For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் 9% அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கற்பழிப்புச் சம்பவங்கள் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் 3 சதவீதம் குறைந்துள்ளதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில், காவல்துறை கொள்கை குறிப்பு விளக்கத்தை தாக்கல் செய்தபோது இத்தகவலை வெளியிட்டார் ஸ்டாலின்.

2008ம் ஆண்டில் மொத்தம் 573 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின. இது 2007ல் 523 ஆக இருந்தது. இது 9.56 சதவீதம் உயர்வாகும்.

2008ம் ஆண்டில் கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வீட்டு வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகியவை தொடர்பாக 4133 வழக்குகள் பதிவாகின. இது 2007ம் ஆண்டில் 4265 ஆக இருந்தது.

2008ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை 16 சதவீதம் குறைந்திருந்தது. 2008ல் வீட்டு வன்முறை தொடர்பாக 1648 வழக்குகள் பதிவாகின. இது 2007ல் 1976 ஆக இருந்தது.

பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் 2008ல் 1705 ஆக இருந்தன. இது 2007ல் 1558 ஆக இருந்தது. பாலியல் பலாத்காரம் கடந்த ஆண்டில் 9.4 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது என்றார்.

தாலி பறிப்பு அதிகம் நடந்தது யார் ஆட்சியில்?:

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் யாருடைய ஆட்சியில் அதிகமான தாலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன என்ற விவாதம் நடந்தது. அதன் விவரம்:

சேகர்பாபு (அதிமுக: தமிழகத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும் பெண்கள் கடத்தல் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் கொலையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2006ல் 28 ஆக இருந்த கொலைகள், இந்த ஆண்டில் 6 மாதங்களிலேயே 49 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 30 நாள்களில் மட்டும் சென்னையில் 40க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, கணவன் இருந்தும் தாலி பறிபோய் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களின் கழுத்தை அறுத்தும் நகை திருடப்படுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5,400க்கும் அதிகமான பெண்களுக்கும் தாலி தரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தாலி பறிக்கப்படுகிறது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அதிமுக ஆட்சியை விட ஆயிரம் மடங்கு திருமணம் திமுக ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. தாலி பறிப்பு இந்த ஆட்சியில் மட்டுமல்ல, எல்லா ஆட்சியிலும்தான் நடைபெற்று வருகிறது. அதற்கு போலீசார் தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி: திமுக ஆட்சிக்காலத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு திருமண நிதியுதவி ரூ.20,000 வழங்கப்பட்டு வருகிறது.

துணை முதல்வர் ஸ்டாலின்: திமுக தொடங்கிய பெண்கள் திருமண உதவித்திட்டத்தை நிறுத்தியது உங்கள் ஆட்சி. இந்த ஆட்சியில் 2 லட்சத்து 27 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவி தரப்பட்டிருக்கிறது.

பன்னீர்செல்வம் (அதிமுக): பெண்கள் திருமண நிதியுதவித்திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டதாக துணை முதல்வர் சொன்னார். அது தவறான தகவல். அதிமுக ஆட்சியில் 17,122 பெண்களுக்கு ரூ.22.15 கோடி திருமண உதவி வழங்கப்பட்டுள்ளது. ஈ.வே.ரா. மணியம்மையார் விதவையர் மகள்களுக்கான திருமண திட்டத்தில் 7,774 பெண்களுக்கு 694 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 56 ஆயிரம் பெண்களுக்கு இந்த ஆட்சியில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. உங்களது ஆட்சிக்காலத்தில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே நிதி உதவி அளிக்கப்பட்டது.

அமைச்சர் கீதாஜீவன்: திமுக அறிமுகப்படுத்திய மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் 2002ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் 2.25 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மது வருமானம் அதிகரிப்பு:

அதே போல சட்டமன்றத்தில் தாக்கலான இன்னொரு விவரத்தின்படி,

கடந்த 94-95-ம் ஆண்டு மதுபான ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரி மூலம் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.995 கோடியே 69 லட்சம் வருமானம் கிடைத்தது. இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கடந்த 2007-2008ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 821 கோடியாக வருமானம் வந்தது.

இந்த ஆண்டு (2008-09) மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்துள்ள வருமானம் ரூ.10 ஆயிரத்து 601 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட ரூ.1780 கோடி அதிகமாகும்.

ஆனாலும் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிதாக மேலும் மதுபான கடைகளை திறப்பதில்லை என்ற முடிவில் உள்ளதாகக் அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X