For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - கண்ணப்பனுக்கு சீட் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

DMK Candidates
சென்னை: தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. இளையாங்குடி, கம்பம், பர்கூர் தொகுதிகளில் அது போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களையும் திமுக அறிவித்துள்ளது. சீட் கேட்டிருந்த கண்ணப்பனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விட்டது. அதிமுக, மதிமுக, பாமக தேர்தலைப் புறக்கணிக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இளையாங்குடி, கம்பம், பர்கூர் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க.வும், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

தி.மு.க. போட்டியிடும் 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் 18-ம் நாள் நடைபெறவிருக்கும் இளையாங்குடி, கம்பம், பர்கூர் ஆகிய மூன்று தொகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடுவது என்றும், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், இரண்டு கட்சிகளும் பேசி முடிவு எடுத்துள்ளன.

இந்த நிலையில், இளையாங்குடி தொகுதியில் சுப.மதியரசன் பி.காம், கம்பம் தொகுதியில் கம்பம் நா.ராமகிருஷ்ணன் எம்.ஏ. (முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்), பர்கூர் தொகுதியில் கே.ஆர்.கே.நரசிம்மன் பி.ஏ. ஆகியோர் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு..

கம்பம் - ராமகிருஷ்ணன்

கம்பம் ராமகிருஷ்ணன் எம்.ஏ.படித்துள்ளார். 30.7.1949-ல் பிறந்த இவர் பெரியகுளம் எம்.பி.யாக இருந்த கம்பம். நடராஜனின் தம்பி ஆவார்.

1989 தேர்தலில் தி.மு.க. சார்பில் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு வைகோ ம.தி.மு.க.வை தொடங்கியபோது, ராமகிருஷ்ணன், தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வில் சேர்ந்தார். 2001 தேர்தலில் கம்பம் தொகுதியில் ம.தி.மு.க.சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின்னர் 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ம.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.

கடந்த மார்ச் மாதம் கம்பம் ராமகிருஷ்ணன், தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார்.

ராமகிருஷ்ணனின் மனைவி பெயர் ஜெயராணி. இவர்களுக்கு தீபலட்சுமி என்ற மகளும், வசந்த் என்ற மகனும் உள்ளனர். கம்பத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சணகிரி மகளிர் கல்லூரியின் செயலாளராக ராமகிருஷ்ணன் உள்ளார்.

இளையாங்குடி - சுப.மதியரசன்

சுப.மதியரசன் (47) இளையான்குடி ஒன்றிய தி.மு.க.செயலாளராக தற்போது பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சுப்பிரமணியனும் ஒன்றிய செயலாளர் பதவி வகித்துள்ளார்.

சுப.மதியரசன், முதலில் தி.மு.க.ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாகவும் பின்னர் பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது 3-வது முறையாக ஒன்றிய செயலாளர் பொறுப்பை அவர் வகிக்கிறார். இவரது மனைவி பெயர் கனகவல்லி. மகள் சூரியா.

பர்கூர் - கே.ஆர்.கே.நரசிம்மன்

கே.ஆர்.கே.நரசிம்மனுக்கு வயது 45. பி.ஏ. பட்டதாரி, சொந்த ஊர் இதே தொகுதியில் உள்ள மத்தூரை அடுத்த கொண்டிரெட்டிப்பட்டி.

விவசாயி. இவரது தந்தை கே.ஆர்.கிருஷ்ணன், முன்னாள் தி.மு.க.எம் எல். ஏ. ஆவார். இவர் 1971 முதல் 76 வரை பழைய ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தாயார் பெயர் அலமேலு அம்மாள்.

கே.ஆர்.கே.நரசிம்மன் தற்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், ஏற்கனவே மத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இவரது மனைவி, வேதவள்ளி, மத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு கவுரிபிரியா, பிஷிரீத்தி என்ற 2 மகள்களும், தர்மரை செல்வன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

கண்ணப்பனுக்கு சீட் மறுப்பு...

மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் கம்பம் தொகுதியில், போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்னொரு முக்கிய மதிமுக பிரமுகரான கண்ணப்பனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அவரது தொண்டாமுத்தூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி விட்டது திமுக.

கண்ணப்பன் சீட் கோரி விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கும் அவர் வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த முக்கியத் தலைவர்களான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இதேபோல தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேர்தலின்போது சாதாரண கட்சிப் பதவி தரப்பட்டது.

அதேபோல தற்போது கண்ணப்பனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கம்பம் ராமகிருஷ்ணன் மட்டும் இதில் தப்பி மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X