For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் நிலையங்களில் 'தம்' அடிக்க தடை!

By Staff
Google Oneindia Tamil News

Smoking
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 84 போலீஸ் நிலையங்களிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கருத்தரங்கம் நடந்தது.

இதையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று முதல் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு 'இது புகையில்லா காவல் துறை ஆணையாளர் அலுவலகம்' என்ற பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்து வைத்து கருத்தரங்கில் பேசிய கமிஷனர் ராஜேந்திரன்,

ஒரு சிலருக்கு சிறு வயதில் இருந்து புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. பின்னர் வேலைக்கு சென்று கையில் காசு புழங்க ஆரம்பித்ததும் அந்த பழக்கம் மேலும் அதிகமாகிறது. 35 வயதை தாண்டி நோய் வாய்ப்பட்ட பின்னர்தான் அதை ஒரு கெட்ட பழக்கம் என்று உணர்கிறோம்.

எனக்கும் கடந்த 25 ஆண்டுகளாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஐ.பி.எஸ். பயிற்சியின்போது எனக்கு ரத்த கொதிப்பு இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் புகை பிடிக்காமல் இருந்தேன்.

பின்னர் 2 ஆண்டுகள் மன உளைச்சல் காரணமாக மீண்டும் புகை பிடிக்கத் தொடங்கினேன். கடந்த 1996ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நிரந்தரமாக நிறுத்திவிட்டேன். தற்போது யாராவது சிகரெட் வேண்டுமா? என்று கேட்டால், வேண்டாம் என்று சொல்லும் மன உறுதி ஏற்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் இருப்பவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் நன்றாக வேலை செய்ய முடியும். எனவே போலீசார் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்.

கமிஷனர் அலுவலகத்தில் புகை பிடிக்க கூடாது என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதை அனைத்து போலீசாரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னையில் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 84 போலீஸ் நிலையங்களிலும் புகை பிடிக்க தடை விதித்துள்ளோம். ஒரு வாரத்திற்குள் இது அமலுக்கு வரும். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களும் அங்கு பணி புரிபவர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் பொது இடத்தில் புகை பிடித்த போலீஸ்காரரின் படம் ஒரு பத்திரிகையில் இடம் பெற்றது. அந்த போலீஸ்காரர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரி அருகில் புகையிலை, சிகரெட் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபாதைகளில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

15 லட்சம் அபராதம் வசூல்...

இந்தக் கருத்தரங்கில் பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.15 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை படங்கள் பொறிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களைத்தான் விற்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

வரும் 1ம் தேதி முதல் எச்சரிக்கை படங்கள் பொறிக்கப்படாத புகையிலை பொருட்கள் விற்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். புகையிலை தயாரிப்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X