For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழீழ அரசை அமைக்க உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் - ருத்ரகுமாரன்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்: ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு திட்ட உருவாக்கச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்கோள் விடுத்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குழுவின் சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே - இங்கிலாந்து தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவிஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புக்கள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளையில், உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புக்கள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு இலங்கை அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள ராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்திவிடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது ராணுவக் கொடும் கரங்களை இலங்கையின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

இலங்கை அரசின் ராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ வெளிநாடுகளிலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த ஊராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளோம்.

நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொண்டிருக்கும்.

ஒவ்வாரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.

இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

என்று ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X