For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோப் டெஸ்ட்-இந்தியாவுக்காக விதியை தளர்த்த 'வாடா' மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: கிரிக்கெட் வீரர்களுக்கான ஊக்க மருந்து சோதனை தொடர்பான நடைமுறை விதிகளை இந்திய வீரர்களுக்காக மாற்ற முடியாது என்று சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் (வாடா) கூறியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக மோதல் வலுத்துள்ளது.

விளையாட்டு போட்டி களின் போது வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்துகிறார்கள். இதை கட்டுப்படுத்த ஊக்க மருந்து தடுப்பு மையம் (டபிள்யூ.ஏ.டி.ஏ) அமைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டு வீரர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறை காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய விதி முறைப்படி ஒவ்வொரு வீரரும் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும்.

தாங்கள் வசிக்கும் இடம், பயிற்சி பெறும் இடம் மற்றும் அன்றாட நிகழ்வு குறித்து தெரிவிப்பது அவசியம். அடுத்த 3 மாத காலத்துக்கு தங்களது அட்டவணையை தெரிவிக்க வேண்டும்.

இந்த விதி கடந்த 31-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியப்படாது, இதனால் தங்களது சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் ஊக்க மருந்து தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர். ஆனால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இதையேற்று கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு மும்பையில் இன்று கூடியது. வீரர்கள் தரப்பில் டோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் போதை தடுப்பு மையத்தின் புதிய விதிமுறைகளை நிராகரிப்பது, வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சசாங்க் மனோகர் கூறுகையில், உலக போதை தடுப்பு மையத்தின் விதி முறைகளை மாற்றி அமைப்பது அவசியமாகிறது. போதை மருந்து சோதனையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சில விதிமுறைகளை மட்டும் எதிர்க்கிறோம்.

எங்கே இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதியை வீரர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். வீரர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது.

மேலும் இது பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும். இந்திய வீரர்களில் பலருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. எனவே வீரர்களின் பாதுகாப்பு முக்கிமயானது.

இது தொடர்பாக ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதுவோம் என்றார்.

இந்த நிலையில் இந்திய வீரர்களுக்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என்று சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைத்தான் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வந்து உள்ளோம். இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தனிநபர் விளையாட்டு, அணி விளையாட்டு என அதற்கு தகுந்த மாதிரி விதிமுறைகளை உருவாக்கி உள்ளோம். அனைத்து ஒலிம்பிக் சங்கங்கள், சர்வதேச ஒலிம்பிக் சங்கங்களும் இதை ஏற்றுக்கொண்டு உள்ளன.

சர்வதேச சூழ்நிலைக்கு ஏற்றார்போல வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ஒரு குறிப்பிட்ட அணிக்காக எப்படி மாற்ற முடியும் என்றார் அவர்.

இதனால் இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

செரீனா வில்லியம்ஸ், நடாலும் எதிர்ப்பு..

இதற்கிடையே வாடா விதிமுறைக்கு டென்னிஸ் நட்சத்திரங்கலான செரீனா வில்லியம்ஸ், ரபேல் நடால் ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடால் கூறுகையில், நான் ஒரு முறை எனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் குளிக்கச் சென்றேன். அப்போது எனது தாயார் என்னை அழைத்தார்.

வாடாவிலிருந்து ஊக்க மருந்து சோதனைக்காக அதிகாரிகள் வந்துள்ளதாக கூறினார். அதுதான் நான் ஓய்வாக இருக்கும் நேரம். ஆனால் வாடா விதிமுறைப்படி நான் சோதனைக்கு உட்பட்டாக வேண்டும்.

ஆனால் எனது ஓய்வு நேரத்தை அவர்களுக்காக பலி கொடுக்க வேண்டும் என்பது சரியல்ல. விளையாட்டில் ஈடுபடுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வளவு பெரிய அவஸ்தையா என்றார் கோபமாக.

செரீனா வில்லியம்ஸ் கூறுகையில் இப்படியெல்லாம் செய்வது ரொம்ப ஓவர். இது எங்களது சுதந்திரத்தில் தலையிடும் செயல். எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து சோதனை செய்யலாம் என்பதை ஏற்க முடியாது என்றார்.

இருப்பினும் வேறு வழியில்லாமல் தாங்களும் வாடா விதிமுறைக்கு உட்படுவதாக கூறி கையெழுத்துப் போட்டுள்ளதாக செரீனாவும், நடாலும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ரோஜர் பெடடரரும் கூட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் விளையாட்டில் திறமைக்கு மட்டுமே மதிப்பு இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதற்கு தான் ஒப்புக் கொள்வதாக அவர் கூறுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X