For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரணாசியில் 'வைரம்'-பிற பகுதிகளில் பாதி கிரகணம்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்த நூற்றாணடின் மிக நீண்ட, மிக அரிய சூரிய கிரகணம் உலகம் முழுவதும் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடந்தேறியது. இதனால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உள்பட ஆசியாவின் பல பகுதிகளும் இருளில் மூழ்கின.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் முழுமையாக தெரியவில்லை. ஆனாலும் இருள் சூழ்ந்தது. வாரணாசி, சூரத்தில் மட்டும் முழுமையாகத் தெரிந்தது. பீகார் மாநிலம் தெரங்கானாவில் மேகக் கூட்டத்தின் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இயற்கையின் மிக அரிய நிகழ்வான இதைக் காண உலகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

வாரணாசியில் 'வைரம்'...

இந்தியாவில் இன்று காலை 5.28 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. குஜராத் மாநிலம் சூரத்துக்கு அருகே அரபிக் கடலில் முதலில் சூரிய உதயப் புள்ளியில் கிரகணம் தொடங்கியது.

சூரிய கிரகணத்தைப் பார்க்க சூரத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கண்டு களித்தனர். பிற பகுதிகளை விட இங்குதான் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலும் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரிந்தது. அங்கு வைர மோதிரம் போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதைக் கண்டு கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வியப்பின் உச்சிக்கேப் போய் விட்டனர்.

தெரங்கானாவில் தெரியவில்லை...

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநிலம் தெரங்கானாவில் மேகக் கூட்டம் காரணம்க சூரிய கிரகணம் சரிவரத் தெரியவில்லை. இதனால் உலகம் முழுவதிலும் இருந்தும் இங்கு வந்து கூடிய விஞ்ஞானிகள், கிரகண ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட விஐபிக்களும் சூரிய கிரகணத்தைப் பார்க்க கூடியிருந்தனர். இந்த இடத்தில்தான் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும் என்று நாசா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாசாவைச் சேர்ந்த பிரதிநிதிகள், பல நாட்டு விஞ்ஞானிகள், வானியல் ஆய்வாளர்கள் பெரும் திரளாக தெரங்கானாவில் கூடியிருந்தனர். அங்குள்ள ஒரு இரண்டு மாடி மருத்துவமனையின் மொட்டை மாடியில் விஐபிக்கள் முகாமிட்டிருந்தனர்.

ஆனால், மேகக் கூட்டமாக இருந்ததால் கிரகணம் சரியாகத் தெரியவி்ல்லை.

வட இந்தியா இருண்டது...

சூரிய கிரகணம் தொடங்கியதுமே வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. மேகக் கூட்டத்தால் கிரகணம் பெருமபாலான பகுதிகளில் தெரியாவிட்டாலும் அதன் இருள் பரவி அமர்க்களப்படுத்தியது.

ஆக்ரா, குவஹாத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் பாதி அளவே கிரகணத்தைக் காண முடிந்தது. தலைநகர் டெல்லியிலும் முக்கால்வாசி கிரகணத்தையேப் பார்க்க முடிந்தது.

டெல்லியில் உள்ள நேரு பிளானட்டோரியத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.

சென்னையில் ...

சென்னையிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரியவில்லை. கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க சிறப்பு தொலைநோக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று பயன்படுத்தி கிரகணத்தைப் பார்த்தனர்.

ஆனாலும், மேகக் கூட்டம் காரணமாக கிரகணம் சரிவரத் தெரியவில்லை. பாதி அளவே தெரிந்தது.

நெல்லையில்...

நெல்லையி்ல் கிட்டத்தட்ட 40 சதவீத அளவுக்கு கிரகணம் தெரிந்தது. இதை அங்குள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

கொல்கத்தாவில் 91 சதவீதம்..

கொல்கத்தாவில் 91 சதவீத கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. மேகக் கூட்டம் ஓரளவுக்கு இருந்தாலும் கூட இந்த அளவுகக்கு கிரகணத்தைப் பார்க்க முடிந்ததால் மக்கள் திருப்தி அடைந்தனர்.

கொல்கத்தாவில் காலை 6.20 மணிக்கு கிரகணம் ஏற்பட்டது. நிலவின் நிழல், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கடந்து சென்ற அந்த அரிய காட்சியைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பிறையைப் போல சூரியன் காணப்பட்டது.

உயர்ந்த கட்டடங்களின் மாடிகள் உள்ளிட்டவற்றில் இருந்து மக்கள் இந்த இயற்கை அதிசயத்தைக் கண்டு களித்தனர்.

ஹூக்ளி நதிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

ஜெய்ப்பூரில்...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிகாலை 5.46 மணிக்கு கிரகணம் ஏற்பட்டது. ஆனால் மேகக் கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. இதேபோல உதய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர் உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் சரிவரத் தெரியவில்லை.

அஸ்ஸாமில் முழுமை...

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் பகுதியில் காலை 6.31 முதல் 6.34 வரை முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

குருஷேத்ராவில் புனித நீராடிய மக்கள்

சூரிய கிரகணத்தையொட்டி ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.

அங்குள்ள பிரம்மசரோவர் நதியில், அவர்கள் புனித நீராடினர். கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் புனித நீராடியிருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் இங்கு அலை அலையென வரத் தொடங்கினர்.

மகாபாரதப் போர் நடந்த இடம் தான் குருஷேத்திரம். இதனால் இது புனித இடமாக கருதப்படுகிறது. சண்டிகரிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் குருஷேத்திரம் உள்ளது.

பள்ளிகள் நேரம் மாற்றம்...

சூரிய கிரகணத்தையொட்டி இன்று தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் நேரங்கள் மாற்றி அமைக்ப்பட்டன. 9 மணிக்கு தொடங்குவதாக இருந்த பல பள்ளிகளின் நேரம் 9.30, 10 மணி என மாற்றப்பட்டிருந்தன. இருப்பினும் எந்தப் பள்ளிக் கூடத்திற்கும் விடுமுறை விடப்படவில்லை.

கோவிலகள் நடை சாத்தப்பட்டன...

அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று அதிகாலையில் கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நடைகள் சாத்தப்பட்டிருந்தன. கால பூஜையின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.

தைவான் நாட்டில் மிருகக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளின் கண்கள் கிரகணத்தின்போது பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவற்றுக்கு கருப்பு நிறத்தில் பெரிய கண்ணாடிகள் அணிவிக்கப்பட்டிருந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X