For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை இடைத் தேர்தல் - அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
குன்னூர்: தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலை புறக்கணிக்கப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதையடுத்து மதிமுகவும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.

குன்னூரில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

''திமுக ஆட்சி செய்து வருகிற இந்த சூழ்நிலையில், திமுக என்ன செய்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும், காங்கிரஸ் தலைமையிலான, திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள இந்த சூழ்நிலையில், மத்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால், ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்று அதிமுக செயற்குழு தீர்மானிக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் ஜெயலலிதா அவருக்கு வசதியாக குன்னூரில் செயற்குழுக் கூட்டத்தை இன்று கூட்டினார்.

உபாசி சாலையில் உள்ள விவேக் ஹோட்டலில் இந்த செயற்குழு கூட்டம் நடந்தது. ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் குன்னூர் வந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு நடந்த இக் கூட்டத்திற்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கும் இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2004ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், அனைத்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்வியே அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இடைத் தேர்தலில் தனது வசம் இருந்த வைத்திருந்த மதுரை மேற்குத் தொகுதியை இழந்தது. மதிமுகவிடமிருந்து பெற்று போட்டியிட்ட திருமங்கலத்திலும் தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர்.

இந் நிலையில், இப்போது வந்துள்ள இடைத் தேர்தலிலும் நிச்சயம் ஆளுங்கட்சியின் 'சகலகலா பலம்' விளையாடும் என அதிமுக எதிர்பார்க்கிறது.

இடைத் தேர்தலிலும் தோற்று விட்டால், அதிமுகவினர் இன்னும் சோர்ந்து போய் விடுவார்கள், தேர்தல் என்ற வார்த்தையைக் கேட்டாலே கிலி ஏற்பட்டு விடும். இந்த மனநிலையுடன் 2011ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலை சந்தித்தால் மேலும் பின்னடைவே ஏற்படும் என்பதால் இடைத் தேர்தலை புறக்கணிக்கலாம் என்று ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதே பயத்தில் உள்ள பாமக, மதிமுகவும் இடைத் தேர்தலை புறக்கணிக்கலாம் என்று கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் முறைத்துக் கொண்டு நிற்கும் நிலையில் இந்திய கம்யூனி்ஸ்டை மட்டுமே நம்பி 'கோதாவில்' குதிக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு.

இந்த நிலையில் இடைத் தேர்தலை சந்திப்பதற்குப் பதில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார். தேர்தலை அதிமுக புறக்கணிக்கத் திட்டம் என்பதை நாம் கடந்த வாரமே சொன்னது நினைவுகூறத்தக்கது.

செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இன்று நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

இந்த தீர்மான விவரங்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்துள்ளேன்.

அதனை அடுத்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கும் இதைப்பற்றி தெரிவித்துள்ளோம்.

ஏற்கனவே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே இதைப்பற்றி விவாதித்து இருக்கிறேன். ஆகவே இன்று அ.தி.மு.க எடுத்துள்ள முடிவை வைகோவும், ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.

நாங்களும் புறக்கணிக்கிறோம் - வைகோ

அதிமுக முடிவு வெளியான சில மணி நேரங்களில் மதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் முடிவையொட்டி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க இடைத் தேர்தலைப் புறக்கணிக்க மதிமுக முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஓரிரு நாளில் சிபிஐ முடிவு...

தேர்தல் புறக்கணிப்பு குறித்து சிபிஐ ஓரிரு நாளில் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான அதிமுக தலைமையிலான கூட்டணி தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளதால் தமிழக அரசியலில் புது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் முறை...

முக்கிய கட்சியான அதிமுக சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X