For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல்: தமிழக அரசு மெத்தனம்-ஜெ கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக மெத்தனமாக உள்ளதாகவும், இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பின் கொடநாடு எஸ்டேட்டில் மாதக்கணக்கில் தங்கி ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களாக உலகையே உலுக்கிக் கொண்டு வரும் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது வரை 20க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் நோய் ஒரு பயங்கர தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட உடனேயே, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தவும், இந்த நோயை கண்டறியக்கூடிய பரிசோதனை நிலையங்களை ஆங்காங்கே அமைக்கவும், இந்த நோயைத்தடுக்கத் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும். மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக, இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன் இந்த நோய்க்கு பலியானதன் காரணமாகவும், தமிழகத்தில் மேலும் சிலருக்கு இந்த நோய் பரவியுள்ளதன் காரணமாகவும் தமிழக மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் முதன் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் ஆரம்பித்தது. இருப்பினும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள், லாரிகள் மூலம் சரக்குகளை ஏற்றி வரும் ஓட்டுநர்கள், கிளீனர்கள் ஆகியோர் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் தமிழகத்திற்கு வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த நோய் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊடுருவிய உடனேயே அங்கிருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் இந்த நோய் தமிழ்நாட்டில் பரவியிருக்க வாய்ப்பில்லை. இதை திமுக அரசு செய்யாததன் காரணமாக தற்போது தமிழக மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த தொற்று நோய் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த பிறகும், இந்த நோய் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளக்கூடிய பரிசோதனை நிலையங்களை ஆங்காங்கே ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருப்பவர்கள் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமானால் சென்னையில் உள்ள கிங் ஆய்வுக்கூடத்திற்கு வரவேண்டிய சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது.

இதன் காரணமாக கிங் ஆய்வுக் கூடத்தில் கூட்டம் அலைமோதுகிறது. பரிசோதனைக்கு வரும் மக்களை சமாளிக்கும் அளவுக்கு கிங் ஆய்வு நிலையத்தில் ஊழியர்கள் இல்லை என்ற நிலைமையும் காணப்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் பல மணி நேரம் அச்சத்துடன் வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இது மட்டும் அல்லாமல், மேற்படி நிலையத்தில் பரிசோதனைக்கு வரும் அனைவருக்கும் முகக் கவசம் கூட வழங்க இயலாத துர்ப்பாக்கிய நிலைமைதான் நிலவுகிறது. இதனால், இந்த நோய் இல்லாதவர்களுக்குக் கூட நோய் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்குவது நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முதல்படி.

இதைக்கூட திமுக அரசால் வழங்க முடியவில்லை. இது தவிர, சில மருத்துவமனைகளில் முகக் கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தாமததாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. திமுக அரசின் செயல்பாடுகள் காரணமாக மக்களிடையே அச்ச உணர்வு அதிகரித்துள்ளது.

எனவே பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, தமிழக மக்களிடையே எழுந்துள்ள அச்ச உணர்வை போக்காத திமுக அரசைக் கண்டித்தும், ஆங்காங்கே பரிசோதனை நிலையங்களை அமைக்கவும், மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் தட்டுப்பாடின்றி எளிதில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், தென் சென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 16ம் தேதி காலை 10 மணி அளவில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச்செயலாளர் பா. வளர்மதி தலைமையிலும், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X