For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிந்தித்துப் பாருங்கள் - சீற்றம் கூடாது: அதிமுகவுக்கு வரதராஜன் அறிவுரை

By Staff
Google Oneindia Tamil News

Varadharajan
சென்னை: விமர்சனங்களை எதிர் கொள்வதற்கான குறைந்தபட்ச சகிப்புத் தன்மையைக் கூட இழந்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சீற்றத்தைக் காட்டி, தடித்த வார்த்தைகளை அள்ளித் தெளித்து, அதிமுக அறிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தச் சீற்றத்தை விடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள விமர்சனக் கருத்துக்களை அதிமுக தலைமை சிந்தித்துப் பார்ப்பது நல்லது என்று கூறியுள்ளார் சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன்.

இது குறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

15-வது மக்களவைத் தேர்தல் தொடர்பான பரிசீலனை அறிக்கை ஒன்றை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில், அத்தீர்மானம் 8-7-2009 அன்று வெளியிடப்பட்டது.

அதை கூட்டணி தர்மத்திற்கு எதிரானது, விஷமத்தனமானது, நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, அரசியல் நாகரிகமற்றது என்று கடுமையாக விமர்சித்து அ.தி.மு.க. தலைமை நிலையச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

செங்கோட்டையன் சி.பி.எம் மத்தியக்குழு வெளியிட்டுள்ள மக்களவைத் தேர்தல் பரிசீலனை அறிக்கையையோ, தமிழ்நாடு மாநிலக்குழுவின் தீர்மானத்தையோ முழுமையாகப் படித்துப் பார்த்திருப்பாரேயானால், இவ்வாறு சீற்றத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந்த தோல்விக்கு அ.தி.மு.க.வைக் குறை கூறுவது எப்படிப் பொருத்தமாக இருக்கும்?' என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல மக்களவைத் தேர்தலின்போது அ.தி.மு.க. தன்னிச்சையாகச் செயல்பட்டது என்று பொத்தாம் பொதுவாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருப்பதாகவும் அவர் வேதனைப்பட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது; மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக்கட்சிகளும் முன்வைத்த மதச்சார்பற்ற மாற்று அரசு என்ற அறைகூவலை மக்கள் சாத்தியமான ஒன்றாகவோ, நம்பகத்தன்மை கொண்டதாகவோ கருதவில்லை; மத்தியில் நிலையான மதச்சார்பற்ற அரசு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைமையில்தான உருவாக்க முடியும் என்று மக்கள் கருதினார்கள்;

இவைதான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்ற பெற்றதற்கும், பா.ஜ.க. இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவியதற்கும் காரணம்' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு நிதானத்தோடு பரிசீலனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கட்சியின் மாநிலக்குழுவின் தீர்மானத்தில் அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு கண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற சரியான முடிவை மேற்கொண்டு செயல்பட்டது' என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடவே, அகில இந்திய அளவில் நிலவிய காங்கிரசுக்கு சாதகமான சூழல் தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது; மாநில தி.மு.க.அரசின் மக்கள் நலத்திட்டங்கள் இந்த வெற்றிக்கு உதவியது; இதனோடு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி கடைபிடித்த பணபலம், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை அராஜகம், சிவகங்கை போன்ற சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் ஆகியவற்றையும் மாநிலக்குழுவின் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் செல்வாக்கும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிகள் பெற்றிருந்த வாக்கு சதவிகிதமும், இந்த அணிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை நல்கியிருக்க வேண்டும்.

இது சாத்தியமாகாமல் போனதற்கான பிரதான காரணங்களாக அகில இந்திய நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றையே சி.பி.எம் முன்வைத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், ஒரு சில பலவீனங்களை சுட்டிக் காட்டியதை மட்டுமே மையமாக வைத்து செங்கோட்டையன் அறிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான அரசியலாகாது.

சி.பி.எம். மத்தியக்குழுவின் பரிசீலனை அறிக்கையிலேயே, தமிழகத்தில் கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலுமே அ.தி.மு.க. நமது வேட்பாளர்களுக்காகத் தீவிரமாகப் பாடுபட்டார்கள்' என்பதும் இடம் பெற்றிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவுகளைத் தொடர்ந்து நிலை நாட்டுவது, மக்கள் பிரச்சினைகள் மீது கூட்டு இயக்கங்களில் அவர்களைக் கொண்டு வருவது ஆகியவற்றை சி.பி.எம். அகில இந்திய அளவில் எதிர்காலக் கடமைகளாக முன்நிறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து முறியடிக்க சுயேச்சையாகவும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் போராடும் என்று மாநிலக் குழுத் தீர்மானம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இத்தகைய அரசியல் வழியில் நின்றுதான் நிகழ்கால சட்டமன்றக்கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி செயலாற்றி வருகிறது. இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்க மறுத்து, விமர்சனங்களை எதிர் கொள்வதற்கான குறைந்தபட்ச சகிப்புத் தன்மையைக் கூட இழந்து, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சீற்றத்தைக் காட்டி, தடித்த வார்த்தைகளை அள்ளித் தெளித்து, அறிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தச் சீற்றத்தை விடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள விமர்சனக் கருத்துக்களை அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்தித்துப் பார்ப்பது நல்லது என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X