For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்கலை.கள் ஆய்வுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் - ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சந்திராயன் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று மாலை நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பட்டமளிப்பு சிறப்புரை நிகழ்த்தினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் சிறப்புரை வழங்கினார்.

தமிழகத்திற்கு சிறப்பான சேவையாற்றியதற்காக மு.க.ஸ்டாலினுக்கும், தனது இசைத் திறமையின் மூலம் இந்திய இசைத் துறைக்கு உலக அளவில் புகழ் தேடித் தந்தமைககாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சந்திராயன் திட்டத்தை சிறப்புற நிறைவேற்றி இந்தியாவுக்குப் பெருமைத் தேடிந்தமைக்காக மயில்சாமி அண்ணாதுரைக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

உலகளவில் தனி சிறப்பிடம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த டாக்டர் விருது மேலும், மேலும் என்னை அடக்கம் உடையவனாக ஆக்கட்டும் என்ற உறுதியை மேற்கொள்கிறேன்.

எனது உழைப்பு, முயற்சியிலும் நான் மேலும் உற்சாகம் பெற, நான் கொண்ட கொள்கைகளில் மேலும் பற்றினை பெருக்க இந்த சிறப்பு எனக்கு தரப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

கல்வி முறையும், அதன் கட்டமைப்பும் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. பாட நூல்களை படித்து அறிவதுதான் படிப்பு என்ற நிலை மாறி, எதிர்காலம் விடுக்க எண்ணியுள்ள வினாக்களை உணர்ந்து, விடை காண கூடிய விவேகத்தை உருவாக்கும் நிலை கல்வி முறையில் வந்துள்ளது.

காலத்தின் தேவைக்கேற்ப உரிய மாற்றங்களை புகுத்தினால்தான் புதுமை படைக்கும் திறன்மிக்க மாணவர்கள் கிடைப்பார்கள். உயர் கல்வி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.

உயர் கல்வி மூலமாகதான், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு ஆகியவை முடியும். அதன்மூலம், சமூக மாற்றங்களை அடைய முடியும்.

கல்வி முறையில் மாற்றம், ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவில் கடந்த 1947ல் 20 பல்கலைக்கழகங்கள் இருந்த நிலை மாறி, இன்று 450 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

500 கல்லூரிகள் என்பது 24 ஆயிரம் கல்லூரிகளாக பெருகியுள்ளன. ஐஐடி, ஐஐஎம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, விண்வெளி ஆய்வு, அணுசக்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய உயர் கல்வியின் பங்கு மகத்தானது.

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு 10 சதவீதம் இருந்தது, இரண்டரை சதவீதமாக குறைந்துள்ளது. சீனாவின் பங்கு 5ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆராய்ச்சி என்பது சில நிறுவனங்களின் மட்டுமே உள்ளது. எனவே, பொருளாதாரத்தில் இந்தியா முதன்மை பெற பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கல்விக்காக 'எஜுசாட்" என்ற செயற்கை கோளை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணில் செலுத்தி இருப்பது அரிய சாதனை. இந்த பல்கலைக்கழகம் மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனைகளை குவிக்க வேண்டும். அரசியல், சமுதாய சீர்திருத்தத்தில் அண்ணா புதிய வரலாறு படைத்தது போல இந்த பல்கலைக்கழகமும் புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,

சந்திராயன் ஏவப்பட்டதும் என்னை முதலில் வாழ்த்திய முதல்வர் கருணாநிதி, என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் இந்திய நாட்டுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவரது பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். சமுதாயம், இசை, தொழில்நுட்பம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து பட்டம் வழங்குவது சிறப்பான செயல் என்றார்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா, மருமகன் சபரீசன் உள்ளிட்டோரும், ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X