை மிரட்டி மடத்தின் சொத்துக்களை தனது பெயருக்கு உயில் எழுதி வாங்கிவிட்டதாகவும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷன சங்கத்தின் தலைவர் கோவிந்தராமானுஜ தாசா என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜீயரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த திருச்சி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் நேற்று ஜீயரை சிபிசிஐடி போலீசார், நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் முன் ஆஜர்படுத்தினர்.
வயது காரணமாக, நீதிபதிகள் முன் ஒரு நாற்காலியில் அவர் அமரவைக்கப்பட்டார். அதன்பின்பு நீதிபதிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

நீதிபதிகள் ஜீயரிடம், இதுவரை எங்கு இருந்தீர்கள்? என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்டபோது, தனக்கு இந்தி மட்டுமே தான் தெரியும் என்று பதிலளி்த்தார் ஜீயர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றப் பதிவாளர் (நிர்வாகம்) அமீர்ஜானுக்கு இந்தி மொழி தெரியும் என்பதால் அவரை அழைத்து வர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்பின்பு நீதிபதிகள் கேட்ட கேள்விகளை அமீர்ஜான், ஜீயரிடம் மொழி பெயர்த்துச் சொல்லி பதில்களை நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அதன் விவரம்:

நீதிபதி: இவ்வளவு நாட்களாக எங்கு இருந்தீர்கள்?

ஜீயர்: கொல்கத்தாவில் உள்ள ராமானுஜ மடத்தில் இருந்தேன்.

நீதிபதி: ஸ்ரீரங்கத்தில் எத்தனை ஆண்டுகளாக இருந்தீர்கள்?

ஜீயர்: 25 வருஷம்

நீதிபதி: மடத்தை விட்டு எப்போது வெளியேறினீர்கள்?

ஜீயர்: 2, 3 வருடங்களுக்கு முன்பு வெளியேறினேன், சரியான தேதி நினைவில்லை.

நீதிபதி: எதற்காக மடத்தை விட்டுப் போனீர்கள்?

ஜீயர்: மடத்துக்கு போதுமான வருமானம் இல்லை. இதனால் மடத்துக்கு நிதி திரட்ட வட மாநிலங்களுக்குச் சென்றேன்.

நீதிபதி: உங்களை காணவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

ஜீயர்: இல்லை. நான் அவ்வப்போது வடமாநிலம் சென்று வருவேன்.

நீதிபதி: உங்களால் நடக்கக்கூட முடியவில்லை. அதன்பின்பு எப்படி அவ்வப்போது சென்று வந்தீர்கள்? நீதிமன்றத்தில் உண்மையைத் தான் சொல்ல வேண்டும். பொய் சொல்லக்கூடாது. ஸ்ரீரங்கத்தில் 25 ஆண்டுகள் இருந்ததாக கூறுகிறீர்கள். ஆனால் தமிழ் மொழி தெரியாது என்கிறீர்கள். 25 நாட்கள் இருந்தவர்கள் கூட தமிழ் மொழியை கற்றுக்கொள்கிறார்களே?

ஜீயர்: நான் மடத்தை விட்டு வெளியே செல்வதில்லை என்பதால் தமிழ் மொழி தெரியவில்லை.

நீதிபதி: உங்களை பத்ரிநாராயணன் என்பவர் கடத்திச் சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளதே?

ஜீயர்: இல்ல (தமிழில் பதில் சொன்னார்)

நீதிபதி:- இப்போது மட்டும் எப்படி தமிழ் மொழி தெரிந்தது? (நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிரித்துவிட்டனர்)

மனுதாரர் கோவிந்தராமானுஜ தாசா: ஜீயருக்கு தமிழ் நன்றாகத் தெரியும். ஆனால், தமிழ் மொழி தெரியாது என்று பொய் சொல்கிறார். ஜீயருக்கும், பத்ரிநாராயணனுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளது. அதை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க இயலாது.

நீதிபதி: ஜீயர் என்பவர்கள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நீங்கள் தெரிந்த மொழியை ஏன் பேச மறுக்கிறீர்கள்?

ஜீயர்: எனக்கு தமிழ் தெரியாது. மனுதாரர் தவறான தகவலை சொல்கிறார்.

நீதிபதி: நீங்கள் மடத்தில் இல்லாதபோது மடத்தை யார் கவனித்துக் கொள்வார்கள்?

ஜீயர்: பத்ரிநாராயணனும், அவருடைய மனைவி கோதாராணியும்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

ஹேபியஸ் கார்பஸ் மனுவைப் பொருத்தமட்டில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்பட்சத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவது தான் தீர்வு. இந்த வழக்கைப் பொருத்தமட்டில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜீயர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் தன்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே அவர் தனது விருப்பப்படி எங்கும் செல்லலாம். இத்தோடு இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

மடத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலை பக்தர்கள் வசதிக்காக திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஆனாலும் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து வரும் பத்ரிநாராயணன், அவருடைய மனைவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தரிசனத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

பின்னர் வெளியே வந்த ஜீயர், கோவிந்தராமானுஜ தாசாவிடம் ஏன் இப்படி பொய் வழக்குகளை போடுகிறீர்கள் என்று தகராறில் ஈடுபட்டார்.

அவரை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X