For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் கை மீது பைக்கை ஓட்டி சாகஸம்-சர்ச்சை

By Staff
Google Oneindia Tamil News

Students transformed into stunt-masters at Villupuram school
சென்னை: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழாவின்போது மாணவர்களை படுக்க வைத்து அவர்களது கைகள் மீது பைக்கை ஓட்டி சாகச செயல் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இதுபோன்ற சாகச செயல்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்பெரும்பாக்கம் என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அண்மையில் காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது.

அந்த விழாவின்போது, பள்ளியில் படிக்கும் கராத்தே கற்ற மாணவர்களின் கைகளின் மேல் மோட்டார் பைக் ஏற்றி சாகசம் நிகழ்த்தப்பட்டது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவியும் வந்திருந்தார். அவர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு கூறினார். மாணவர்களை இதுபோன்ற விபரீதமான செயல்களுக்கு எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்று ஆசிரியர்களிடம் கண்டிப்புடன் கூறினார்.

இந்த நிலையில் மாணவர்கள் கைகள் மீது பைக்கை ஓட்டிய செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேரடியாக பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் ராமானுஜத்திடம் விசாரணை நடத்தினார்.

பள்ளி மாணவ-மாணவிகளை சாகசம் என்ற பெயரில் இதுபோன்று ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை செய்தார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன்படி, பள்ளி மாணவ-மாணவிகளை சாகச செயல்களில் ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.

இந்த பரபரப்புச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் கூறுகையில், போதிய பயிற்சிகளைக் கொடுத்த பிறகுதான் இந்த சாகச செயலுக்குரிய மாணவர்களைத் தேர்வு செய்தேன். ஒரு மாணவரின் உடல் திறனை சோதிக்கும் வகையில்தான் கராத்தே கற்றுத் தரப்படுகிறது. கராத்தே பயிற்சியில் செங்கற்களை உடைப்பது, கற்களை உடைப்பது போன்றவை வழக்கமாக உள்ளவைதான். இதெல்லாம் நமது உடல் திறனை வெளிப்படுத்தும் செயல்கள்தான் என்றார்.

ஏற்க முடியாத செயல் - கனிமொழி

இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவிக்கையில், நிகழ்ச்சிக்கு வந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சரின் மனைவி இதுகுறித்துக் கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. உண்மையில் அவர்தான் இந்த நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க அனுமதியுடன்தான் இது நடத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல் தவறானது. அதிலும் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து ஆசிரியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு சிறார் உரிமைகள், பாதுகாப்பு குறித்த போதனை மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது.

விழாவுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களைக் கவருவதற்காக இப்படியெல்லாம் செய்வதை ஏற்க முடியாது. அடிப்படையில் சிறார் உரிமைகள் என்று ஒன்று உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றார்.

மனித உரிமை ஆர்வலரான கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்துக் கூறுகையில், இது அப்பட்டமான சிறார் உரிமை மீறலாகும். குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். அந்த இழப்பை எப்படி ஈடு கட்ட முடியும்.

கராத்தே, விழா என்ற பெயரில் இப்படிக் குழந்தைகளை விபரீதத்தில் ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது, கண்டனத்துக்குரிய செயல் இது. பெற்றோர்கள் சம்மதித்தார்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சம்மதித்தது என்று காரணம் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X