For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாம்பரம்-மதுரவாயல் டோல் கட்டணம்: மக்கள் கொதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம்- மதுரவாயல் இடையிலான நெடுஞ்சாலையில் செல்வதற்கான கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனதாரர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் நிர்வகித்து வருகிறது. இந்தத் துறை முன்பு டி.ஆர். பாலு வசம் இருந்தது. அப்போதுதான் இந்த சாலை போடப்பட்டது.

இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ. 10ம், வேன்களுக்கு ரூ. 15ம், பஸ்களுக்கு ரூ. 25ம் நுழைவுக் கட்டணமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட கட்டணங்களை முறையே 30, 40, 85 என குண்டாங்குறையாக உயர்த்தி விட்டனர். ஜூலை 4ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதேபோல ஒரு முறை சென்று திரும்பக் கூடிய (24 மணி நேரங்களுக்குள்) வாகனங்களுக்கான கட்டணமும், கார்கள், வேன்கள், லாரிகள்-பஸ்களுக்கு முறையே ரூ. 40, 60, 125 என உயர்த்தியுள்ளனர். முன்பு இது ரூ. 15, 22.50, 37.50 என இருந்தது.

இந்த அதிரடி கட்டண உயர்வுக்கு அனைத்து வாகனதாரர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது மிக மிக அநியாயமான உயர்வு, இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த சாலையில் பயணிப்பதை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகத்திடம், சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் லாரி, டேங்கர், டிப்பர், டிரய்லர், வேன் உரிமையாளர்கள் நலச் சங்கம் எடுத்துச் சென்றுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார் கூறுகையில், இது கொஞ்சம் கூட நியாயமே இல்லாத உயர்வு. மதுரவாயல் - மாதவரம் இடையிலான பைபாஸ் சாலையின் 2வது கட்டப் பணிகள் இன்னும் முடியவடையாத நிலையில், அங்கு இன்னும் 3 பாலங்கள் கட்டப்படாத நிலையில், இப்படி ஒரு உயர்வை அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

43 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சென்னை - தடா நெடுஞ்சாலையில் வசூலிப்பதை விட, வெறும் 20 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தாம்பரம் - மதுரவாயல் பிரிவில் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றதாகும் என்றார்.

ஆனால் கட்டணத்தைக் குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று அலட்சியமாக கூறுகிறது தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையகம்.

ஏற்கனவே ஐடி நெடுஞ்சாலை மற்றும் சென்னை -தடா நெடுஞ்சாலையில் கட்டண உயர்வைக் கண்டித்து சில லாரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X