For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை: திமுக எம்எல்ஏவை அடிக்கப் பாய்ந்த பாமக எம்எல்ஏக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Tamil Nadu Assembly
சென்னை: சட்டசபையில் இன்று பாமக, திமுக எம்எல்ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் திமுக எம்எல்ஏவை பாமக எம்எல்ஏக்கள் அடிக்கப் பாய்ந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ சிவானந்தம், பாமக குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அக் கட்சியினர் ஒட்டுமொத்தமாக எழுந்து சிவானந்தத்தை பார்த்து ஒருமையில் திட்டினர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் பாமகவினரை எச்சரித்தனர்.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்து மிகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் தமிழரசு, கலிவரதன், கண்ணன் ஆகியோர் திமுக எம்.எல்.ஏ. சிவானந்தத்தை அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை திமுக எம்.எல்.ஏக்கள் ரெங்கநாதன், வி.எஸ்.பாபு,. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஷ்ணுபிரசாத் ஆகியோர் பிடித்துக் கொண்டு தடுத்தனர்.

இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சிவானந்தத்தை சூழ்ந்து நின்று அவரை யாரும் நெருங்க முடியாதபடி பார்த்துக் கொண்டனர். அவரை நெருங்கி வந்த பாமக எம்எல்ஏக்களை கடுமையாக எச்சரித்தனர்.

இந்த பிரச்சனை நடந்தபோது முதல்வர் கருணாநிதி சபாநாயகரின் அறையில் இருந்தார். துணை முதல்வர் ஸ்டாலின் வந்திருக்கவில்லை. பாமகவின் முன்வரிசை தலைவர்களான ஜி.கே.மணி, ஆறுமுகம், வேல்முருகன் ஆகியோரும் அவையில் இல்லை.

அவையில் பெரும் அமளி நடப்பதையறிந்து ஜி.கே.மணி அவசர அவசரமாக ஓடி வந்தார். இந்தப் பிரச்சனை பற்றி பேச முயன்றார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

சிவானந்தம் பேசிய பேச்சை படித்துப் பார்த்து அதில் ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தால் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக உறுதியளித்த சபாநாயகர், பாமகவினர் அமைதியாக இருக்க வேண்டும், அவையின் கண்ணியததை காக்கும் வகையில் நடக்க வேண்டும் என்றார்.

ஆனால் பாமகவினர் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் சில பாமக எம்எல்ஏக்களின் பெயர்களைச் சொல்லி அவர்களை அமைதியாக இருக்குமாறு எச்சரித்தார். சில திமுக எம்எல்ஏக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எழுந்து, திமுக உறுப்பினர் நெடுஞ்சாலைத்துறை மீது பேச வேண்டிய கருத்துகளை பேசாமல் வேறு எதை எதையோ பேசியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

இதையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் குறுக்கிட்டு, திமுக உறுப்பினர் தெரிவித்த கருத்துக்களில் தவறு ஏதும் இல்லை என்றனர்.

துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு ஒரு கருத்தை தெரிவிக்கவே அதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதிமுக எம்எல்ஏக்கள் கும்பலாக எழுந்து நின்று துரைமுருகனுக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.

அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எங்கள் கட்சித் தலைவர் பெயரை சம்பந்தப்படுத்திப் பேசி எங்களை வம்புக்கு இழுப்பது முறையா என்றார்.

இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு கடும் அமளி நிலவியது.

இந்த சம்பவம் நடந்தபோது சபாநாயகரின் அறையில் இருந்த முதல்வர் கருணாநிதி அவைக்குத் திரும்பி வந்து பேசினார். அவர் கூறுகையில்,

திமுக உறுப்பினர் சிவானந்தம் பேசிய பேச்சை நானும் கேட்டேன். ஏற்கனவே பேசி முடிந்த பிரச்சனையை மீண்டும் எழுப்பத் தேவையில்லை. இந்த அவை அமைதியாக நடைபெறுவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களின் பங்கும் முக்கியமானது. சிவானந்தம் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டியதில்லை.
அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று கூறுகிறார்கள். இன்னாரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று மறைமுகமாக பொருள் கொள்ளும் அளவிற்குத்தான் சிவானந்தத்தின் பேச்சு அமைந்திருந்தது.

அந்தப் பேச்சை படித்துப்பார்த்து விட்டு ஆட்சேபகரமான பகுதிகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு சிவானந்தம் பேசிய பேச்சையும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசிய பேச்சுக்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கி விட்டு, நாளை இவற்றை படித்துப் பார்த்து அவற்றில் சேர்க்க வேண்டியவற்றை அவைக் குறிப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதில் புள்ளி விபரங்களில் மாறுதல் இருந்தால் மட்டுமே கடந்த காலத்தை உதாரணப்படுத்தலாம். மற்ற விஷயங்களுக்கு எல்லாம் அதே தவறை மீண்டும் கூறக்கூடாது. சபை முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. அமைதிக்கு களங்கம் வந்தது என்ற நிலை வந்து விடக்கூடாது என்றார்.

இதையடுத்து திமுக எம்எல்ஏ சிவானந்தம் பேசிய பேச்சுக்களையும் அதையடுத்து அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசிய பேச்சுக்களையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார் சபாநாயகர் ஆவுடையப்பன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X