For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டாஸ்மாக்' மளிகை கடை-ராமதாஸ் யோசனை

By Staff
Google Oneindia Tamil News

Wine
திண்டிவனம்: விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாற்ற டாஸ்மாக் மதுக் கடைகளை எல்லாம் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் விற்பனைக் கூடங்களாக மாற்றுமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனத்தை அடுத்துள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

புதிதாக கட்டப்படும் தலைமைச் செயலகத்துக்கு ஓமந்தூரார் பெயர் வைக்கப்படும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். 1948ல் ஓமந்தூரார் தமிழக முதல்வராக இருக்கும்போதுதான் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. கட்டிடத்திற்கு ஓமந்தூரார் பெயர் வைப்பதால் மட்டும் பெருமை அல்ல.

அவருடைய வழியில், காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களை மது அரக்கனிடமிருந்து காப்பது அரசின் கடமை. மதுவிலக்கு முழுமையாக செயல்படுத்தப்படும் போதுதான் மக்களாட்சி முழுமை பெறும்.

மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று சொன்னால், கள்ளச் சாராயம் பெருகும் என்றும் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
நமது மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, விபத்துக்கள் ஆண்டுக்காண்டு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே குடிதான்.

கள்ளச் சாராயத்தால் மட்டும் மக்கள் மடியவில்லை. அரசு கொடுக்கும் நல்ல சாராயத்தாலும் மக்கள் மடிகிறார்கள்.
உயிரைக் குடிக்கும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் குஜராத் மாநிலத்தைப் போல இங்கும் சட்டத்தை கடுமையாக்கலாம்.

மதுக்கடைகளை மூடினால் அதில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்று முதல்வர் புதிதாக கேள்வி எழுப்புகிறார். இன்றைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே போவதால் ஏழை, எளியவர்கள் அல்லல்படுகிறார்கள். மதுக்கடைகளை எல்லாம் சில்லறை மளிகை கடைகளாகவும், காய்கறி விற்கும் கடைகளாகவும் மாற்றலாம்.

விலைவாசி உயர்விலிருந்து மக்களை காப்பாற்ற அத்தியாவசியப் பொருட்களை விற்கும் விற்பனைக் கூடங்களாக மதுக் கடைகளை மாற்றுங்கள். யாரையும் வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

இதை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை எதிர்த்தும் சமச்சீர் கல்விமுறையை அமல்படுத்தக்கோரியும் செப்டம்பர் 16ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தி வேலூரில் மாபெரும் மக்கள் பேரணி நடத்தப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்படும் இந்தப் பேரணிக்கு நானே தலைமை வகிப்பேன்.

மர்மமா இருக்குது...

திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே பெரும் மர்மமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகனிடமிருந்த பொதுப் பணித்துறை திடீரென்று பறிக்கப்பட்டுள்ளது. அந்த பெரும் துறையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தன்னால் கோப்புகளை கவனிக்க முடியவில்லை என்றும், சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றும் கூறி தன்னிடமிருந்த பல பொறுப்புகளை துணை முதல்வரிடம் ஒப்படைத்ததாக முதல்வர் அறிவித்தார்.

தன்னிடமிருந்த பொறுப்புக்களை கவனிக்க முடியவில்லை என்று கூறி துணை முதல்வரிடம் ஒப்படைத்தவர் இப்போது துரைமுருகனிடமிருந்து பறித்த துறையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதும், பிறகு பறிப்பதும் முதல்வருக்கு உள்ள அதிகாரம் என்று சொல்லாமல் இதற்கான காரணத்தை அவர் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிப் பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தடை விதிக்கும் வகையில் இம்மாதம் 26ம் தேதி மாநில அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?. சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ள அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை இது.

5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி இப்போதே வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரியானது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடப்பது உறுதி என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X