For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செரீனா கஞ்சா கேஸ்-நினைவூட்டிய ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காவல்துறையில் இந்தாண்டு மேலும் 9,000 போலீசார் சேர்க்கப்படவுள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வசம் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவர் கூறுகையில்,

இந்த ஆண்டு 9,000 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மதராஸ் மாகாணம் என்று இருந்தபோது, இந்த மாநிலத்துக்கு 1947ல் காவல்துறைக்கு ரூ.3.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து, இப்போது ரூ.2,855 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1947ல் 36,937 காவலர்கள் இருந்தார்கள். தமிழகம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபிறகு 1952ல் 23,927 காவலர்கள் இருந்தனர். இப்போது 1,03,098 காவலர்கள் உள்ளனர்.

தமிழகத்தில்தான் அதிக போலீசார்

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை போலீசார் என்ற அடிப்படையில் பார்த்தால், மேற்கு வங்கத்தில் 92 போலீசாரும், கர்நாடகத்தில் 94 பேரும், ஆந்திரத்தில் 96 பேரும், கேரளத்தில் 108 பேரும், குஜராத்தில் 130 போலீசாருமாக உள்ளனர். இதில், தேசிய சராசரி 122 ஆக உள்ளது. தமிழகத்தில் 133 போலீசாரும் உள்ளர்.

காவல்நிலையங்களின் எண்ணிக்கையை பொருத்தவரையில், ஆந்திரம், உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் 3வதாக உள்ளது. ஒட்டுமொத்த நாட்டை கணக்கில் கொண்டால், 88,000 மக்களுக்கு ஒரு காவல்நிலையம் உள்ளது. தமிழகத்தில் 53,000 பேருக்கு ஒரு காவல் நிலையம் உள்ளது.

பரப்பளவின் அடிப்படையில் பார்த்தால், தேசிய அளவில் 254 சதுர கிலோமீட்டருக்கு ஒரு காவல் நிலையம்; தமிழகத்தை பொருத்தவரையில் 106 சதுர கிலோமீட்டருக்கு ஒரு காவல் நிலையம் உள்ளது.

இந்தியாவிலேயே மகளிர் காவல் பிரிவு முதன்முதலில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. தமிழகத்தில்தான் தற்போது இந்தியாவிலேயே அதிக அளவில் 10,130 மகளிர் காவலர்கள் (196 நிலையங்களில்) உள்ளனர்.

கடந்த ஆண்டில் முக்கியமான 4 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொடைக்கானல் பகுதியிலே பயிற்சி முகாம் அமைப்பதற்கு மாவோயிஸ்டுகள் முயன்றபோது, தொடக்கத்திலேயே அம்முயற்சி முறியடிக்கப்பட்டது.

பல மாநிலங்களில் தீவிரவாதிகள் தலைதூக்கி இருந்தாலும், தமிழகத்திலே தீவிரவாதம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 2008-ல் 1,630 கொலைகள் நடந்திருக்கின்றன. குடும்பத் தகராறு காரணமாக 429 கொலைகளும், வாய்த் தகராறு காரணமாக 427 கொலைகளும், முன்விரோதத்தில் 284 கொலைகளும், காதல் விவகாரத்தில் 155 கொலைகளும் நடந்திருக்கின்றன.

திருட்டு, கொள்ளை, வழிப்பறி என இவற்றிற்காக நடந்த கொலைகள் மிகமிகக் குறைவு தான்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற 1,630 கொலைக் குற்றங்களில் 1,526 கொலைக் குற்றங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு பேணிப் பாதுகாக்கப்பட்டது என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். அவர் முழு பூசணிக்காயை சோற்றிலே மறைத்துவிடக்கூடாது. திண்டிவனத்தில் கவர்னர் காரைத் தாக்க முயற்சி, தேர்தல் ஆணையர் சேஷன் ஓட்டலில் சிறைவைக்கப்பட்டது, செரீனா கஞ்சா வழக்கு என பெரிய பட்டியலே கையில் வைத்திருக்கிறேன். இதுதான் பொற்கால ஆட்சியா? என்றார் ஸ்டாலி்ன்.

கருணாநிதிக்கு பதில் ஸ்டாலின்:

தனது துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஸ்டாலின் பதில் அளித்துக் கொண்டிருந்ததை முதல்வர் கருணாநிதி உன்னிப்பாகக் கவனித்தார்.

உடல்நிலை காரணமாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தனது துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை எதற்கும் முதல்வர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வசம் உள்ள பொதுத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன் தான் பதிலளித்தார்.

இந் நிலையில், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட உள்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு கருணாநிதிக்குப் பதிலாக ஸ்டாலின் தான் பதிலளித்தார்.

இதை ஸ்டாலினும் தனது பதிலுரையில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,

"பொன் வைக்க வேண்டிய இடத்திலே ஒரு சிறிய பூவையாவது வையுங்கள்'' என்கிற பழமொழிக்கேற்ப தமிழக முதல்வரின் கட்டளையை ஏற்று, உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

அதாவது, கானகத்திலே யானை தன் குட்டியைத் தூக்கிப்போட்டுப் புரட்டித் தள்ளி விளையாடும். அதைத் துன்புறுத்துவதற்காக அல்ல; பயிற்சி தருவதற்காக; தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக; எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக அந்தப் பயிற்சியை அது வழங்கும்.

அந்த உணர்வோடுதான், இப்போது நான் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X