For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் எதிர்க் கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான பிரச்சனையில் முதல்வரின் பதில் திருப்தி அளிக்காததால் சட்டசபையில் இருந்து அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது நடந்த விவாதம்:

செங்கோட்டையன் (அதிமுக): பயிற்சி மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உதவித் தொகையை மேலும் உயர்த்திக் கொடுக்க வேண்டும். போராட்டம் என்றாலே நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு ஏன் செவி சாய்ப்பதில்லை என்று தெரியவில்லை.

அமைச்சர் பொன்முடி: ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள முதல்வர் உருக்கமான வேண்டுகோளை ஏற்கனவே விடுத்துள்ளார். போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அழைப்பை அரசு மருத்துவர்களும் விடுத்துள்ளனர். இதைப் பற்றி பேச அதிமுகவுக்கு கொஞ்சமும் தகுதியில்லை. எஸ்மா, டெஸ்மா சட்டங்களையும் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவங்களையும் அரசு ஊழியர்கள் மறக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை பேசுவதற்கு அரசு தயாராகத்தான் உள்ளது.

முதல்வர் கருணாநிதி: பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை பற்றி ஒரேயொரு சான்றை மட்டும் அளிக்க விரும்புகிறேன். உத்தரப் பிரதேசத்தில் ரூ.7,500, மேற்கு வங்கத்தில் ரூ.7,500, கர்நாடகத்தில் ரூ.5,500, டெல்லி மற்றும் ஜிம்பரில் ரூ.5,500, கேரளாவில் 5,200, ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, இமாச்சல்ப் பிரதேசத்தில் 5,000, பஞ்சாப், ஹரியானாவில் 4,500, தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தியதன் அடிப்படையில் ரூ.6,000.

பயிற்சி மருத்துவர்கள் இதையெல்லாம் உங்களிடம் தெரிவித்தார்களா என்று தெரியவில்லை. இதை விட எவ்வளவு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?. அரசு மருத்துவர்கள் கூட நேற்று போராட்டத்தைக் கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று பயிற்சி மருத்துவர்களை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களையும் நம்பவில்லை; அந்த அறிக்கைக்கும் செவிசாய்க்கவில்லை. உங்களை (எதிர்க்கட்சிகள்) நம்பி போராட்டத்தை தொடங்குகிறார்கள். என்னை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டில் உள்ள தாய், தந்தையரை நம்ப வேண்டும்.

அப்படி நம்பவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?. இப்போது கூட போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வருவார்களேயானால் நானோ, அமைச்சரோ பேச தயாராக இருக்கிறோம். இது இப்போது சொல்லப்படுகின்ற கருத்தல்ல. கடந்த காலங்களில் எப்போதெல்லாம் போராட்டங்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் அரசு சார்பில் கூறப்படுவதுதான்.

இந்த அரசுக்கு யாரையும் பழி வாங்கும் நோக்கம் இல்லை. கடந்த 3 ஆண்டு காலமாக எந்த பிரச்சனையும் கிடைக்காததால் இந்த பிரச்சனை சில நண்பர்களுக்கு பிடிமானமாகப் போய் விட்டது. இதுதான் சரியான நேரம் என்று எதற்கும் பயப்படாமல் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த ஆட்சியை பொறுத்தவரை, என்னை பொறுத்தவரை யாரையும் ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு போர்க் குணம் அவசியம் என்பதை நானே வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் அந்த போர் குணம் என்பது போர்க்களமாக மாறி விடக் கூடாது.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனி்ஸ்ட்): எங்கள் கட்சிக்கும், இந்தப் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை. பணியில் இருந்த டாக்டர்கள் சிலர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.சில நாட்களுக்கு முன்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு வந்த மாணவர்களை போராட்டம் வாபஸ் என்று எழுதி கொடுக்குமாறு கோரியதாகவும், அதற்கு உடன்படாததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே கருணை மிகுந்த முதல்வர் இந்தப் பிரச்சனையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

சுதர்சனம் (காங்கிரஸ்): பயிற்சி மருத்துவர்களை அமைச்சர் அழைத்து மூன்றரை மணி நேரம் பேசி உடன்பாடு ஏற்படவில்லை. மறுநாள் நாங்கள் கூட அவர்களிடம் பேசினோம். அஹிம்சை வழிமுறையை கையாளுங்கள். போராட்டம் தேவையில்லை என்று அவர்களிடம் கூறினோம். அவர்களும் ஒப்புக்கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படவிருந்த நிலையில் சில நண்பர்கள் அவர்களை தூண்டிவிட்டு போராட வைத்திருக்கிறார்கள்.

(அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் ஏதோ சொல்லவே அவையி்ல் சலசலப்பு ஏற்பட்டது)

முதல்வர் கருணாநிதி: தூண்டி விட்டவர்களைக் கூட சுதர்சனம் நண்பர்கள் என்றுதான் சொல்கிறார். அதற்காக ஆத்திரப்பட தேவையில்லை.

சுதர்சனம் (காங்கிரஸ்): தூண்டிவிட்டவர்கள் கூறியதன் அடிப்படையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற தவறான வழியை அவர்கள் எடுத்துள்ளனர். வெகு விரைவில் அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்கும். நாங்களும் பேசி நல்ல முடிவு காணுவோம். மற்றவர்கள் நன்மை செய்யாவிட்டாலும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்.

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): யாரோ தூண்டி விடுகிறார்கள் என்று கூறுவதே பேச்சுவார்த்தையை பின்னுக்கு தள்ளிவிடக் கூடும். இந்தப் பிரச்சனையில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள் விஷயத்திலும் நியாயம் உள்ளது. அவர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வந்து பணியாற்றுகிறார்கள். எனவே அவர்களது கோரிக்கையின் நியாயத்தையும் ஏற்க வேண்டும். அதைவிட்டு அச்சுறுத்தல் தொணியில் பேசுவது கூடாது.

முதல்வர் கருணாநிதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல அச்சுறுத்தும் எண்ணம் திமுகவுக்கு என்றுமே இருந்ததில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நீங்களெல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டு போராட்டத்தை நிறுத்தி அவர்களை அழைத்து வந்தால் பேசுவதற்கு தயார். அவர்களை ஏமாற்றும் எந்த காரியத்திலும் அரசு ஈடுபடாது.

ஜி.கே.மணி (பாமக): முதல்வர் ஒரு தேதியை அறிவித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறலாம்.

திருமலைக் குமார் (மதிமுக): இந்தப் போராட்டத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடும் கிடையாது. அவர்களாகவே போராடுகிறார்கள். அவர்களது கோரிக்கை எல்லாம் முதல்வரை சந்திக்க வேண்டும் என்பதுதான். எனவே அவர்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அதிமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X