For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 1.41 லட்சம் கோடி வரி பாக்கி - டாப் 100 நிறுவனங்களில் ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ்!

By Staff
Google Oneindia Tamil News

Top 100 tax defaulters owe Rs 1.41 lakh crore
டெல்லி: நாட்டின் முன்னணி 100 வரி பாக்கி வைத்துள்ளோரின் பட்டியல் ராஜ்யசபாவில் வெளியிடப்பட்டது. இந்த 100 நிறுவனங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட ரூ. 1.41 லட்சம் கோடி அளவுக்கு வரி கட்டாமல் உள்ளன.

இந்த பட்டியலில் ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சஹாரா இந்தியா ஆகியவையும் அடக்கம்.

நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கி ஸ்டேட் பாங்க் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே மிகப் பெரிய அளவில் வரி பாக்கி வைத்திருக்கிறது.

இதுகுறித்து ராஜ்யசபாவில் தெரிவித்த நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், இந்த 100 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வரி பாக்கி அளவு ரூ. 1.41 லட்சம் கோடியாகும். இது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் அரசு அமல்படுத்தி வரும் திட்டத்துக்கான நிதியை விட 3 மடங்கு அதிகமாகும்.

கட்டப்படாமல் உள்ள நிலுவைப் பணத்தை வசூலிக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரி பாக்கி வைத்துள்ளோரின் பட்டியலில் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி கான் முதலிடத்தில் உள்ளார். இவர் ரூ. 50,000 கோடி வரி கட்டாமல் பாக்கி வைத்துள்ளார்.

மறைந்த ஷேர் புரோக்கர் ஹர்ஷத் மேத்தா மற்றும் அவரது பார்ட்னர்கள் மற்றும் இதர புரோக்கர்களான நரோத்தம், ஹிதேன் தலால் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஸ்டேட் வங்கியின் வரி பாக்கி ரூ. 333.6 கோடியாகும். டாட்டா மோட்டார்ஸ் ரூ. 206.5 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ. 210.3 கோடியும் வரி பாக்கி வைத்துள்ளன.

சஹாரா இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரதோ ராய் ரூ. 230 கோடியை கட்டாமல் உள்ளார்.

பி.எஸ்.என்.எல்லின் வரி பாக்கி ரூ. 2,417 கோடியாகும். வி.எஸ்.என்.எல்லின் வரி பாக்கி ரூ. 505.5 கோடியாகும்.

ஆரக்கிள் நிறுவனம் ரூ.558 கோடியும், கோகோ கோலா நிறுவனம் ரூ. 600 கோடியும், ரோலக்ஸ் நிறுவனம் ரூ. 558 கோடியும், ரிலையன்ஸ் எனர்ஜி ரூ. 176 கோடியும் வரி பாக்கி வைத்துள்ளன.

நோக்கியா, தைவூ மோட்டார்ஸ், டாடா இன்டஸ்ட்ரீஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ஐபிஎம் ஆகியவையும் வரி ஏய்ப்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X