தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுக முடிவு தவறு: தா. பாண்டியன்
அம்பாசமுத்திரம்: இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக எடுத்த முடிவு தவறானது. அரசுக்கு எதிராக மக்களைத் திரட்ட அதிமுக தவறி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்த அரசியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் தா.பாண்டியன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக எடுத்த முடிவு தவறானது. ஜனநாயகத்தில் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்ட அதிமுக தவறி விட்டது.
ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. மக்களைச் சந்தித்து எங்கள் நிலையை எடுத்துக் கூறுவோம்
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, அரசின் போக்கைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவான போராட்டம் நடத்தும் என்றார் அவர்.