For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அச்சுறுத்தல்களால் துவளாமல் தொடர்ந்து பயணிப்போம் - எல்டிடிஇ தளபதி ராம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன் நயவஞ்சகமான முறையில் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், தமிழ் மக்களையும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதிகளில் ஒருவரான ராம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராம் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரும், எமது விடுதலைப் போராட்டத்திற்கான அடுத்த கட்ட அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான செல்வராசா பத்மநாதன் அவர்களை இலங்கை அரசு கடந்த 05-08-09 அன்று மலேசியாவிலிருந்து பலவந்தமாக கடத்திச் சென்றது, உலகத் தமிழ் மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இறுதிப்போர் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்கள் மேல் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக இவ்வருடம் மே மாதப் பகுதியில் வன்னியில் இருந்த ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்றழிக்கும் நோக்கோடு தாக்குதலைத் தீவிரப்படுத்திய போது, அம்மக்களைப் காக்கும் பெருட்டு எமது ஆயுதங்களை மெளனிப்பதாக அறிவித்திருந்தோம்.

இதனை நாங்கள் சரிவரக் கடைப்பிடித்து வருகின்றோம் என்பதனை சர்வதேசம் சமூகம் நன்கறியும். தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான - நியாயமான - அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அடுத்த கட்டப் போராட்டத்தை அரசியல் - ராஜதந்திர வழிகள் ஊடாக முன்னகர்த்துவதற்கு பல நாடுகளிடமிருந்து வரவேற்பும் சாதகமான அறிகுறிகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பதும் எம்மையும் எமது மக்களையும் ஆழ்ந்த துயரத்திற்குள் உள்ளாகியுள்ளது.

ஏறக்குறைய மூன்றரை லட்சத்திற்குக்கும் மேலான மக்களும் போராளிகளும் உலக நியதிகளுக்கு மாறாக சிறையிலடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பதை உலகம் நன்கு அறியும்.

அவர்களை மீட்டெடுப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்குரிய பேச்சுவார்த்தைகளில் பலதரப்புடனும் செல்வராசா பத்மநாதன் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இந்தக் கைது அரங்கேறியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக் கண்டிக்கின்றோம்.

அரசியல், அரசியல் ராஜதந்திர ரீதியில் விடுதலைக்கான அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு வந்த பின்னரும் எங்களது போராட்டத்தை நசுக்கி ஒடுக்கிவிடும் நோக்கில் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளாகிய எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் கவலையையும் வேதனையையும் தருகின்றன.

இதுவரை காலமும் '' பயங்கரவாதிகள் '' என்ற சாயத்தை பூசி எமது மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்தது இலங்கை அரசு.

ஆனால், தற்போது - நாங்கள் ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி வைத்திருக்கும் புதிய சூழலில் நாங்கள் எடுத்துவரும் அரசியல் முன்னகர்வுகளுக்கு உலகம் உறுதுணையாக இருக்கும் என்று எமது மக்களும் நாமும் நம்பியிருந்தோம்.

செல்வராசா பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பாக அனைத்துலக சமூகம் மனிதாபிமான அணுகு முறையும், பக்கச் சார்பற்ற விசாரணைகளும் கடைப்பிடிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கின்றோம்.

செல்வராசா பத்மநாதன் அவர்களின் பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பையும் உத்தரவாதத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகளாகிய நாம் இழப்புக்களையும் பின்னடைவுகளையும் கண்டு துவண்டு போய்விடப் போவதில்லை. எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது எமது மக்களின் பேராதரவுடன் எமது லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X