For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர் ஆதரவு கூட்டம்-ராமதாஸ், வைகோ கைதா?

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரகடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள வைகோ, ராமதாஸ், நெடுமாறன் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேற்று கூட அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடத்திய பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் முழுவதும் புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும், பேனர்களையும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பத்திரிகைகள் மூலமாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி களில் பிரசுரித்தல்/ காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ந் தேதி சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பிரகடன வெளியீட்டு பொதுக்கூட்டம் அதே அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை கூட்டத்தில் வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் நிச்சயம் புலிகள் ஆதரவு கோஷங்களை எழுப்புவது, கொடிகளை தாங்கி நிற்பது, பிரபாகரன் படங்களை தாங்கி நிற்பது ஆகிய செயல்கள் நடைபெறக் கூடும் என அரசு எதிர்பார்க்கிறது.

அப்படி நடந்தால் தற்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி கலந்து கொள்ளும் தலைவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தரப்பில் கூறுகையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும், 20ந் தேதி பொதுக்கூட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

பெரியார் தி.க. இன்று கூட்டம்...

இதற்கிடையே, கோவையில் ராணுவ வாகனங்களைத் தாக்கிய வழக்கில் கைதாகி, விடுதலையாகியுள்ள பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திலும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவோரைக் கைது செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X